கட்டப்பாவ காணோம் – விமர்சனம்


நாயையும் பேயையும் துணைக்கு வைத்துக்கொண்டு வெற்றிகளை கொடுத்த சிபிராஜூக்கு இந்தப்படத்தில் வாஸ்து மீனை கோர்த்துவிட்டுள்ளார் அறிமுக இயக்குனர் மணி சேயோன்..

பண பலமும், படை பலமும் நிரம்பிய தாதா மைம் கோபி வளர்த்து வரும் வாஸ்து மீனை அவர் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்த யோகி பாபு திருடிப்போகிறார். ஆனால் அந்த மீன் அப்படி இப்படி என பலர் கை மாறி, சிபியின் தோழியான சாந்தினி மூலமாக புது மண தம்பதியராக மாறிய சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு வருகிறது.

அது காணமல் போனது முதல் மிகப்பெரிய இழப்புகளுக்கு மைம் கோபி ஆளாகும் அதே நேரத்தில் அதிர்ஷ்ட மீனான அது வந்த நேரம் அன்று வரை, பேட் லக் பாண்டியாக திரியும் சிபிராஜூக்கு அதிர்ஷ்ட நாயகனாக மாற்றியதா என்பதுதான் மீதிக்கதை.

பேட் லக்’ பாண்டியாக சிபிராஜ், கச்சிதம். ஒரு காட்சியில், ஸ்பூனை வளைக்கும் ஐஸ்வர்யாவைப் பார்த்து “நல்ல வேளை, நைட் ரூமுக்குள்ள போகலை….” என்பது உள்ளிட்ட விரசகாட்சி களில் சிபி, அசால்ட்டாய நடித்திருப்பது யூத் தை கவரும் என படக்குழுவினர் கருதியிருப்பது அபத்தம்.

ஐஸ்வர்யா ராஜேஷிடம் நடிப்பு மட்டுமல்லாமல் கிளாமரும் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது.. தண்ணியடித்து விட்டு சிபிராஜிடம் ஜாலியாக சலம்புவது, பெண் பார்க்க இன்டர்வியூ எடுக்கும் அவரது அப்பாவை கலாய்ப்பது, வீட்டிற்குள் புகுந்த ரவுடி கும்பலுக்கு சோறாக்கி போடுவது என படத்தில் இவருக்கு நிறைய முகங்கள்..

கட்டப்பாவுக்கு உண்மையான சொந்தக்காரன் நான், அப்படினா நான் தானே ஹீரோ, என்று அப்பாவியாக கேட்கும் மைம் கோபி, தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார். வாஸ்து மீனை திருடிவிட்டு வாளி தேடிப்போகும் பெயிண்டர் யோகிபாபு, வாஸ்து மீன் வியாபாரம் செய்யும் லிவிங்ஸ்டன். ஆறுவிரல் டிடெக்டிவாக வரும் திண்டுக்கல் சரவணன் என ஒரு குரூப் காமெடியில் களைகட்ட வைக்கிறார்கள்.. சிபிராஜை மிரட்டி வீட்டிற்குள் நுழையும் திருமுருகன், காளி வெங்கட், ‘எமன்’ ஜெயக்குமார் இவர்களின் ரூட் மிரட்டலும் காமெடியும் கலந்த ஜூகல்பந்தி.

படத்தின் கதாபாத்திரங்கள் அனைவருக்குமே மீன்களின் பெயர் வருவது போல பெயர் வைத்திருப்பது புதுமை.. காமெடி என்ற பெயரில் படம் முழுவதுமே பயங்கரமான டபுள் மீனிங் வசனங்களை இயக்குநர் மணி சேயோன் பயன்படுத்தியிருக்கிறார். இளசுகள் நமுட்டு சிரிப்புடன் ரசித்தாலும் குடும்ப பெண்கள் முகம் சுழிப்பார்களே ஐயா. நிறைய லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் எல்லாமே காமெடி என்பதால் ரசித்துவிட்டு போகலாம் தான்..