கவண் – விமர்சனம்


சேனல்களுக்கு இடையே நடைபெற்று வரும் டி.ஆர்.பி யுத்தத்தை, அதனால் மீறப்படும் செய்தி தர்மத்தை ‘கவண்’ மூலம் பளிச்சென மீண்டும் ஒருமுறை மீடியா பின்னணியில் படம் பிடித்து காட்ட முயற்சித்துள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். அது ஒர்க் அவுட் ஆகி இருக்கிறதா..?

தனது விருப்பப்படி பிரபல சேனலில் வேளைக்கு சேர்கிறார் விஜய்சேதுபதி, காதலி மடோனா, நண்பன் ஜெகன் ஆகியோருடன் சேர்ந்து தனது நிகழ்ச்சி மூலம் சமூகத்துக்கு ஏதாவது பயன்படும் விதமாக செய்ய நினைக்கிறார்.. ஆனால் டி.ஆர்.பி ரேட்டிங் மற்றும் பணத்துக்காக நிறம் மாறக்கூடிய சேனல் முதலாளி ஆகாஷ்தீப் ஆளுங்கட்சியின் மோசமான அரசியல்வாதியான போஸ்வெங்கட்டிற்கு சாதகமாக நிகழ்ச்சியை நடத்த நிர்ப்பந்திக்கிறார்.

மறுக்கும் விஜய்சேதுபதி டீமை, வேலையை விட்டு நீக்குவதுடன் வேறு எந்த சேனலிலும் வேலைக்கு சேரமுடியாதபடியும் செய்கிறார்.. சின்னதாக சேனல் ஒன்றை நடத்திவரும் டி.ராஜேந்தர் இவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறார்… போஸ்வெங்கட்டின் அநியாயங்களை இந்த சேனல் மூலம் விஜய்சேதுபதி டீம் மீண்டும் தூசிதட்ட, சேனலின் டி.ஆர்.பி யுத்தகளம் பிடிக்கிறது. இந்த சேனல் யுத்தத்தில் யாருடைய கை ஓங்கியது என்பது மீதிக்கதை.

புதுப்புது உடல்மொழி, வசன உச்சரிப்பு என படத்தின் கேரக்டருக்கு ஏற்ப பச்சோந்தியாக நிறம் மாறும் விஜய்சேதுபதி துறுதுறு மீடியா நிருபராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.. கூடவே அவரது வழக்கமான நக்கலும் நையாண்டியும் அவரது கேரக்டருக்கு இன்னும் எக்ஸ்ட்ரா கிளாப்ஸ் அள்ள வைக்கிறது.
ஏற்கனவே காதலில் கடந்துபோகும் படத்திலேயே லவ் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனா ஜோடி என்பதால் விஜய்சேதுபதிக்கு ஜாடிக்கேத்த மூடியாக, அழகு குதிரையாக, மீடியா பர்சனாலிட்டியாக பர்ஸ்ட் கிளாஸில் பாஸாகிறார் மடோனா செபாஸ்டியன்..

படத்தின் இன்னொரு கதாநாயகன் என சொல்லும் விதமாக தனது மேனரிசங்கள் எதையும் மாற்றிக்கொள்ளாமல், தன்னை அப்டேட் செய்துகொண்டு நடித்திருக்கிறார் டி.ராஜேந்தர்.. நேர்மையை விலைபேச முடியாத அந்த மயில்வாகனன் கதாபாத்திரத்தில் இடைவேளைக்குப்பின் அவரது அன்டர்பிளே கனகச்சிதம்.. மீட்டருக்கு அதிகமாக பேசும் அந்த அடுக்கு மொழி வசனங்களில் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கத்திரி போட்டிருக்கலாம்.

‘அயன்’ வில்லன் ஆகாஷ்தீப் இதில் சேனல் அதிபராக டீசன்டான வில்லத்தனம் காட்டியிருக்கிறார் என்றாளும் அதில் படு செயற்கைத்தனம் இழையோடுகிறது., அரசியல்வாதியாக வரும் போஸ்வெங்கட்டோ அரை வழுக்கையுடன் எந்நேரமும் குடித்துக்கொண்டு மூன்றாந்தர ரவுடி ரேஞ்சுக்கு இறங்கியுள்ளார் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஒரு அரசியல்வாதி எல்லா இடங்களிலும் குடித்துக்கொண்டேவா இருப்பார்..? அவரது நடவடிக்கைகளுக்கு ஒரு மீடியா இந்த அளவு துணைபோகுமா என்ன..? போங்க பாஸ்..

சமூகத்திற்கு எதிரான தீய விஷயங்களை தட்டிக்கேட்கும் கனமான கதாபாத்திரம் விக்ராந்திற்கு.. நேர்த்தியாக செய்திருக்கிறார்.. ஜெகனின் அளந்தெடுத்த காமெடி சரியாக ஒர்க் அவுட் ஆகிறது…. சூழ்நிலைக்கைதியான சேனல் செய்தி ஆசிரியராக பாண்டியராஜனுக்கும் பொருத்தமான கேரக்டர். பவர்ஸ்டாரின் கெஸ்ட் எண்ட்ரியும் அதில் அவர் ரசிகனுக்கு கொடுக்கும் சர்ப்ரைசும் செம. சேனல் முதலாளியின் வலதுகையாக இருந்துகொண்டு சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை ஏற்றுவதற்காக தகிடுதத்தம் செய்யும் அந்த பெண்மணிக்கு ஒரு சபாஷ் பொக்கே கொடுக்கலாம். சீப் ரிப்போர்ட்டராக நரித்தனமாக வேலைகள் செய்யும் கிருஷ்ணாவும் செமையாக ஸ்கோர் செய்துள்ளார்..

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் அளவாக நிறுத்தப்பட்டது ஒருபக்கம் சந்தோசம் என்றால் பின்னணி இசையில் பெரிய அளவில் ஈர்க்க முடியாமல் தடுமாறி இருக்கிறார். அபிநந்தன் ராமானுஜனின் ஒளிப்பதிவு நிச்சயம் அவருக்கு சவாலான பணியாக இருந்திருப்பது மீடியா சம்பந்தப்பட்ட காட்சிகளில் நன்றாகவே தெரிகிறது..

2மணி 40 நிமிடம் வரை இந்தப்படத்தை வளரவிட்டதற்காக கத்திரிக்கு நிற்காமல் வேலைகொடுத்த எடிட்டர் ஆண்டனியை செல்லமாக கண்டிக்கிறோம்.. விக்ராந்தை தீவிரவாதியாக சித்தரித்து நடக்கும் தடுத்தல் வேட்டையும் அதற்கான விளக்கத்தையும் ஜஸ்ட் லைக் 3 நிமிடங்களில் முடிக்க வெண்டியதி 30 நிமிடங்கள் இழுத்திருக்க வேண்டாமே…

படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார் கே.வி.ஆனந்த் என்றாலும் ஏற்கனவே அவர் மீடியா பின்னணியில் செய்த ‘கோ’ படத்தின் சில ஜெராக்ஸ் பேப்பர்களும் ஸ்கிரிப்ட்தில் புகுந்துவிட்டதை அவாரளும் கதாசிரியர்கள் சுபாவாலும் தடுக்க முடியவில்லை.. அதிலும் விக்ராந்த் என்கவுண்டர் நாடகம் செம போங்கு ஆட்டம்.

மக்களின் சார்பாக தப்பை தட்டிக்கேட்க வேண்டிய மீடியாவுக்குள் கார்ப்பரேட் அரசியல் புகுந்தால் என்ன ஆகும் என்பதை காட்சிக்கு காட்சி நினைவூட்டல் செய்வதோடு நடப்பில் உள்ள சில மீடியாக்களின் முகத்திரையையும் கிழித்துள்ளது இந்த கவண்..

நாங்க ரொம்பவெல்லாம் லாஜிக் பார்க்கமாட்டோம் பாஸ் என்கிறீர்களா..? அப்படியானால் ‘கவண்’ உங்களுக்கு நூறு சதவீத பொழுதுபோக்குக்கு (மட்டும்) கியாரண்டி தரும்.