இணையதளம் மூலம் தகவல்களைத் திருடும் இரண்டு ஹேக்கர்ஸ்களுக்குள் நடக்கும் யுத்தம்தான் ‘கீ’
ஜாலியாக பொழுதுபோக்குக்காக அடுத்தவர்களின் தகவல்களை ஹேக் செய்து குறும்புத்தனம் செய்பவர் ஜீவா. இவரது காதலி நிக்கி கல்ராணி. ஜீவா ஹேக் செய்யும்போது அதன்மூலம் அவருக்கு நட்பாகிறார் அனைகா சோட்டி.
எதிர்பாராதவிதமாக தன்னை யாரோ ஹேக் செய்வதாக கூறி அவர்களை கண்டுபிடித்து தர சொல்கிறார் அனைகா. பெரிய அளவில் தவறுகள் செய்வதை தொழிலாக வைத்திருக்கும் ஹேக்கர் கோவிந்த் பத்மசூர்யா தான் அந்த நபர் என ஜீவாவுக்கு தெரியவருகிறது.
ஜீவா தன்னை கண்டுபிடித்து விட்டார் என்பது கோவிந்த் பத்மசூர்யாவுக்கும் தெரியவருகிறது. இதன் பிறகு இவர்கள் இருவருக்கும் நடக்கும் யார் பெரியவர் என்கிற ஆடுபுலி ஆட்டம் தான் மீதிக்கதை.
கல்லூரி மாணவராக ஹேக்கர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார் ஜீவா. வழக்கமான பாணியில் இருந்து விலகி அராத்து செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் ஆச்சர்யப்படுத்துகிறார் நிக்கி கல்ராணி..
ஆர்ஜே.பாலாஜி காமெடி சீரியஸாக செல்லும் கதையில் ஆங்காங்கே சிரிப்பு மழை பெய்ய வைக்கிறது. வில்லனாக மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூர்யா.. முகம் மிரட்டலாக இருந்தாலும் நடிப்பு மிரட்ட மறுக்கிறது.
அறிமுக இயக்குனர் காளீஸ் ஹேக்கிங் சமாச்சாரங்களை வைத்து சுவாரஸ்யம் கூட்ட முயற்சித்திருக்கிறார் ஆனால் வலுவான கதையும் திரைக்கதையும் ஒத்துழைக்காததால் படம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்க தவறி விடுகிறது