இன்று பெருவாரியான மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக இருக்கும் தண்ணீருக்காக இரு மாநிலங்களுக்குள் நடக்கும் அரசியல் யுத்தமும், அதை தைரியமாக எதிர்கொண்ட ஒரு பெண்மணியின் போராட்டமும் தான் இந்த கேணி படத்தின் கதை.
கணவர் இறந்தபின் கேரளாவில் இருந்து தமிழக கேரள எல்லையில் உள்ள தனது சொந்த ஊரான புளியன்மலைக்கு வருகிறார் ஜெயப்ரதா. அங்கே தனக்கு சொந்தமான இடம் இரண்டு மாநில எல்லைகளுக்குள்ளும் பரவி இருப்பதால், அவரது நிலத்தில் கேரளா பக்கம் உள்ள கிணற்றில் இருக்கும் தண்ணீரை, தமிழ்நாட்டு பக்கம் பஞ்சத்தால் தவிக்கும் மக்களுக்கு கொடுக்க கூடாது என உத்தரவு போட்டு வைத்திருப்பது தெரிய வருகிறது.
தன் கண்ணெதிரே கிராம மக்கள் தண்ணீருக்காக துடிப்பதையும், தனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீர் இருந்தும், தருவதற்கு தனக்கு தாராள மனது இருந்தும் அதை செயல்படுத்த முடியாமல் மோசமான அரசியல் குறுக்கிடுகிறது. உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் பார்த்திபன் மற்றும் கலெக்டர் ரேவதி ஒத்துழைப்புடன் போராட்டத்தில் இறங்குகிறார் ஜெயப்ரதா.. முடிவு என்ன ஆனது..?.
ஜெயப்ரதா தான் படத்தின் முக்கிய கேரக்டர். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் பார்த்த ஜெயப்ரதாவா இவர்? முகத்தில் வயது தெரிகிறது. இருப்பினும் அவரது நடிப்பில் இன்னும் இளமை. கிணற்றை அடைய அவர் நடத்தும் போராட்டங்கள், அதனால் அவர் அடையும் துன்பங்கள் ஆகிய காட்சிகளில் நடிப்பு ஓகே
நாசர், பார்த்திபன், ரேவதி, ரேகா, எம்.எஸ்.பாஸ்கர், அனுஹாசன், தலைவாசல் விஜய், ஆகியோர் தங்கள் கேரக்டர்களை சரியாக புரிந்து நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையில் எஸ்பிபி, ஜேசுதாஸ் பாடும் அய்யாச்சாமி பாடல் அருமை. தமிழகம், கேரளாவுக்கு இடையே இருக்கும் தண்ணீர் பிரச்சனையை ஒரு கிராமத்தின் பிரச்சனையாக காட்டி அதன்மூலம் பிரச்சனையின் உண்மைத்தன்மை என்ன என்பதையும், இதற்கான தீர்வையும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் எம்.ஏ.நிஷாத்.
குறிப்பாக தமிழர்கள், மலையாளிகள் இருவரையும் சரியாக பேலன்ஸ் செய்திருப்பதுடன், ஒருபடி மேலே போய் அரசியல் லாபம் தேடும் சில மலையாளிகளின் பக்கம் தவறு இருப்பதையும் குத்திக்காட்டியுள்ளார் இந்த மலையாள இயக்குனர்.. அதற்காகவே சபாஷ் போடலாம் இவருக்கு.