கொடி – விமர்சனம்


ஒரு கிராமத்தின் இயற்கை வளம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு தீங்கு செய்யும் ஒரு தொழிற்சாலையை மையப்படுத்திய அரசியல் கதைதான் இந்த ‘கொடி’. இதற்குள் அரசியல் மோகம் ஒரு அழகான காதலை எப்படி சின்னாபின்னப்படுத்துகிறது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்..

அரசியல்வாதியாக ஜொலிக்க விரும்பினாலும், ஒரு அபாயகரமான தொழிற்சாலை தன் கிராமத்தில் அமைவதை தடுப்பதற்காக, ஒரு தொண்டனாக தனது உயிரை மாய்த்துக்கொள்கிறார் கருணாஸ். அவருக்கு கொடி மற்றும் அன்பு என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் ட்வின்ஸ்.. கொடி தந்தையைப் போலவே அரசியலில் கால் வைக்கிறார். ஆனால், அன்பு ஆசிரியர் தொழிலில் நுழைகிறார்.

எதிர்க்கட்சியில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த பெண் அரசியல்வாதியான த்ரிஷாவுடன் சிறுவயது முதலே கொடிக்கு காதல்.. அன்புவோ, அனுபமாவுடன் காதலில் விழுகிறார். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல், எதற்காக தங்களின் தந்தை உயிரிழந்தாரோ, அந்த தொழிற்சாலையின் கழிவுகள் அகற்றப்படாமல் அங்கேயே இருப்பதும், அதனால் அந்த ஊர் காரர்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாவதும் தெரியவருகிறது. ஆனால் அந்த கழிவுகள் அகற்றப்பட்டு விட்டது போல், கொடி இணைந்திருக்கும் கட்சியின் உதவியுடன், கணக்கு காட்டப்பட்டுள்ளது என்பதை அறிகிறார்கள் சகோதரர்கள் இருவரும்.

இதைப்பற்றி கொடி தன் கட்சியின் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் முறையிடுகிறார். ஆனால், அவரோ, தனுஷை சமாதானப்படுத்தி, உள்ளாட்சித் தேர்தலில், அவரது காதலியான எதிர்க்கட்சி த்ரிஷாவை எதிர்த்துப் போட்டியிட சொல்கிறார்கள். கொடி, தேர்தலில் த்ரிஷாவை வென்றாரா? அவர் காதலும், தொழிற்சாலையும் என்ன ஆனது? – பதில் காண திரையங்கம் உங்களை அழைக்கிறது.

இயக்குநர் துரை செந்தில்குமார், படத்தை கலகலப்பாகவும், வணிகரீதியில் வெற்றிபெறத்தக்கதாகவும் கொண்டு செல்ல முயற்சித்திருப்பதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். முதன்முறை என்றாலும் தனுஷ் தனது இரட்டை கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்.

கொடி என்ற அரசியல் காதாபாத்திரத்தின் படைப்பு புதுசு ஒன்றும் இல்லை.. ஆனால் தனுஷுக்கு புதுசு.. கூடுமானவரை அதை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் பிரதிபலித்திருக்கிறார் ‘கொடி’ தனுஷ். அன்பு என்ற தனுஷ் கதாப்பாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்றாலும், கொடி என்ற அரசியல்வாதியாக தனுஷிற்கு ஒரு வெயிட்டான பாத்திரம்தான் வழங்கப்பட்டுள்ளது.

தனுஷ் முதன்முதலாக த்ரிஷாவுடன் ஜோடி சேர்கிறார். த்ரிஷாவின் கேரக்டர் ரொம்பவே வெயிட்டானது.. அதை கதைப்போக்கில் கேரக்டராக பார்க்கும்போது த்ரிஷாவின் நடிப்பில் உள்ள குறைபாடுகள் பெரிதாக தெரியாது.

இப்படத்தில், இன்னொரு கதாநாயகியாக வரும் அனுபமாவின் கதாபாத்திரத்திற்கு, சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த முக்கியத்துவமும் கிடையாது. விசுவாசத்தின் இன்னொரு உருவமாக காளி வெங்கட் நடித்துள்ளார். அரசியல் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் தனது பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

கணவனையும் மகனையும் அரசியல் பறித்துக்கொண்டால் ஒரு தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வெகு அழகாக வெளிப்படுத்தியுள்ளார் சரண்யா. கொஞ்ச நேரமே வந்தாலும் கருணாஸின் நடிப்பு நமக்கு ஏமாற்றத்தைத் தரவில்லை. விஜயகுமார், மாரிமுத்து, ‘குட்டிப்புலி’ மூர்த்தி, சிங்கம்புலி என பலரும் யதார்த்த அரசியல்வாதிகளாக வலம் வந்திருருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் அரசியல் துரோகத்தை தூக்கலாக காட்டுவதற்கு முயற்சித்திருக்கிறார்கள். கூடவே காதலின் துரோகத்தையும்.. தனுஷ் தனது காதலுக்காக கொடுக்கும் விலையும், த்ரிஷா தனது அரசியல் எதிர்காலத்திற்காக கொடுக்கும் விலையும் பயங்கரமான ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட்.

இப்படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையில் நமக்கு பாடல்கள் ஏமாற்றத்தையே தருகின்றன. ‘சுழலி’ பாடல் மட்டும் சுகம்.. ஆங்காங்கே சின்னச்சின்ன குறைபாடுகள் இருந்தாலும் கூட, இது போரடிக்காத, அனைவரும் நிச்சயமாக பார்க்கக்கூடிய படம் என்பதில் சந்தேகமே இல்லை…!

Rating:3/5