கோலமாவு கோகிலா – விமர்சனம்


நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே அது நிச்சயம் வித்தியாசமான ஒரு படமாகத்தான் இருக்கும் என்கிற எண்ணத்தை அறம்’ படம் வலுவாக ஏற்படுத்திவிட்டது. அந்த எதிர்பார்ப்பை இந்த கோலமாவு கோகிலா செய்திருக்கிறதா..? பார்க்கலாம். \

பொறுப்பில்லாத தகப்பன். அதனால் வேலைக்கு போய் மொத்த குடும்பத்தையும் காப்பாற்றும் பொறுப்பு நயன்தாராவுக்கு. அம்மா சரண்யாவுக்கு நுரையீரல் புற்றுநோய் என மருத்துவர் ஷாக் தருகிறார். அதன் ட்ரீட்மெண்ட்டுக்கு பதினைந்து லட்சம் செலவாகும் என அடுத்த அதிர்ச்சி தாக்க நிலைகுலைகிறார் நயன்தாரா.

இந்தசமயத்தில் தான் எதிர்பாராத விதமாக போதைப்பொருள் கடத்தும் கும்பலிடம் சிக்கி சாமர்த்தியமாக மீள்கிறார் நயன்தாரா. அதை தொடர்ந்து அவர்களிடமே வேலை கேட்டு அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் அம்மாவுக்கு வைத்தியம் பார்க்கலாம் என அவர்களிடமே வேலைக்கு சேர்கிறார். சிலநாட்கள் சாமர்த்தியமாக போதைப்பொருளை கைமாற்றும் நயன்தாராவுக்கு திடீரென ஒருநாள் நடக்கும் போலீஸ் செக்கிங் பல்ஸ் எகிற வைக்கிறது.

போதுண்டா சாமி என அத்துடன் இந்த வேலையை நிறுத்திக்கொள்வதாக சொல்லி, செய்த வேலைக்கு கூலி கேட்க,வேலை கொடுத்தவனோ நயன்தாராவையே கேட்கிறான்.. அவனை தாக்கி தப்பிக்கும் நயன்தாராவிடம், அவனுக்கு பதிலாக மொத்த சரக்கையும் கைமாற்றும் வேலையை கொடுத்து மிரட்டுகிறார் பாம்பே தாதா ஹரீஷ் பெராடி.

இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரி சரவணன் போதை கடத்தல் கும்பலை பிடிக்க சபதம் செய்யாத குறையாக அலைகிறார் . கடத்தல்காரர்களிடம் இருந்தும் போலீஸிடமிருந்தும் நயன்தாராவால் தப்பிக்க முடிந்ததா…? அம்மாவை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

நாயகியை சுற்றியே சுழலும் வகையிலான கதை அமைப்பு என்பதால் நயன்தாராவுக்கு நின்று விளையாட நேரம் கிடைக்கிறது. முதல் ஓவரில் சிங்கிள் சிங்கிளாக தட்டும் நயன்தாரா, இன்டர்வெல்லுக்குப்பின் இறங்கி ஆடுகிறார். பயந்த சுபாவத்துடனே படம் முழுதும் வலம் வந்தாலும் இடைவேளைக்குப்பின் பல இடங்களில் கேரக்டரை மீறி கதை அவரை இழுத்து செல்வது மிகப்பெரிய முரண்..

இதில் நயன்தாராவின் தங்கையாக கச்சிதமான நடிப்பால் அட இந்தப்பொண்ணுக்கு நடிக்கவும் வருமா என ஆச்சர்யப்படுத்துகிறார் விஜய் டிவி ஜாக்குலின். கதாநாயகன் என சொல்லமுடியாவிட்டாலும் கதையின் நாயகன் யோகிபாபு தான்.. நயன்தாரா மீது கொண்ட காதலால் அவர் பண்ணும் கூத்துக்கள் செம காமெடி.. கூடவே ஜாக்குலினை காதலிப்பதாக சொல்லிக்கொண்டு வரும் நபரின் அட்ராசிட்டி வேறு குலுங்க வைக்கிறது..

பாசக்கார அம்மாவாக வழக்கம்போல சரண்யா..மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, போலீஸ் அதிகாரியாக சரவணன் என பலரும் கதைக்கு தேவையான பங்களிப்பை தாராளமாக செய்திருக்கிறார்கள். ஜாக்குலின் போதாதென்று விஜய் டிவி கலக்கப்போவது யாரு முக்கியஸ்தர்கள் சிலரை ஆங்காங்கே உள்ளே இழுத்துவிட்டு பெரிய திரைக்கான வெளிச்சம் கொடுத்துள்ளார் இயக்குனர் நெல்சன்.

அனிருத்தின் இசையில் ‘கல்யாண வயசு தான்’பாடல் ரிப்பீட் ரகம். சம்பளத்தை உயர்த்துவதாக கூறி,வழியும் மேலதிகாரிக்கு நயன்தாரா சொல்லும் பதில் சரியான செருப்படி. சிபாரிசு செய்வதாக தவறாக அழைக்கும் ஜொள்ளு அதிகாரிகளுக்கு பல பெண்கள் இனி இந்த பதிலை சொல்லி செருப்படி கொடுக்கலாம்.

இடைவேளைக்கு முன்பு வரை நயன்தாராவுக்கான கதையாக கொண்டுசென்ற இயக்குனர் இடைவேளைக்கு பின் ஏன் தடம் மாறினார் என்பது அவருக்கே வெளிச்சம். அந்த லாஜிக் மீறலை துளியும் கண்டுகொள்ளாமல் தனது கேரக்டரின் சாகசத்திற்காகவே இந்த கதையை நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது..

சரி, நயன்தாரா படத்தில் நயன்தாராவை பார்ப்பார்களா.? இல்லை இந்த லாஜிக்கையெல்லாம் பார்ப்பாகர்களா..? மொத்தத்தில் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.