எப்போதுமே ஊர் பிரச்சனை என்றால் தனது மாமன் ராஜாக்கிளி (தம்பி ராமையா) மற்றும் சின்னய்யா துரைப்பாண்டி (வேலா ராமமூர்த்தி) ஆகியோருடன் முதல் ஆளாக நிற்பவன் கொம்பன் (கார்த்தி). ஆட்டு வியாபாரியான அவனுக்கு பக்கத்து ஊர் சாமியாடி முத்தையா (ராஜ்கிரண்) மகள் பழனி (லட்சுமி மேனன்) மீது விருப்பம். அதை அறிந்த கொம்பனின் பங்காளி முனியாண்டி (கருணாஸ்), முத்தையாவிடம் பேசி இருவருக்கும் திருமணம் செய்துவைக்கிறார்.
பெண் கொடுப்பதற்கு முன் தன்னைப்பற்றி நாலு பேரிடம் நம்பிக்கையில்லாமல் விசாரித்தாரே என்கிற கோபம் காரணமாக, தனது வீட்டிலேயே தங்கியிருக்கும் மாமனாரை மரியாதையின்றி நடத்துகிறான் கொம்பன். ஒருமுறை மனைவியை கைநீட்டி அடித்துவிட, தடுக்க வரும் மாமனாரையும் அடித்து விடுகிறான் கொம்பன். பின் தவறை உணர்ந்து மருமகனாக இல்லாமல் படிப்படியாக மகனாக மாறுகிறான்.
இது ஒருபுறம் இருக்க, கொம்பனின் அடாவடியால் பக்கத்து ஊரான செம்மம்பட்டி குண்டன் ராமசாமியின் (சூப்பர் சுப்பராயன்) மருமகனின் (மாரிமுத்து) பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான கனவு தகர்ந்து போகிறது. முதலில் கொம்பனிடமும், பின்னர் முத்தையாவிடமும் பலபேர் முன்னிலையில் அவமானப்பட்ட குண்டன் தனது மகன்களுடன் சதித்திட்டத்தில் ஈடுபட்டு மாமனையும் மருமகனையும் கருவறுக்க நாள் குறிக்கிறான். ஜெயித்தது குண்டனா? கொம்பனா? என்பது க்ளைமாக்ஸ்..
படத்தில் ஜாதிச்சண்டையும் இல்லை.. ஒரு வெங்காயமும் இல்லை.. அப்புறம் என்ன இழவுக்குத்தான் தேவையில்லாமல் பிரச்சனை பண்ணுகிறார்களோ அவர்களுக்குத்தான் வெளிச்சம். சத்யராஜுக்கு அடுத்ததாக நக்கல், நையாண்டி ஏரியாவை கார்த்தி குத்தகைக்கு எடுத்துவிட்டாரோ, என நினைக்கும் அளவுக்கு படம் முழுவதும் கொம்பனாக லந்து பண்ணுகிறார் கார்த்தி. மாமனார் ராஜ்கிரணிடம் ஏழரையை இழுக்கும் காட்சிகளில் அலப்பரையை கொடுத்தாலும் தாய்மார்களின் வெறுப்பையும் கொஞ்ச நேரம் சம்பாதிக்கிறார்.
பெண்ணை பெற்ற தகப்பன்களின் நெஞ்சில் பால் வார்க்கும் (கதா)பாத்திரமாக ராஜ்கிரண்.. தாத்தாவாக வெளுத்துக்கட்டியவருக்கு மாமனாராக நடிப்பதா சிரமம்..? கார்த்தியின் அவமரியாதைகளை தாங்கிக்கொண்டு மனதில் மருகும் காட்சிகளில் நெஞ்சில் நிற்கிறார் ராஜ்கிரண்.
எதையுமே (எப்பவுமே) கட் அன்ட் ரைட்டாக பேசும் ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் மாதிரி விறைப்பும் முறைப்புமாக லட்சுமி மேனன். தயவு செய்து இன்னும் நாலு படத்துக்கு அவருக்கு தாவணி, சேலை கொடுக்காதீங்கப்பா.. பார்க்குற நமக்கே போரடிக்குது.. நடிக்குற அந்த புள்ளைக்கு போரடிக்காதா..?
எங்க அப்பாவை விட்டுட்டு வரமாட்டேன் என சொல்லும் லட்சுமி மேனனிடம், எங்க அண்ணனாட்டம் அவரும் வூட்டுல இருக்கட்டுமே எனும்போதும், மகனால் தனது சம்பந்தியும் மருமகளும் அவமானப்பட்டுவிட்டார்கள் என்கிற கோபத்தில் அவர்களுடனேயே வெளியேறும் காட்சியும் கோவை சரளாவிடம் இதுவரை நாம் பார்க்காத அழகுமுகம்.
வெட்டியான தாய்மாமனாக தம்பிராமையா, நல்லமனம் கொண்ட பங்காளியாக கருணாஸ், சலம்பல் சின்னய்யாவாக வேலா ராமமூர்த்தி, கொந்தளிக்கும் குண்டனாக சூப்பர் சுப்பராயன் மற்றும் அவரது மகன்கள், வன்மத்தை கண்களிலேயே பிரதிபலிக்கும் மாரிமுத்து, ஜட்ஜாக வரும் கு.ஞானசம்பந்தன் மற்றும் லஞ்ச இன்ஸ்பெக்டர் என அவரவர்க்கு பொருந்தும் சட்டைகளை அணிந்திருப்பதால் கதாபாத்திரங்களில் எங்கேயும் துருத்தல் இல்லை.
ஊரையும் ஊர்ப்பகையையும் அழகாக பிரித்து காண்பிக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு. கிராமத்துப்படம் என்பதாலோ என்னவோ ஜி.வி.பிரகாஷின் இசையில் கொஞ்சம் பிசிறு தட்டுகிறது. கிராமத்தில் இருதரப்ப்பினருக்கான மோதல் என்பதை சமீபத்தில் வந்த படங்களில் கூட நாம் பார்த்திருந்தாலும், அதில் மாமனார், மருமகன் உறவை கவனமாக செருகியதன் மூலம் ஜஸ்ட் லைக் தட் ஈசியாக தப்பித்திருக்கிறார் இயக்குனர் முத்தையா.
என்ன நடந்தது தெரியுமா என கேட்டு அடிக்கடி பிளாஸ்பேக்கில் காட்சிகளை விவரிப்பது கேரக்டர்களுக்கு பில்டப் ஆக இருந்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டுகிறது. பஸ் ஸ்டாண்டில் வைத்து தன் மனைவியை அவமானப்படுத்த குண்டனும் அவரது ஆட்களும் முயற்சித்தார்கள், அதை தனது மாமனார் தட்டிகேட்டார் என்கிற விபரமே மறுநாள் ஒரு போலீஸ்காரர் சொல்லித்தான் கார்த்திக்கு தெரியவருகிறது என்பதெல்லாம் நம்ப முடியாத விஷயங்கள்..
பஸ் ஸ்டாண்டில் இருக்கும் ஏதோ ஒரு கடைக்காரன் ஒரு போன் போட்டால் அடுத்த நிமிடமே கார்த்திக்கு தெரிந்துவிடப்போகிறது. இப்படி சின்னச்சின்ன லாஜிக்குகள் இடித்தாலும் லஞ்ச போலீஸை சிக்கவைப்பது, மாமனாரை காப்பற்ற ஜெயிலுக்குள் வருவது, காப்பாற்றியவனே வயிற்றில் கத்தியை சொருகுவது போன்ற சில காட்சிகளில் கொஞ்சம் பரபரவென ஆட்டம் காட்டியிருக்கிறார் இயக்குனர் முத்தையா.
கொம்பன் – தாராளமாக குடும்பத்துடன் ரசிக்கலாம்..!