வடசென்னையில் ஒரு குப்பத்தின் ராஜாவாக இருப்பவர் எம்ஜிஆர் ரசிகரான் பார்த்திபன். எம்எஸ் பாஸ்கர் உட்பட அவருக்கு நான்கு தோஸ்துகள். எம்.எஸ்.பாஸ்கரின் மகனான ஜி.வி.பிரகாஷுக்கு பார்த்திபனை கண்டாலே ஆகாது. வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் ஜி.வி.பிரகாஷ் வேலைக்கு போகும் பாலக் லால்வனி மீது காதல்.. லால்வனியின் அம்மாவோ சொர்ணாக்காவாக மாறி இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இன்னொரு பக்கம் அந்த ஏரியாவுக்கு புதிதாக குடி வரும் பூனம் பஜ்வா ஜிவி பிரகாஷ் மீது அன்பு காட்ட, அதை தவறாக நினைத்து ஜிவியிடம் சண்டை போடுகிறார் லால்வனி.
இந்த நிலையில் அந்த ஏரியா கவுன்சிலரான் கிரண் பார்த்திபனுடனும் எம்எஸ்.பாஸ்கருடனும் வெவ்வேறு சம்பவங்களில் முட்டிக்கொள்கிறார். அதைத்தொடர்ந்து அந்த ஏரியாவில் உள்ள சிறுவன் ஒருவன் காணாமல் போக, அடுத்த நாளே எம்.எஸ்.பாஸ்கர் குப்பைத்தொட்டியில் பிணமாக கிடக்கிறார்.
தந்தையைக் கொன்றது யார் என பார்த்திபன் உட்பட பலர் மீதும் தனது சந்தேக கண்களை திருப்புகிறார் ஜிவி.பிரகாஷ். இதனால் அவருக்கு தேவையில்லாத நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதை எல்லாம் சமாளித்து தனது தந்தையைக் கொன்றது யார், அதற்கான காரணம் என்ன என ஜி.வி.பிரகாஷுக்கு தெரியவரும்போது அதிர்ச்சி அவருக்கு மட்டுமல்ல நமக்கும் தான்..
கிட்டத்தட்ட தனது நடிப்பு இப்படித்தான் என ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கிக் கொண்ட ஜிவி.பிரகாஷ் அதைவிட்டு வெளியே வர முயற்சிக்காமல் அதற்குள்ளேயே பாதுகாப்பாக உலா வந்திருக்கிறார். அதேசமயம்கோபம் ஆவேசம் கெத்து அழுகை, காதல் என கலந்து கட்டி அடித்திருக்கிறார்.
முக்கியத்துவம் குறையாத இன்னொரு ஹீரோ கதாபாத்திரமாக பார்த்திபன்.. வழக்கமான அவரது லகலக வசனங்களுக்கு எந்த குறைவுமில்லை.. ஆனால் சில நேரங்களில் பெரும் பில்டப்புடன் வந்து அமைதியாக போய்விடுவதுதான் ஏமாற்றம் அளிக்கிறது.
கதாநாயகியாக புதுமுகம் பலக் லால்வனி. கதைக்கு பொருந்திப்போகும் எதார்த்தமான அழகுடன் துறுதுறு நடிப்பில் நம்மை வசீகரிக்கிறார். கவர்ச்சிக்காக இணைக்கப்பட்டுள்ள பூனம் பஜ்வா சென்டிமென்டாக நம் மனதை தொடுகிறார். ஊர் நியாயம் என்கிற கேரக்டரில் எம்எஸ்.பாஸ்கரின் நடிப்பு அசால்ட் ரகம். இவர்கள் தவிர கவுன்சிலராக வரும் கிரண், நாயகியின் அம்மா, பார்த்திபன் நண்பராக வரும் சேட், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட அனைவரும் ஏதோ ஒரு வகையில் நம்மை கவர்கின்றனர்.
ஜிவி பிரகாஷின் இசையில் வழக்கம்போல அவருக்கேற்ற பாடல்கள்தான். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு வடசென்னையில் இன்னொரு அமைதியான பகுதியை அழகாக வெளிப்படுத்தியுள்ளது.
நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறி இருக்கும் பாபா பாஸ்கர் ஒரு கமர்ஷியலான படத்தை தர வேண்டும் என முடிவு செய்தது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்காக இடைவேளை வரை படத்தை கதைக்குள் நகரவிடாமல் இழுத்தடித்து இருக்க தேவையில்லை. இரண்டாம் பாதியில் அந்த குறையை போக்கும் விதமாக சற்று விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார். கிளைமாக்ஸ் என்னவென்று பெரும்பாலும சாதாரண ரசிகனால் யூகிக்க முடியாத அளவிற்கு கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு படம் என்றாலும், ஜிவி பிரகாஷுக்கு இது மற்றுமொரு படம் அவ்வளவுதான்