கும்பகோணம் சிலை கடத்தல்காரனிடமிருந்து ஐம்பொன் சிலை ஒன்று குரங்கு பொம்மை படம் போட்ட பேக்கில் வைக்கப்பட்டு, அவரது அப்பாவி நண்பனான பாரதிராஜா மூலம் சென்னைக்கு வருகிறது. ஒருகட்டத்தில் பேக் கைமாறிப்போய், எங்கெங்கோ சுற்றி சென்னையில் இருக்கும் பாரதிராஜாவின் மகன் விதார்த் கைகளில் சேர்கிறது.
அந்த பேக்கில் என்ன இருக்கிறது என தெரியாத நிலையில் அந்த பேக்கை உரியவரிடம் சேர்ப்பதற்காக அலைகிறார் விதார்த். ஒரு திருடன் முதற்கொண்டு பலர் அந்த பேக்கை கைப்பற்ற அலைகின்றனர்.. கும்பகோணத்தில் கிளம்பிய பாரதிராஜாவிடம் இருந்த அந்த குரங்கு பொம்மை பேக், சென்னையில் விதார்த்தின் கைகளில் கிடைப்பதற்கு இடையே என்ன நடந்தது..?. பேக்கின் உள்ளே என்ன இருக்கிறது என்பது விதர்த்துக்கு தெரியவந்ததா. இதுதான் க்ளைமாக்ஸ்..
எந்த உணர்வுகளையும் பளீரென காட்டாமல், இயல்பான நடிப்பை கச்சிதமாக வழங்கியிருக்கிறார் விதார்த். பெண் பார்க்கப்போய் சண்டையில் முடிந்தாலும், அந்தக் காதலை சென்னையில் தொடர்வது சுவாரஸ்ய அத்தியாயம். தந்தையைக் காணாமல் தவிப்பும் தேடலுமான விதார்த்தின் பயணத்தில் வேகமும் விறுவிறுப்பும்.
விதார்த்தின் அப்பாவாக பாரதிராஜா.. வேகம், கோபம் காட்டாத வெள்ளந்தியான கிராமத்து மனிதரை கண்முன் நிறுத்துகிறார்.. கூடவே நட்பின் விலக முடியாத நெருக்கத்தையும் முதுமையின் தளர்வையும் அழகாகத் தன் உடல்மொழியில் கொண்டுவந்திருக்கிறார். நாயகி டெல்னா டேவிஸ்.. தனது அழகான கண்களாலும், குறும்புத்தனமான நடிப்பாலும் நம் மனதிலும் இடம் பிடிக்கிறார்.
வில்லனாக குமரவேல்.. மனிதருக்குள் இப்படி ஒரு திறமை ஒளிந்துள்ளதா என ஆச்சர்யப்பட வைக்கிறார். ஒருகாலத்தில் வடிவேலுவிடம் அட்ரஸ் கேட்டு டார்ச்சர் பண்ணிய கிருஷ்ணமூர்த்தி இதில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுக்கிறார். வில்லனாக இருந்தாலும் நட்பின் உயர்வை பறைசாற்றும் தேனப்பனையும் பாராட்டவே தோன்றுகிறது. திருடனாக வரும் கல்கிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடிவருவது நிச்சயம். பாலாசிங், ரமா இருவரும் கவனம் ஈர்க்கும்படியான பொருத்தமான தேர்வுகள்.
இசையமைப்பாளர் அஜனீஷ் படத்தின் ஓட்டத்துக்கு ஏற்ப வழங்கியிருக்கும் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. படத்தில் சில விஷயங்கள் ஏதேச்சையாக நடப்பது போல காட்டப்படுவதை ஏற்கமுடியவில்லை. குமாரவேல், பாரதிராஜா, கிருஷ்ணமூர்த்தி மூவரும் இடம்பெறும் காட்சிகள் நம்மை திகிலுடன் பயணிக்க வைக்கின்றன.
பணம் மனிதனை என்ன பாடுபடுத்துகிறது என்பதை ஒரு பாடமாக போரடிக்காமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர் நித்திலன்.