என்னை அறிந்தால் படத்துக்குப்பின் அருண்விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் என்பதால் ‘குற்றம் 23’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.. இன்று வெளியாகி இருக்கும் இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு பூர்த்தி செய்திருக்கிறது..? பார்க்கலாம்.
போலீஸ் அதிகாரி அருண்விஜய்… காணாமல் போன வசதியான வீட்டுப்பெண் ஒருவரை கண்டுபிடிக்கும் வழக்கும் வில்லிவாக்கம் சர்ச் பாதர் கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பும் அருண்விஜய் கைக்கு ஒரே நேரத்தில் வருகிறது.. இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாக கருதும் அருண்விஜய், விசாரணையை தீவிரமாக்குகிறார்.
இந்நிலையில் காணமல் போன பெண் மட்டுமல்லாது நகரில் இன்னும் சில பெண்கள் வெவ்வேறு விதமான சூழலில் சமீபகாலமாக இறந்துபோன விபரத்தையும் அவர்கள் அனைவருமே தற்போது கர்ப்பிணி பெண்களாக இருந்தவர்கள் என்கிற விபரமும் அவருக்கு தெரியவருகிறது..
இந்நிலையில் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த அருண்விஜய்யின் அண்ணி அபிநயா கர்ப்பிணியான நிகழ்வும் அதனை தொடர்ந்து இரண்டு மாதங்களில் அவரே தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வும் நடைபெற அதிர்ச்சியாகிறார் அருண்விஜய்..
அவ்வப்போது காதலி மஹிமாவை தாக்க முற்படும் கும்பலை ட்ரேஸ் செய்யும் அருண்விஜய்க்கு இந்த விவகாரத்தின் பின்னணியில் நகரின் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்று இருப்பது தெரியவருகிறது.. ஆனால் விஷயம் அத்துடன் முடியவில்லை என்பதும் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று இதன் பின்னணியில் இருப்பதும் தனது அண்ணியின் சாவுக்கும் அவர்கள் தான் காரணம் என்பதும் தெரியவருகிறது…
கர்ப்பிணிகள் தொடர்ந்து மரணத்தை தழுவுவதின் பின்னணியை அருண்விஜய் கண்டுபிடிக்கும்போது அவருக்கு ஏற்படும் அதே அதிர்ச்சி நமக்கும் ஏற்படுகிறது.. அது என்ன அதிர்ச்சி..? கண்டிப்பாக படத்தை பாருங்கள்..
என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக தனது இன்னொரு நடிப்பு முகத்தை நமக்கு காட்டியிருந்த அருண்விஜய் தற்போது அதைவிட மெருகேறிய நடிப்பை இந்தப்படத்தில் வெற்றிமாறன் ஐபி.எஸ் கதாபாத்திரத்தில் உள்ளே செலுத்தி இருக்கிறார். அதனால் மொத்தப்படத்தையும் மிடுக்கும் துடிப்பும் குறும்புமாக இயல்பாக கடந்து செல்கிறார்.. இந்தப்படம் அவரை கமர்ஷியல் ஹீரோ வரிசைக்கு தள்ளியிருக்கிறது என்பதே உண்மை.
மழலை பள்ளி ஆசிரியையாக, அருண்விஜய் ஜோடியாக என மஹிமா பொருத்தமான தேர்வு.. அருண்விஜய்யின் விசாரணையில் எரிச்சலாவதும் பின் அவர்மீது காதலாவதும் என வழக்கமான கமர்ஷியல் பட நாயகி வேடம் என்றாலும் அதை க்யூட்டாக செய்திருக்கிறார் மஹிமா.
வக்கிரம் பிடித்த மனிதன் ஒருவன் சைக்கோவாக மாறினால் அவனது விபரீத புத்தி எப்படியெல்லாம் வேலைசெய்யும் என்பதை அலட்டல் இல்லாத நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார் வில்லன் வம்சி கிருஷ்ணா. பணமும் புகழும் தான் பிரதானம் என தொழில்துறையில் இருப்பவர் நினைக்கலாம்.. ஆனால் மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு அந்த எண்ணம் வந்தால் அது எவ்வளவு ஆபத்தானது என்கிற நெகடிவ் சிந்தனையை சரியாக பிரதிபலித்திருக்கிறார் டாக்டராக நடித்திருக்கும் கல்யாணி நடராஜன்..
அருண்விஜய்க்கு உதவி செய்யும் போலீஸ் அதிகாரியாக வரும் தம்பி ராமையா மிதமான காமெடி ப்ளஸ் குணச்சித்திரம் என அசத்துகிறார். க்ளைமாக்ஸில் அருண்விஜய்க்கு ஆதரவாக அவர் சின்ன ட்ராமா போடுகிறார் பாருங்கள்.. கைதட்டலை அள்ளிவிடுகிறார் மனிதர். அபிநயாவுக்கு இதில் முழு நீள கதாபாத்திரம்.. தனது கதாபாத்திரத்தை மென்சோகத்துடன் இயல்பாக செய்திருக்கிறார். அவரின் கணவனாக சீரியல் புகழ் அமித் பார்கவும் பொருத்தமான தேர்வுதான்.
இவர்களை தவிர அரவிந்த் ஆகாஷுக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுக்கும் மிரட்டலான கேரக்டர் கொடுக்கப்பட்டு அவர்களும் தங்கள் பங்கிற்கு மிரட்டி எடுத்திருகிறார்கள். சில காட்சிகளில் வந்தாலும் போலீஸ் உயரதிகாரியாக விஜயகுமாரின் நடிப்பு நிறைவு.
தேவையான அளவுடன் பாடல்களின் எல்லையை நிறுத்தி, பின்னணி இசையில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் விஷால் சந்திரசேகர்.. பாஸ்கரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம். படம் முழுவதும் ஒரே விதமான கலர் டோனை மெயின்டன் செய்து ரசிகர்களை படத்துடன் ஒன்ற செய்திருக்கிறார்.
ஏற்கனவே ஹாரர் த்ரில்லரான ‘ஈரம்’ படத்தை கொடுத்த அறிவழகன் இந்தப்படத்தை மெடிக்கல் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக கொடுத்திருக்கிறார். படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை வேகம் குறையாமல், விறுவிறுப்பான காட்சிகளால் நம்மை இருக்கையில் கட்டிப்போட்டு விடுகிறார். அதற்கு வலு சேர்க்கும் விதமாக படத்தின் விசாரணை காட்சிகளில் டெக்னாலஜியையும் சரியான அளவில் பயன்படுத்தி இருக்கிறார்.
அதுமட்டுமல்ல மருத்துவ துறையில் இப்படியும் சில தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்பதாக எச்சரிக்கை மணி அடித்திருக்கும் அறிவழகன், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அநாதை குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாமே என்பதை தனது கோணத்தில் ஒரு செய்தியாகவும் பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் இரண்டே கால் மணி நேரம் எங்கேயும் ரசிகனுக்கு போரடிக்கவிடாமல் செமத்தியான ஒரு த்ரில்லர் படத்தை தந்திருக்கிறார் அறிவழகன்.