நான்கு நீளமான் குறும்படங்கள், நான்கு இயக்குனர்கள் என ஒன்றிணைந்து உருவாக்கி இருக்கும் ஆந்தாலாஜி படம் இது.
1. எதிர்பாரா முத்தம்
நடிகர்கள் ; கௌதம் மேனன், அமலாபால், வினோத், ரமேஷ் கண்ணா
டைரக்சன் ; கௌதம் மேனன்
கௌதம் மேனன் மேனன் தனது கல்லூரி பருவத்தில் சக தோழியான அமலாபாலுடன் ஏற்பட்ட நட்பு பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். சந்தர்ப்ப சூழலால் ஐந்து வருடமாக காதலித்த பெண்ணுடன் காதல் கைகூடாமல் போய், வேறு ஒரு ஒரு பெண்ணுடன் காதல் அரும்பி அவரையே திருமணமும் செய்துகொள்கிறார். வருடங்கள் பல கடந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து கௌதமை பார்க்க வரும் அமலாபால் அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டு அவரை அதிர்ச்சி அடையவைத்து கிளம்பி செல்கிறார்.
இளம் வயது வினோத், மத்திய வயதில் கௌதம் மேனன் என ஒரே கதாபாத்திரத்தில் இருவருக்குமான உருவ ஒற்றுமைக்காகவே ஒரு சபாஷ் போடலாம். அமலாபால் கல்லூரி மாணவி என்றால் நம்ப சிரமமாகத்தான் இருக்கிறது. நண்பர்களாக வரும் ரோபோ ஷங்கரின் சலம்பல் கொஞ்சம் அதிகம் தான்.. கடைசியில் அவர் கேட்கும் கேள்வி கூட, நியாயமாகத்தான் இருக்கிறது. நட்புக்கும் காதலுக்குமான மெல்லிய கோட்டை தாண்டுவதற்கு தத்தளிக்கும் மனம் கொண்ட இளைஞர்களுக்கு இந்தப்படம் பார்த்தால் ஒரு ஐடியா கிடைக்கலாம்.
2. அவனும் நானும்
நடிகர்கள் ; அமிர்தாஷ் பிரதான், மேகா ஆகாஷ், ஆர்யா பாலக்
டைரக்சன் ; விஜய்
காதலுக்கு முன்பே எதிர்பாராத தருணம் ஒன்றில் உடலால் ஒன்று கூடுகிறார்கள் மேகாவும் அமிர்தாஷும். இரண்டு மதங்களுக்கு பின் கர்ப்பம் உறுதியாக, இந்த தகவல் தெரிந்த அந்த நிமிடம் முதல் அமிர்தாஷ் போன் ஸ்விட்ச் ஆப் ஆகிறது. காதலனின் இந்த செயலால் விரக்தியான மேகா ஆகாஷ், தோழியின் அறிவுரைப்படி கருவை கலைக்க முயற்சி செய்கிறார். திடீரென எதிர்கொளும் அதிரடி நிகழ்வு ஒன்றால் மனதை மாற்றிக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்திற்கு வருகிறார் மேகா ஆகாஷ். அப்படி என்ன நிகழ்வு நடந்தது.. மேகாவின் சிக்கல் அவ்வளவு எளிதாக தீர்ந்ததா என்பது க்ளைமாக்ஸ்
காதலர்களாக மேகா, அமிர்தாஸ், தோழியாக் ஆர்யா பாலக் எல்லோரும் நடிப்பில் ஒகே. ஆனால் க்ளைமாக்ஸ் எதிர்பாராத விதமாக சுபமாக முடிந்தாலும், சற்றே செயற்கைத்தனம் இழையோடுவதை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக மேகா ஆகாஷ் பல மாதங்கள் கழித்து வீடு திரும்பும்போது அங்கே நிலவும் செயற்கைத்தனம் மனதில் ஒட்ட மறுக்கிறது.
3. லோகம்
நடிகர்கள் ; வருண், சங்கீதா, சாக்சி சகர்வால்
டைரக்சன் ; வெங்கட் பிரபு
வீடியோ கேம் விளையாடும் வருண் அதல் ஒரு கதாபாத்திரமாகவே மாறுகிறார். அந்த ஆன்லைன் விளையாட்டில் தன்னுடன் இணைந்து விளையாடும் சக போட்டியாளரான முகம் தெரியாத பெண் மீது ஒரு கட்டத்தில் காதலாகிறார் வருண். இறுதி லெவலில் வென்றதும் தன்னுடைய மொபைல் நம்பரை தருவதாக சொல்கிறாள் அந்த பெண். ஆனால் இறுதிப்போட்டியில் எதிர்பாராத விதமாக அந்தப்பெண் போட்டியில் இருந்து அவுட் ஆகிறார். அதன்பின் அவருடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. வருணி நிலை என்ன..? அவரால் தனது காதலியை சந்திக்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்
வீடியோ கேம் மூலமாக ஜாலியான ஒரு காதல் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. குறிப்பாக அந்த வீடியோ கேம் விளையாட்டுடன் நாமும் ஒன்றி பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது. வித்தியாசமான புதிய முயற்சி.
4. ஆடல் பாடல்
நடிகர்கள் ; விஜய்சேதுபதி, அதிதி பாலன்
டைரக்சன் ; நலன் குமாரசாமி
திருமணமான பல ஆண்களுக்கு உள்ள சபல புத்தியை மையமாக வைத்து இந்த கதையை உருவாகியுள்ளார் நலன் குமாரசாமி. மனைவி அதிதி பாலன், குழந்தை என அழகான குடும்பம் விஜய்சேதுபதிக்கு. இருந்தாலும் போனில் மோம் தெரியாமல் பழக்கம் ஏற்படும் பெண்ணுடன் அந்தரங்கமாக பேசி பழகுவதில் தான் விஜய்சேதுபதிக்கு நாட்டம் அதிகம். ஒருகட்டத்தில் அந்தப்பெண் யாரென தெரியவரும்போது அதிர்ச்சி. அதேபோல மனைவி அதிதி பாலன் தனக்கும் ஒரு முன்னாள் காதலன் இருந்தான் என கொளுத்திப்போட சராசரி ஆண்களுக்கே உண்டான சந்தேக புத்தி விஜய்சேதுபதியிடம் தலை தூக்குகிறது. குடும்பம் ரெண்டானதா, பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா..? என்பது க்ளைமாக்ஸ்
இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் தில் விஜய்சேதுபதிக்கு மட்டுமே இருக்கிறது என அடித்து சொல்லலாம். தனது அந்தரங்க நட்பு மனைவியிடத்தில் வெளிப்படும் சமயத்தில் கூனிக்குறுகி நிற்பதாகட்டும், அதேசமயம் தனது மனைவிக்கு இன்னொருவருடன் தொடர்பு என கேள்விப்பட்டு சராசரி ஆண்மகனாக சந்தேக புத்தியை வெளிப்படுத்துவதாகட்டும் இயல்பு மீறாத நடிப்பை வழங்கி இருக்கிறார் விஜய்சேதுபதி. கட் அன்ட் ரைட்டான நடிப்பான நடிப்பை அருவியாய் கொட்டுகிறார் அதிதிபாலன். கூடா உறவுக்கு ஆசைப்படும் சபல புத்தி ஆண்களுக்கு சரியான சாட்டை அடி கொடுக்கிறது இந்த ஆடல் பாடல் எபிசோட்