மாவீரன் கிட்டு – விமர்சனம்


தமிழன் என்று பெருமைப்படக்கூடிய வகையில் ஒரு படம் எடுங்கள் என சொன்னதை முன்னிட்டு அதற்காவே சுசீந்திரன் இயக்கியுள்ள படம் தான் இந்த மாவீரன் கிட்டு. எண்பதுகளில் நிலவிய தீவிரமான சாதிக்கொடுமையையும் அதை எதிர்த்து போராட்டம் நடத்திய இரண்டு கிராமத்து வீரர்களையும் பற்றி இதில் சொல்லியிருக்கிறார்.

பழனி அருகில் உள்ள புதூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் மக்கள் தங்களது ஆட்களின் இறுதிச்சடங்கை நடத்த சுடுகாட்டுக்கு கொண்டு செல்லவேண்டும் என்றால் மேல்சாதியினர் வசிக்கும் வீதி வழியாகத்தான் செல்லவேண்டும்..

ஆனால் இதற்கு மேட்டுக்குடியினர் பலத்த எதிர்ப்பு தெரிவிப்பதால், நீண்ட தொலைவு சுற்றி செல்லவேண்டிய அவலமான சூழ்நிலை.. இதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கிறார் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனாக கருதப்படும் பார்த்திபன். தனக்கு பின்னால் இன்னும் இந்த போராட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும் என பலரை உருவாக்க நினைக்கிறார்..

அதனாலேயே அந்த ஊரிலேயே நன்றாக படிக்கும் மாணவனான விஷ்ணுவை கலெக்டருக்கு படிக்குமாறு ஊக்குவிக்கிறார் பார்த்திபன். இந்த சூழலில் கல்லூரிக்கு செல்லும் விஷ்ணுவை காதலிக்கிறார் மேல்சாதி பெண்ணான ஸ்ரீதிவ்யா.. இவர்களது போராட்டங்களை ஒடுக்குவதில் ஊர் பஞ்சாயத்து தலைவர் நாகி நீடுவும் அவரது மகனான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரீஷ் உத்தமனும் முனைப்புடன் ஈடுபடுகின்றனர்.

இதற்காக தங்களை மதிக்காமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வரும் தங்களது சமூகத்தை சேர்ந்தவரான ஸ்ரீதிவ்யாவின் தந்தையை கொலைசெய்து, பழியை விஷ்ணு மீது போட்டு அவரது படிப்பை தடை செய்து ஜெயிலுக்குள் தள்ள நினைக்கின்றனர். ஒரு கட்டத்தில் போலீசின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட விஷ்ணு, மறுநாள் முதல் காணாமல் போகிறார்..

அவரை கண்டுபிடித்து தரும்படியும், தங்களது அடிப்படை உரிமைகளை வலியுறுத்தியும் மக்களை திரட்டி போரட்ட களத்தில் இறங்குகிறார் பார்த்திபன்.. விஷ்ணுவுக்கு என்ன ஆயிற்று..? போராட்டத்திற்கு பலன் கிடைத்ததா..? என்பது க்ளைமாக்ஸ்..

எண்பதுகளின் கெட்டப்புகளுக்கு தன்னை மாற்றிகொண்டு, கண்ணாடி அணிந்து கொண்டு, தனது தோற்றத்தை வித்தியாசப்படுத்தி இருக்கிறார்… பார்த்திபன் காட்டிய பாதையில் கச்சிதமாக நடைபோடும் விஷ்ணு, கிளைமாக்ஸில் பார்த்திபன் நடத்தும் போராட்டம் வீனாகிவிடக்கூடாது என தன் மக்களுக்காக சுயமாக எடுக்கும்போது கண்களில் நீரை வரவழைக்கிறார்

படத்தின் கதாநாயகன் விஷ்ணுதான் என்றாலும் கூட, தங்கள் சமூகத்திற்கான போராட்டங்கள் அனைத்திலும் போராளியாக முன்னிற்கும் பார்த்திபன் தான் உண்மையான ஹீரோவாக தெறிகிறார். இந்தப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நேர்மையான முறையில் போராடும் பார்த்திபனின் நடிப்பு மாறுபட்டது மட்டுமல்லாமல் பக்குவப்பட்ட ஒன்றும் கூட.

தாழ்த்தப்பட்ட இனத்து இளைஞனை காதலிக்கும் மேல் தட்டு பெண்ணாக ஸ்ரீதிவ்யா.. அளவு மீறாத நடிப்பு.. அதேசமயம் அவரை, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒருவரின் மகளாக காட்டியிருப்பது புத்திசாலித்தனமாண முடிவு. சூரியை வேஸ்ட் பண்ணியிருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. சீரியசாக நகரும் கதையில் அவர்தான் என்ன பண்ணமுடியும்.. தனது குருநாதர் படத்தில் தானும் ஒரு பங்களிப்பாக இருந்துவிட்டு போகிறேன் நட்புக்காக நாலு காட்சிகளில் வந்து போகிறார் சூரி.

தான் மேல் சாதிக்காரன் என்கிற திமிரை சகல் இடாத்திலும் இம்மி பிசகாமல் பிரதிபலித்திருக்கிறார் வில்லான் ஹரீஷ் உத்தமன். அவரது தந்தையாக வரும் நாகிநீடுவும் வில்லத்தனம் காட்டுவதில் ஓகே வாங்கியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவும் குணமுடைய மேல்சாதி மனிதர்களாக வரும் பெரைரா மற்றும் அந்த வக்கீல் கதாபாத்திரம் இரண்டுமே நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.. பாதியில் பெரைரா பலியாவது அதிர்ச்சி என்றால், இறுதியில் வக்கீல் துரோகத்திற்கு விலை போவது யதார்த்தம்…

எண்பதுகளில் கதை நடக்கும் காலகட்டத்திற்கே நம்மை அழைத்து செல்கிறார் ஒளிப்பதிவாளர் சூர்யா. இமானின் இசையும் அதே காலகட்டத்திற்கான ஓட்டத்துடன் பயணித்திருக்கிறதுஆனாலும் பாடல்கள் மனதை அவ்வளவாக வருடவில்லை..

இதுபோன்ற கதைகளில் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய பல கிளிஷேக்களும் தவறாமல் இடம் பெறுகின்றன. பார்த்திபனின் போராட்ட யுக்தியும் அதற்கு விஷ்ணு தன்னையே தியாகம் செய்வதும் புதுசு தான் என்றாலும், ‘மாவீரன் கிட்டு’ என்கிற டைட்டிலுக்கு ஏற்றதாக விஷ்ணுவின் கேரக்டர் அமையவில்லை என்பது மிகப்பெரிய குறை… விஷ்ணுவின் கலெக்டர் கனவு நனவாகி இருப்பதாக கதையை நகர்த்தியிருந்தால் டைட்டில் கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கலாமோ என்னவோ..

குறைகள் சில இருக்கின்றன தான்.. ஆனால் சுசீந்திரன் நல்ல ஒரு படத்தை கொடுத்துள்ளார் என்பது மட்டும் நிச்சயம்.

மாவீரன் கிட்டு என்பதை தியாகி கிட்டு என மாற்றியிருந்தால் சரியான தலைப்பாக இருந்திருக்கும்.