சகாப்தம் படத்தை தொடர்ந்து விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் இரண்டாவதாக வெளியாகியுள்ள படம் ‘மதுரவீரன்’.. ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படம் சண்முகபாண்டியனை அடுத்த படியில் ஏற்றியுள்ளதா..?
திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து தாயுடன் சொந்த ஊரான மதுரை பக்க கிராமத்துக்கு திரும்புகிறார் சண்முகபாண்டியன். வந்த இடத்தில் பல வருடங்களுக்கு முன் கொல்லப்பட்ட தனது தந்தை சமுத்திரக்கனியின் மரணத்துக்கு காரணமான உண்மையான கொலையாளி யார் என்று தேடுகிறார்.
அத்துடன், அவரது மரணத்தால் பல வருடங்களாக நின்றுபோயிருந்த ஜல்லிக்கட்டையும் மீண்டும் நடத்த முயற்சி எடுக்கிறார். ஊருக்குள் இரண்டு சாதியினரும் எங்களுக்குத்தான் மரியாதையை என பிரிந்து கிடக்க அவர்களை ஒன்றுசேர்க்க முயல்கிறார்.
இந்தநிலையில் சமுத்திரக்கனியை கொன்றதாக ஜெயிலில் இருக்கும் குற்றவாளி ரிலீஸாகி வெளியே வந்ததும் அவரும் கொல்லப்படுகிறார். அப்படியானால் சமுத்திரக்கனியை கொன்றது யார்..? எதற்காக..? தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் விதமாக சண்முகபாண்டியனால் ஜல்லிக்கட்டை நடத்த முடிந்ததா என்பது மீதிப்படம்.
கதையின் மாந்தர்களாக, கிராமத்து மனிதர்களாக உலாவாருபவர்கள் மத்தியில் சண்முகபாண்டியன் மட்டும் தனித்து நிற்கிறார். அதற்கு அவரது உயரம் மட்டுமே காரணம் அல்ல. சண்டைக்காட்சிகள் அவருக்கு கைகொடுக்கின்றன. பாலா போன்ற இயக்குனர்களின் கைகளில் சிக்கி மீண்டுவந்தால் புதிய சண்முகபாண்டியன் கிடைப்பாரோ என்னவோ..? பிளாஸ்பேக் காட்சிகளில் இன்னொரு நாயகராக வரும் சமுத்திரக்கனி, ஊருக்கு நல்லவர் கேரக்டர் என்றால் சும்மா விடுவாரா என்ன..? குறைவற செய்துள்ளார்.
நாயகி என தனித்து தெரியாமல் ஊர்க்கார பெண்போல வலம் வருகிறார் மீனாட்சி.. வேல ராமமூர்த்தி, தேனப்பன், மாரிமுத்து அனைவரும் கதையை தாங்கி பிடிக்கின்றனர். பாலசரவணன், மொட்ட ராஜேந்திரன் காமெடி என்கிற பெயரில் ஒப்பேற்றுகின்றனர்.
ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட்ட ஒரு ஊரில் அதை நடத்துவதற்கும் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் என்னென்ன அரசியல் நடக்குமோ அதை விலாவரியாக புட்டுப்புட்டு வைத்துள்ளார்கள். சமுத்திரக்கனியை கொன்றது யார் என்கிற ட்விஸ்ட்டை கடைசிவரை யூகிக்க முடியாதவாறு கொண்டுசென்றிருக்கிறார்கள்.
வாடிவாசல் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு பிரச்சனை தான் கதை என்பதால் கடந்த வருடம் நடைபெற்ற மெரீனா புரட்சியை சாமர்த்தியமாக இணைத்த இயக்குனர் பி.ஜி.முத்தையா, அதில் விஜய் பேசும் ‘பீட்டா’ வசனத்தை இணைத்திருப்பது வேண்டுமென்றே திணித்தது போல இருக்கிறது.
ஒரு சில குறைகள் இருந்தாலும் அலுப்பு தட்டாமல் நகர்வது படத்திற்கு பிளஸ் பாயின்ட்.