ஆண்களின் பள்ளிப்பருவ நட்பு பல வருடங்கள் வரை தொடர்வது உண்டு.. ஆனால் பெண்களின் பள்ளிக்கால நட்பு..? இதைத்தான் ஆண்களின் முகத்தில் அறைந்தாற்போல் சொல்லியிருக்கிறது ‘மகளிர் மட்டும்’..
தன வருங்கால மாமியார் ஊர்வசியின் பள்ளிப்பருவ தோழிகளையும் அவர்களது குறும்புகளையும் பற்றி ஜோதிகாவுக்கு தெரிய வருகிறது.. துறுதுறு இயல்புடைய அவர், ஊர்வசியின் தோழிகளான பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரை மீண்டும் சந்திக்க வைத்து அவர்கள் வாழ்க்கையில் மீண்டும் ஒரு வசந்தத்தை மலரச்செய்ய முயற்சி எடுக்கிறார்.. அதன்பின் நடந்தது என்ன..? இதுதான் மொத்தப்படமும்.
ஜோதிகா இந்தப்படத்தில் முன்னைவிட இளமையாக தெரிகிறார்.. குறும்பான நடிப்பிலும் எந்த மாற்றமும் இல்லை.. படம் முழுக்க கோபம், வருத்தம், சோகம் என எதுவுமே இல்லாமல் ஜாலியான நபராகவே அவரை காட்டியிருப்பது மட்டுமே யதார்த்தம் மீறியதாக இருக்கிறது.
மருமகளுடன் ஜாலி கேலியாக பழகும் ஊர்வசி கதாபாத்திரம் படம் முழுக்க கலகலப்பூட்டுவதாகவே அமைந்துள்ளது குழந்தை பாக்கியம் இல்லாமல், குடிகார கணவனையும் கவனித்துக்கொண்டு மாமியாரின் ஏச்சும் பேச்சும் கேட்டாலும் அவரின் கடைசி நாட்களை முகச்சுளிப்பு இல்லாமல் பராமரிக்கும் மருமகளாக சரண்யா நாம் பல வீடுகளில் பார்க்கும் நடமாடும் பாத்திரம் தான்.
தமிழ்மணம் மாறாத, அதேசமயம் முரட்டு வட இந்திய குடும்பத்தில் தனது வாழ்க்கையை செலவிட்டு குடும்பத்தலைவியாக மாறிவிட்ட கணவன், மகனுக்கு பயந்து வாழ்க்கை நடத்தும் கேரக்டரில் பானுப்ரியா கச்சிதமாக பொருந்துகிறார். பானுப்ரியாவின் கணவராக வரும் நாசரும், மகனாக நடித்துள்ள பாவல் நவகீதனும் வட இந்திய தமிழ் கலாச்சாரத்தை தங்களது குணாதிசயங்களில் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
தாயின் அருமையை பாவல் நவகீதன் உணரும் காட்சியும் அவர் கதறி அழுவதும் நெகிழ வைக்கிறது. குடிகாரர் என்றாலும் சலம்பல் எல்லாம் பண்ணாமல், கிடாரை எடுத்துக்கொண்டு பாட்டுப்பாடுகின்ற லிவிங்ஸ்டன் கேரக்டரும் கலகப்பூட்டுகிறது.. ஜோதிகாவின் வருங்கால கணவராக, கொஞ்ச நேரமே வந்தாலும் சஸ்பென்ஸ் என்ட்ரி கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார் மாதவன்.
ஜிப்ரானின் இசையில் ‘அடி வாடி திமிரா’ பாடல் உட்பட மற்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. மணிகண்டனின் ஒளிப்பதிவில் வடநாட்டுக்கு டூர் சென்று வந்த உணர்வு ஏற்படுவதை மறுக்க முடியாது. அந்த மூன்று சிறுமிகளின் பள்ளி வாழ்க்கையில் தான் தான் என்ன ஒரு கலாட்டா..? குறிப்பாக தோழிகள் மூவரின் பள்ளிப்பருவ காட்சிகளை ரசனையுடன் வடிவமைத்துள்ளார் இயக்குனர் பிரம்மா.
வாழ்நாள் முழுதும் தங்களது குழந்தைகளின் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் உங்களது தாயின் மனதில் புதைந்து கிடக்கும் சந்தோஷத்தை வெளிக்கொணர நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என ஒரு கேள்வியை கேட்டு நம்மை அனுப்பி வைக்கிறார் இயக்குனர் பிரம்மா..