கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை ஹைடெக்காக படமாக்கினால் அதுதான் மாயவன்.. சாதாரண குடும்பத்தளைவியான் ஒரு பெண் கொல்லப்பட அந்த கேசை துப்பறியும் போலீஸ் அதிகாரியான சந்தீப்புக்கு, அடுத்தடுத்து நிகழும் அதேபோன்ற கொலைகளில் ஒரே ஆளின் கைவரிசையாக இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்படுகிறது.. விசாரணையில் சந்தேகிக்கும் ஆள் ஒரு விஞ்ஞானி என்பதும் இந்த கொலைகள் நடப்பதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார் என்பதும் தெரிய வருகிறது.
பின் எப்படி இந்த கொலைகள் நடந்தது என்பதைவிட, இன்னும் நடக்கப்போகிறது என்கிற அதிர்ச்சி தகவலும் தெரியவருகிறது. இந்த கொலைகளை யார் பண்ணுகிறார், அவர்களது நோக்கம் என்ன என்கிற தேடலின் முடிவில் சந்திப்புக்கு கிடைக்கும் விடை அவருக்கு மட்டுமல்ல நமக்கும் அதிர்ச்சி தருகிறது. இதன் முடிவு என்ன என்பதை காணவேண்டும் என்றால் நீங்கள் தியேட்டருக்கு சென்றே ஆகவேண்டும்.
இன்ஸ்பெக்டர் குமரனாக சந்தீப் கிஷன். தன்னுடைய ரோலுக்கான நியாயமான பங்களிப்பை தந்திருக்கிறார். ஆனால் போலீஸ் அதிகாரிக்கான கம்பீர குரல் மட்டும் மிஸ்ஸிங். சைக்யாட்ரிஸ்டாக லாவண்யா திரிபாதி. அழகு.. நடிக்கவும் தெரிகிறது.
க்ளைமாக்ஸ் நெருங்கும் வேளையில் ராணுவ அதிகாரியாக என்ட்ரி கொடுக்கும் ஜாக்கி ஷெராப் அதிரவைக்கிறார். படம் முழுதும் லைட்டான காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த ரோலில் பளிச்சிடுகிறார் பகவதி பெருமாள் என்கிற பக்ஸ்.. படத்தில் தங்களை அறியாமலேயே வில்லன்களாக உருமாறும் ஜிம் ட்ரெய்னர் சாய்தீனா, மேக்கப் மேன் மைம் கோபி, தன்னம்பிக்கை வகுப்பெடுக்கும் டேனியல் பாலாஜி என மூவரின் நடிப்புமே மிரட்டல் ரகம்..
ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியாளன் எந்த அளவுக்கு தன்னம்பிக்கையும் திமிராகவும் இருப்பான் என்பதை தனது கெத்தான நடிப்பால் வெளிபடுத்தியுள்ளார் அமரேந்திரன். கூடவே புரிந்துகொள்ள மிக கஷ்டமான அந்த ஆராய்ச்சியை மிக எளிதாக விளக்கும் கேரக்டரில் ஜெயபிரகாஷும் ஒரு அருமையான ஆசானாகவே தெரிகிறார்.
ஒரு விஞ்ஞானி நீண்ட காலம் வாழ ஆசைப்படுவது சரி.. ஆனால் அப்படி மாறும்போது மற்றவர்களை ஏன் கொடூரமானவர்களாக மாற்றவேண்டும் என்பது மட்டும் தான் புரியவில்லை. மற்றபடி காமெடி, செண்டி மென்ட்டுக்கு இடம் தராமல் மொத்தப்படத்தையும் விறுவிறுப்பான த்ரிலராகவே நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் சிவி.குமார். அதற்கு நலன் குமாரசாமியின் திரைக்கதையும் ஜிப்ரானின் இசையும் கோபி அமர்நாத்தின் ஒளிபதிவும் ரொம்பவே கைகொடுத்திருக்கிறது. ஒரு சுவாரஸ்யமான த்ரில்லரை விரும்பும் ரசிகர்கள் தாராளமாக மாயவன் படத்திற்கு உடனே டிக்கெட் போடலாம்..