மியாவ் – விமர்சனம்


செத்துப்போனவர்கள் விதவிதமான ரூபங்களில் வந்து பழிவாங்குவதை இத்தனை நாட்கள் பார்த்துவந்த தமிழ் ரசிகர்களுக்கு, பேய் ஒன்று குட்டிபூனை உருவத்தில் பழிவாங்கும் வித்தியாசமான(!) கதையை தந்திருக்கிறார் இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி..

கதை..? அபார்ட்மெண்ட்டில் எப்போதும் ஒன்றாக சுற்றும் நான்கு விடலைப்பையன்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். ஆரம்பத்தில் அங்கே குடியிருக்கும் மாடல் அழகியான ஊர்மிளா காயத்ரி மீது மற்ற பையன்கள் சந்தேகப்படுகின்றனர்.. ஆனால் ஊர்மிளாவோ, தானே சுயமாக இந்த விஷயத்தில் களமிறங்கி இந்த கொலையை செய்வது அந்த அபார்ட்மெண்ட்டில் இருக்கும் பூனைதான் என்பதை கண்டுபிடிக்கிறார்.. மீதி இருக்கும் இரண்டு பையன்களை எச்சரிக்கை செய்வதற்குள் அதில் ஒருவனை பூனை கொல்கிறது..

பூனையில் புகுந்திருக்கும் பேயை விரட்டுவதற்காக உகாண்டாவில் இருந்து ஹைடெக் மந்திரவாதி ஒருவர் வருகிறார்.. பூனையில் புகுந்திருப்பது இளம்பெண்ணின் ஆவி என்பதையும் அந்தப்பெண்ணின் கோர மரணத்திற்கு காரணமான இந்த நால்வரையும் அது பழிவாங்க வந்திருப்பதையும் கண்டுபிடிக்கிறார். பூனையிடமிருந்து அந்த நான்காவது பையனை காப்பாற்ற நினைக்கிறார் மந்திரவாதி. அவரது முயற்சி பலித்ததா என்பது க்ளைமாக்ஸ்.

முற்றிலும் புதுமுகங்களை வைத்தும் அதைவிட ஒரு பூனையை நம்பியும் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி.. புதுமுகங்களான ராஜா, சஞ்சய், ஹெய்டன், குமார் ஆகிய நால்வரும் விடலைப்பையன்களுக்கே உள்ள துடிப்பையும் வில்லத்தனத்தையும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளனர். மாடல் அழகியாக வரும் ஊர்மிளா காயத்ரி கவர்ச்சியை குறைத்து, புத்திசாலித்தனத்தை அதிகம் வெளிப்படுத்தி சபாஷ் வாங்குகிறார்..

இளைஞர்களின் காமப்பசிக்கு இரையாகும் ஷைனி கொஞ்ச நேரமே வந்தாலும் அவரது அழகு முகம் மனதில் நீண்ட நேரம் நிற்கிறது. உகாண்டா மந்திரவாதி பேயை கண்டுபிடிக்க பயன்படுத்தும் ஹைடெக் சாதனங்கள் அசத்துகிறது.. செல்பி என்கிற அந்த பூனையும் தனது பங்கிற்கு மிரட்டியுள்ளது.. பேய்ப்படங்களுக்கான அதீத த்ரில் இல்லாததும், வழக்கமான பிளாஸ்பேக்கும், மெதுவாக நகரும் முன்பாதி கதையும் தான் படத்தை பலவீனப்படுத்துகின்றன. பூனைகளுக்கென ஒரு பாடலை உருவாக்கி, அதில் பூனைகளை ஆடவிட்டிருப்பது சூப்பர். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமே டைரக்டர்..?