மோ – விமர்சனம்


சுரேஷ் ரவியும் ரமேஷ் திலக்கும் ஏதாவது ஒரு வீட்டில் பேய் இருப்பதை போல நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அதை அங்கிருந்து விரட்டுவதாக கூறி காசு பார்ப்பவர்கள்.. இவர்களுக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டான ஐஸ்வர்யா ராஜேசும், அவரது மேக்கப்மேனான முனீஸ்காந்தும் உடந்தை. கூடவே தர்புகா சிவாவையும் கூட்டு சேர்த்து கொள்கிறார்கள்.

ரியல் எஸ்டேட் பார்ட்டியான செல்வா வசிக்கும் அபார்ட்மென்ட்டில் பேய் இருப்பதாக நாடகமாடி, அவரை நம்ப வைத்து பணம் கறக்கிறார்கள்.. ஆனால் டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டு இவர்கள் உளறியதில் விஷயம் செல்வாவுக்கு தெரிய அவர்களை இன்னொரு வீட்டில் பேய் விரட்டும்போது கையும் களவுமாக பிடிக்கிறார் செல்வா. அவர்களை போலீஸில் சிக்கவைக்காமல் இருக்க, பதிலுக்கு தனக்கு உதவும்படி உத்தரவிடுகிறார்..

பாண்டிச்சேரியில் உள்ள பழைய பள்ளிக்கூடம் அமைந்துள்ள இடம் ஒன்றை வாங்க விரும்புகிறார் செல்வா. ஆனால் அதை ஏற்கனவே வாங்குவதற்காக துடித்துக்கொண்டு இருக்கும் எதிர் பார்ட்டியான மைம் கோபியை, பேய் பயம் காட்டி அதை வாங்கவிடாமல் செய்யவேண்டும் என்கிறார். அதன்படி பாண்டிச்சேரிக்கு செல்லும் இந்த டீம், தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, மைம் கோபியை விரட்டுகிறார்கள்..

ஆனால் பின்னர்தான் தெரிகிறது அந்த பள்ளிக்கூடத்தில் உண்மையிலேயே பேய் இருக்கிறது என்கிற விஷயம்.. செல்வாவுடன் சேர்த்து இந்த டீமை ஆட்டம் காட்டும் அந்த ஒரிஜினல் பேய் உண்மையில் யார், அதனிடமிருந்து இவர்கள் தப்பித்தார்களா என்பதை காமெடி ப்ளஸ் த்ரில் கலந்து சொல்லியிருக்கிறார்கள்..
படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவியை இதற்கு முன் எந்தப்படத்திலும் பார்த்ததாக ஞாபகமில்லை என்றாலும், படம் ஆரம்பம் முதலே நம் மனதில் ஒரு கதாபாத்திரமாகவே ஒட்டிக்கொள்வதால் பாஸ்மார்க்.. இல்லையில்லை பர்ஸ்ட் மார்க்கே வாங்கிவிடுகிறார்.. ரமேஷ் திலக்கின் காமெடியும் இதில் சோடை போகவில்லை..

தர்புகா சிவா சின்னச்சின்ன டைமிங் மற்றும் மேனரிசங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். மேக்கப் மேனாக வரும் முனீஸ்காந்த் தான் பாவம் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்.. அழகு ஐஸ்வர்யா ராஜேஷை பாதி நேரம் பேயாகவே காட்டி பயமூட்டி இருக்கிறார்கள். நீண்ட நாளைக்குப்பின் பழைய செல்வாவை இதில் பார்க்க முடிகிறது.. பேய்ப்படம் என்றால் கூப்பிடுங்கள் மைம் கோபியை என சொல்லும் அளவுக்கு பேய்களுடனேயே ஐக்கியமாகிவிட்டார் மனிதர். குறைவான நேரம் வந்தாலும் வழக்கம்போல கலகலப்பூட்டுகிறார் யோகிபாபு.

படத்தை காமெடியும் விறுவிறுப்புமாக இயக்கியுள்ளார் இயக்குனர் புவன் ஆர். நல்லான்.. பேய் தான் பேயாக அலைவதற்கு இவர் வைத்திருக்கும் காரணம் இருக்கிறதே.. அடடா.. இதுவரை எந்தப்படத்திலும் வராதது.. யாராலும் யூகிக்க முடியாதது.. மொத்தத்தில் ஜாலியாக பார்க்க ஒரு நல்ல த்ரில் படம் தான் இந்த ‘மோ’.