மொட்ட சிவா கெட்ட சிவா – விமர்சனம்


மத்திய மந்திரி ஒருவரை தனது அதிரடி நடவடிக்கையால் காப்பாற்றும் போலீஸ் அதிகாரி லாரன்ஸ், அதற்கு கைமாறாக சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கேட்கிறார். சென்னைக்கு வந்ததில் இருந்து கமிஷனர் சத்யராஜை மதிக்காமல் அவருக்கு அவமரியாதை செய்யும் விதமாகவே நடந்துகொள்கிறார் லாரன்ஸ்.

ஒருபக்கம் சென்னையை ஆட்டிப்படைக்கும் எம்.பியும் தாதாவுமான ஜிகேவை (அசுதோஷ் ராணா) கமிஷனர் சத்யராஜ் எதிர்க்க, இனொரு பக்கம் ஜி.கேவுக்கு ஆதரவாக நின்று கமிஷனரை அலட்சியப்படுத்துகிறார் லாரன்ஸ்.. இந்நிலையில் தனது தங்கையாக தத்தெடுத்த பெண் ஜிகேவின் தம்பியால் சீரழித்து கொல்லப்பட, அந்த உண்மை சத்யராஜ் மூலமாக லாரன்ஸுக்கு தெரியவருகிறது. அன்றுமுதல் சத்யராஜை எதிர்ப்பதை கைவிடும் லாரன்ஸ், ஜிகேவுக்கும் அவர் தம்பி வம்சிக்கும் குடைச்சலை கொடுக்க ஆரம்பித்து அவர்களை உள்ளே தள்ள முயல்கிறார்..

ஆனால் ஜிகே தனது பவரை எல்லாம் லாரன்ஸுக்கு எதிராக திருப்புகிறார்.. இதில் லாரன்ஸ் தப்பித்து ஜிகேவுக்கு பாடம் புகட்டினாரா, அவர் தம்பிக்கு லாடம் கட்டினாரா என்பதும் சத்யராஜ் மீது லாரன்ஸுக்கு ஏன் வெறுப்பு என்பதும் அதற்கான விடையும் தான் மீதிக்கதை..

விக்ரமின் ‘பொறுக்கி’ போலீசையும் சூர்யாவின் ‘சிங்கம்’ போலீசையும் மிக்ஸ் பண்ணியதில் ஒரு புதுவிதமான கேரக்டரை பிரதிபலித்திருக்கிறார்.. ஆனால் அதை ஜீரணிப்பதற்கு நமக்குத்தான் சற்றே சிரமமாக இருக்கிறது. லாரன்ஸுக்கு போலீஸ் வேடம் நன்றாகவே பொருந்துகிறது என்றாலும் லாரன்ஸின் அலட்டல்கள், குறிப்பாக பத்திரிகையாளர் சந்திப்பிலும் போலீஸ் அதிகாரிகள் சந்திப்பிலும் அவர் நடந்துகொள்ளும் விதம் யதார்த்தம் மீறிய ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதிலும் சட்டையின் இரண்டு பட்டன்களை கழட்டிவிட்டபடி கமிஷனர் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்வதெல்லாம் நம்ம தமிழ்சினிமாவுக்கே புதுசுதான்.

கமிஷனராக வரும் சத்யராஜுக்கு கரெக்டான வேடம் என்றாலும் பெரும்பாலான காட்சிகளில் அவர் லாரன்ஸின் அதிரடிகளை மட்டுமே வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பது அலுப்பை தருகிறது.. லாரன்ஸிடம் உண்மைகளை சொன்ன பிறகு வரும் காட்சிகளில் பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சத்யராஜ்.

சம்மர் சீசன் ஆரம்பித்துவிட்டது என்பதற்காக நிக்கி கல்ராணி இப்படியா கவர்ச்சியிலும் ஆடை குறைப்பிலும் இறங்கி அடிக்கவேண்டும்.. அதிலும் தொப்புள் தெரிய தாவணி கட்டும் பத்திரிக்கை நிருபர், நிக்கி ஒருவராகத்தான் இருப்பார்.. என்னே டைரக்டரின் கற்பனை வளம்..?

வழக்கமாக வார்த்தைகளை மென்று தின்றபடி பார்ப்பவர்களுக்கு எல்லாம் சவால்விடும் அதிகாரம் படைத்த வில்லனாக அஷுதோஷ் ராணா.. இவரிடம் இரண்டு மூன்று நாட்கள் கால்ஷீட் வாங்கி அவசர அவசரமாக படப்பிடிப்பை நடத்தியதுபோல பெரும்பாலும் ஒரே பங்களாவுக்குள் இருந்து சவால்விடுவதோடு நின்று விடுகிறார்.

சகல அதிகாரமும் படைத்த கெட்டவன் ஒருவரின் தம்பி எப்படி இருப்பார்…? அப்படி அனைத்து கல்யாண குணங்களும் நிறைந்த கதாபாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா கச்சிதம். லாரன்ஸின் ரெகுலர் டீமான கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, மயில்சாமி, மனோபாலா இவர்களுடன் சதீஷ், மொட்ட ராஜேந்திரன், தம்பி ராமையா என பலரும் தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முயன்று இருக்கிறார்கள்.. லாரன்ஸின் ‘பார்த்தாயா’ என்கிற ஆம்புலன்ஸ் ட்ரீட்மென்ட் அப்படியே ‘சிவாஜி’ படத்தின் ஆபீஸ் காமெடியின் உல்டா.

சர்வேஸ் முராரியின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வேகம் கொடுக்கிறது. அம்ரீஷின் இசையில் ‘ஹரஹர மஹா தேவகி’ பாடலும் அதற்கு லாரன்ஸ்-லட்சுமி ராயின் ஆட்டமும் சூப்பர்..

லாரன்ஸை அதிரடி போலீஸ் ஆக காட்டவேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் இடம்பெறும் அரைமணி நேர காட்சிகள் எந்தவித லாஜிக்கும் இல்லாத சரியான பூச்சுற்றல் ரகம்.. அதை கொஞ்சம் கருத்தாக கையாண்டு இருக்கலாம். அதிலும் எம்.பி, மத்திய மந்திரி எவரையுமே சட்டை பண்ணாத லாரன்ஸ், ரசிகர்களின் எண்ணத்தை மட்டும் சட்டை பண்ணவா போகிறார்..?

இடைவேளைக்குப்பின் சின்னச்சின்ன விஷயங்கலில் ‘அட’ என ஆச்சர்யப்படுத்திய இயக்குனர் சாய் ரமணி, அதனை படம் முழுதும் காட்டியிருந்தால் இந்த மொட்ட சிவா கெட்ட சிவா இன்னும் அதகளப்படுத்தி இருப்பான்.

லாரன்ஸ் முதன்முறையாக அதிரடி போலீஸாக நடித்துள்ள படம் என்பதாலும் பல முறை ரிலீஸ் தேதி தள்ளிப்போய் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கும் படம் என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் அந்த எதிர்பார்ப்பில் பாதியைக்கூட நிறைவேறவில்லை என்பதுதான் உண்மை.

ஒரு போலீஸ் படம் எப்படியெல்லாம் எடுக்கப்பட்ட கூடாது என்பதற்கு இந்தப்படத்தை சரியான உதாரணமாக சொல்லலாம். பேசாமல் கொஞ்ச நாளைக்கு லாரன்ஸ் வழக்கம்போல அவரது டைரக்சனிலேஎ நடிப்பதுதான் நலம் என்றே தோன்றுகிறது.