அதிரடி போலீஸ் கேரக்டரில் ஜோதிகா, செம்பட்டை தலையுடன் ஜி.வி.பிரகாஷ் என எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் இல்லாமல் வெளியாகியுள்ள ‘நாச்சியார்’ ரசிகர்களுக்கு நிறைவை தந்துள்ளதா..?
பதைபதைப்பில்லாமல், படபடக்க வைக்காமல் ரசிகர்களை படம் பார்க்க வைத்திருக்கும் இயக்குனர் பாலா, தனது பாதையில் இருந்து கொஞ்சம் விலகி இதில் கமர்ஷியல் ரூட்டில் இறங்கியுள்ளார். இதிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கை, அதனுடன் ஊட்டும் அதிகார வர்க்கம் என இரண்டு தளங்களில் பயணிக்கிறார்.
சமையல் வேலைக்கு செல்லும் சாதாரண கூலி வேலையாள் தான் இன்னும் மேஜராகாத ஜி.வி.பிரகாஷ்.. வீட்டுவேலை செய்யும் மைனர் பெண் இவானாவுடன் காதல் ஏற்பட்டு, அதனால் ஒருகட்டத்தில் கற்பமாகிறார் இவானா).. இது வழக்காக மாற, இந்த வழக்கை டீல் செய்யும் போலீஸ் உயரதிகாரி ஜோதிகா, ஜி.வி.பிரகாஷை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி விட்டு, இவானாவை தன்னுடன் வைத்து பராமரிக்கிறார். அந்தப்பெண்ணுக்கு அழகான குழந்தையும் பிறக்கிறது.
அப்போதுதான் ஜோதிகாவுக்கு அந்த குழந்தை பற்றிய அதிர்ச்சியான உண்மை ஒன்று தெரியவருகிறது. அதை ஜோதிகா தனது ஸ்டைலில் எப்படி டீல் செய்கிறார், அதில் ஜோதிகா எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பதுதான் மீதிக்கதை..
அன்பானவள் அடங்காதவள் அசராதவள் என்கிற படத்தை ஜோதிகாவுக்கு தரலாம். அதிரடி போலீஸ் அதிகாரியாக ஜோதிகாவின் அவதாரம் இதுவரை நாம் பார்க்காத ஒன்று. குற்றவாளிகளை போட்டு வெளுத்தெடுக்கும்போது நமக்கே பயம் வருகிறது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானா விஷயத்தில் அவரது கனிவான இன்னொரு முகத்தையும் காட்டியிருப்பதான் மூலம் தனது கேரக்டரை பேலன்ஸ் செய்திருக்கிறார் ஜோதிகா.
இதுநாள்வரை ஹைடெக் விடலைப்பையனாக சுற்றி வந்த ஜி.வி.பிரகாஷை அரை டவுசர் மாட்டிவிட்டு ஆளையே மாற்றிவிட்டார் பாலா. ஜிவிக்கும் அந்த மைனர் பெண்ணுக்குமான காதல் குறும்புகள் ரம்யமாக இருக்கிறது.. சீவி.பிரகாஷை நன்றாக மெருகேற்றியுள்ளார் பாலா.
வெள்ளந்தியான சிரிப்புடன் வளையவரும் இவானா நம்மை முதல் காட்சியிலே வசீகரித்துவிடுகிறார். ஜி.வி.பிரகாஷுடன் அவர் யதார்த்தமாக காதலில் விழுவது எளிய மனிதர்களின் சுபாவத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. போலீஸ் அதிகாரியாக நடிப்பில் மிடுக்கும் கம்பீரமும் காட்டியிருக்கும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தமிழ்சினிமாவுக்கு நல்லதொரு புதுவரவு.
வழக்கமாக பாலா படங்களில் மனதை அதிரவைக்கும் பின்னணி இசையை தரும் இசைஞானி, இது கொஞ்சம் கமர்ஷியல் படம் என்பதால் சற்றே ரிலாக்ஸ் மூடில் பயணித்திருக்கிறார். ஈஸ்வரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டுகிறது.
வயது வந்தவர்களின் காதலே இங்கு பலரால் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இரண்டு மைனர்கள் காதல், அவர்களுக்கு நடக்கும் விபரீதம், அதன் விளைவுகளுக்குக் காரணமானவர்களுக்கான முடிவு ஆகியவற்றை படம் பேச முயல்கிறது, இதில் போலீஸ்காரர்களின் இரண்டு முகங்களையும் நேர்மையாக காட்டியுள்ளார் பாலா. ஒரு போலீஸ் அதிகாரி எங்கே சமரசம் செய்யக்கூடாது, அதேசமயம் எப்படி அவசரப்பட கூடாது என்பதையும் சரியாக கையாண்டு இருக்கிறார்.
பாலாவின் புதிய முகமாக இந்தப்படத்தை பார்க்கலாம். ரசிக்கவும் செய்யலாம்..