நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்


நண்பர்கள், காதல், ரவுடியிசம் என்கிற வழக்கமான கலவையில் மெடிக்கல் சீட் க்ரைம் என்கிற பின்னணியை கொண்டு, ஒரு ஆக்சன் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். சந்தீப், விக்ராந்த் இருவரும் நண்பர்கள்.. சந்தீப்பின் தங்கை மருத்துவ கல்லூரி மாணவியான ஷாதிகாவுடன் விக்ராந்துக்கு காதல்.. சந்தீப் இதற்கு கிரீன் சிக்னல் காட்டினாலும் இதை சந்தீப்பின் அம்மா எதிர்க்கிறார்.

இந்தநிலையில் விக்ராந்தை போட்டுத்தள்ள மிகப்பெரிய ரவுடியான ஹரீஷ் உத்தமன் ஸ்கெட்ச் போடுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அதில் சந்தீப் சிக்குகிறார். ஆனால் பின்னர்தான் தெரிய வருகிறது ஸ்கெட்ச் இவர்கள் இருவருக்கும் இல்லை.. வேறொருவருக்கு என்று.. அந்த வேறொருவர் யார்..? எதற்காக அவரை கொலை செய்ய முயற்சிகிறார்கள் என்பது சஸ்பென்ஸ்..

மாநகரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சந்தீப் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதனைத் தருவதற்கு முயற்சி செய்துள்ளார். தொடர்ச்சியாகவே விக்ராந்த் நடித்துவரும் கதாபாத்திரங்கள் வலுவிழந்த நிலையிலையே அமைந்து வருகின்றது. இப்படத்திலும் அவருடைய கதாபாத்திரம் சரியான முறையில் வடிவமைக்கப்படவில்லை. விக்ராந்த் சுதாரிக்காவிட்டால் கடினம்.

சந்தீப்பின் ஜோடியாக வரும் மெஹ்ரீனும் சரி.. அவரது தங்கையாக வரும் ஷாதிகாவும் சரி.. நம் மனதில் பதியவே மறுக்கிறார்கள். செல்போன் வாங்கினால் கூடவே சார்ஜரும் கட்டாயம் இருக்கும் என்பதுபோல சுசீந்திரன் படத்தில் சூரி.. சில படங்களில் வேகமாக சார்ஜ் ஏறும். இதில் மெதுவாகத்தான் ஏறுகிறது. ஹரீஷ் உத்தமன் தனது பெயரை நிலைநிறுத்திக்கொள்ளும் விதமாக கெட்டப்பை எல்லாம் மாற்றி இதில் வில்லத்தனம் காட்ட முயற்சித்திருக்கிறார். நிச்சயம் வேறு ஏதாவது ஒரு படத்தில் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கும். கோபிநாத் சாயலில் யாரப்பா அந்த போலீஸ் அதிகாரி..? டிபார்ட்மென்ட்டில் அவரைத்தவிர ஆளே இல்லையா..? அட போங்கப்பா..

வழக்கமாக ஹிட்டடிக்கும் இயக்குநர் சுசீந்திரன்,இசையமைப்பாளர் இமான் கூட்டணி மேஜிக் இந்தப்படத்தில் எடுபடவில்லை மெடிக்கல் காலேஜ் சீட், மெரிட் கோட்டா, கௌரவத்திற்காக டாக்டருக்கு படிக்கவைப்பது, அதன் பின்னணியில் நிகழும் பயங்கரம் என அனைத்தையும் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன் ஆனால் இடைவேளை வரை இலக்கில்லாமல் நகரும் கதையால் இதுவும் ஒரு சராசரி படம் என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அதேசமயம் இடைவேளைக்குப்பின் வைத்திருக்கும் ட்விஸ்ட் மூலம் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார் சுசீந்திரன்.. ஆனால் அதை மெயின்டெய்ன் செய்வதில் மெத்தனம் காட்டி கோட்டை விட்டிருக்கிறார் சுசீந்திரன்.

அதுசரி.. நான் மகான் அல்ல, பாண்டியநாடு தந்த சுசீந்திரன் எங்கே போனார்..?