மிகப்பெரிய லாயர் அஜித்.. தனது மனைவி இறந்த சோகத்தில் பணியை விட்டுவிட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி வீட்டிலேயே முடங்கிக் கிடப்பவர். அவரது வீட்டுக்கு எதிர்வீட்டில் உள்ள வேலைக்குச் செல்லும் பெண்கள் தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் ஆண்ட்ரியா என்கிற ஒரு பெண். சுதந்திரமான செயல்பாடுகள் கொண்ட இந்த மூவரும் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்ட சமயத்தில், ரிசார்ட் ஒன்றில் பணக்கார இளைஞன் ஒருவன் தவறாக நடக்க முயற்சிக்க அவனை தாக்குகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதைத்தொடர்ந்து வரும் நாட்களில் பெண்கள் மூவருக்கும் மிகப்பெரிய டார்ச்சர்களை கொடுக்கின்றனர் எதிரிகள். இதை கவனித்த அஜித் தானாகவே இவர்களது பிரச்சினையை புரிந்து கொண்டு, இவர்களுக்கான நியாயம் கேட்க சட்டரீதியாக களத்தில் இறங்குகிறார். பணத்திமிரில் பெண்களை எப்படி எல்லாமோ இழிவுபடுத்தும் அந்த கூட்டத்தை, சட்டத்தின் பிடியில் ஒப்படைத்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க அஜித்தால் முடிந்ததா என்பது மீதிக்கதை.
வழக்கம்போல அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான ஒரு பெண் இப்படி பாலியல் வன்முறைக்கு ஆளாவதும் அந்தப் பெண்ணுக்காக போராடி நீதி பெற்றுத் தருவதையும் தான் இதுவரை வந்த பல படங்களில் பார்த்துள்ளோம்.. ஆனால் ஜாலியாக பார்ட்டிக்கு செல்வது, தண்ணி அடிப்பது, ஆண் நண்பர்களுடன் பழகுவது என மேற்கத்திய கலாசாரத்தை கடைபிடிக்கும் பெண்கள் தாங்களாகவே வலிய இழுத்துக் கொண்ட ஒரு பிரச்சினைக்காக, அவர்களை போராடி காப்பாற்ற வேண்டுமா என்கிற கேள்வியே ஆரம்பத்தில் நமக்கு எழுகிறது..
ஆனால் ஒரு கட்டத்தில் பெண்கள் இப்படி சகஜமாக யாருடனும் பழகக் கூடாதா, அப்படி பழகினால் அதை தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டுமா, அப்படி பார்க்கும் உரிமையை, அதை அளவுகோலாக வைத்து பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்யும் உரிமையை ஆண்களுக்கு யார் கொடுத்தது என்கிற ஆத்திரமும் ஆண்கள் மேல் எழுகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த வழக்கில் ஒரு லாயர் ஆக அஜித், பெண்கள் பக்கம் எடுத்து வைக்கும் அழகான வாதங்கள் தான்.. பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற மரபை கிண்டலாக போட்டு உடைத்து தள்ளும் இடத்தில் அமைதியாக இருந்து அப்ளாஸ் வாங்குகிறார் அஜித்.
இந்த கதையில், இந்த கதாபாத்திரத்தில் அஜித் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் பெண்களின் உரிமை, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செய்தி சரியான முறையில் வெளியே சென்று சேர்ந்து இருக்க வாய்ப்பு இல்லை.. அது அஜித் என்பதனாலேயே சாத்தியமானது என்று கூட சொல்லலாம்..
நாங்கள் இப்படித்தான் எங்கள் வாழ்க்கையை வாழ்வோம் என்கிற ரீதியில் இன்றைய நவநாகரீக பெண்களின் பிரதிபலிப்பாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் ஆண்ட்ரியா என்று அழைக்கப்படுகிற அந்த இன்னொரு பெண் மூவருமே படம் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை தங்களது பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளார்கள்.. ஒரு பெண்ணுக்கு வீம்பும் கோபமும் யோசிக்கும் தன்மையும் இல்லாவிட்டால் அது எந்த அளவுக்கு விபரீதத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும் என்பதற்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரம் மிகச்சிறந்த உதாரணம். அதை அவர் வெளிப்படுத்திய விதம் அபாரம்..
புதிய வரவாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து உள்ள ரங்கராஜ்பாண்டே இடைவேளைக்கு பின்பு அரசு தரப்பு வக்கீலாக தனது முதல் கதாபாத்திரத்தை கம்பீரமாக செய்து கைதட்டல் வாங்குகிறார்.. என்னதான் பாலிவுட் நடிகை என்றாலும் வித்யாபாலன் வந்து செல்லும் சில நிமிட காட்சிகள் நம் மனதில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.. அஜித்துக்கும் அவருக்குமான காட்சிகளில் இன்னும் கூடுதல் அழுத்தம் கொடுத்து இருக்கலாம்..
படத்தின் இசை யுவன் சங்கர் ராஜா அவ்வப்போது பாடல்களின் மூலமும் காட்சிகளை மென்மையாக கடத்துகிறார்.. ஒரு நான்ஸ்டாப் சண்டைக் காட்சி அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தனக்கு தோன்றியவற்றை மிக அருமையான முறையில் படமாக இயக்கி வரும் இயக்குனர் ஹெச்.வினோத், இந்த படத்தில் தன்னிடம் வலிந்து கொடுக்கப்பட்ட ஒரு கதையை தனது பாணியில் ரசிகர்களுக்கு கொடுக்க முயற்சித்து ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்.. படத்தின் நீளத்தை மட்டும் சற்றே குறைத்திருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்.. மற்றபடி அஜித் ரசிகர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் போற்றிக் கொண்டாடும் ஒரு படமாகத்தான் இந்த நேர்கொண்டபார்வை வெளியாகியிருக்கிறது