மனோதத்துவ டாக்டரான ஆதித்யா மேனன், சித்தி கொடுமை காரணமாகப் பெண்களை வெறுப்பவர். ஊருக்கு வெளியே, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் ஜோடிகளை இந்த தனி கிளினிக்கிற்கு வரச்சொல்லி காதலர்களை பிரித்து அனுப்புவதுதான் தலையாய பணி.
இந்த நேரத்தில் தான் கதாநாயகன் ரஃபி தன் காதலி மீனாட்சிக்கு இருக்கும் மன அழுத்த பிரச்னை காரணமாக அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு செல்லும் இவர்களை ஆதித்யா மேனன் சிகிச்சை என்ற பெயரில் அடைத்து வைக்கிறார். ஏற்கனவே இவர்களைப் போல, பல ஜோடிகள் அங்கு அடைத்து வைக்கப்பட்டு சிகிச்சை என்ற பெயரில் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள்.
இதனால் இவரது சைக்கோ ட்ரீட்மென்ட். இங்கு மாட்டிக் கொள்ளும் ரஃபியும் மீனாட்சியும் தப்பிக்கத் திட்டம்போடுகிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை.
பார்வை ஒன்றே போதும்’, ‘மிரண்டவன்’ ஆகிய படங்களை இயக்கிய முரளி கிருஷ்ணா இயக்கத்தில் புதுமுகம் ரஃபி, ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ நாயகி மீனாட்சி, மீரா நந்தன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘நேர்முகம்’.
நாயகன் புதுமுகம் ரஃபிக்கு ஹீரோவுக்கான அம்சங்கள் இருந்தாலும் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நாயகிகள் மீனாட்சி, மீரா நந்தன் இருவரும் தனகளது பங்களிப்பை சரியாக செய்துள்ளார்கள். காவல்துறை அதிகாரியாக பாண்டியராஜன் காமெடி ஏரியாவை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
டாக்டர் சைக்கோவாக நடந்துகொள்வதற்கான காரணங்களை இன்னும் அழுத்தமாக காட்டியிருக்கலாம். படத்தின் ஆரம்பத்தில் மிகப்பெரிய திகிலுடன் படம் தொடங்கப்பட்டாலும், அதன்பிறகு சாதரணமாகவே படம் நகர்வதை திரைக்கதையில் சரிக்கட்ட தவறவிட்டுள்ளார்கள்… இரண்டு வில்லன்கள், இரண்டு பிளாஷ்பேக், கொலையாளி யார் என்ற திருப்பம் என்று சின்னசின்ன சுவாரஸ்யங்களை இன்னும் அழகாக கோர்த்திருந்தால் நேர்முகம் இன்னும் தெளிவான முகமாக அமைந்திருக்கும்.