ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன் – விமர்சனம்


விஜய்சேதுபதி படம் என்றாலே வித்தியாசமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் கௌதம் கார்த்திக்கும் அவருடன் இணைந்து நடித்துள்ளதால் கூடுதல் ஆவலை தூண்டியுள்ள படம் இது.. ரசிகர்களின் ஆவலுக்கேற்ற தீனி கொடுத்துள்ளார்களா..?

ஆந்திர மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் எமசிங்கபுரம் என்கிற கிராமத்தில் வசிக்கும் கள்வர் கூட்டத்தை சேர்ந்த தலைவர் விஜய்சேதுபதி.. எந்த வன்முறையையும் உபயோகிக்காமல் நியாயமாக உழைத்து திருடும் விஜய்சேதுபதி, தனது கூட்டத்தை சேர்ந்த ரமேஷ் திலக்கையும் ராஜ்குமாரையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு திருட வருகிறார்.

வந்த இடத்தில் கல்லூரியில் படிக்கும் நிஹாரிகாவை பார்த்ததும் வந்த வேலையை விட்டுவிட்டு அவரை தனது கிராமத்திற்கு கடத்தி செல்கிறார். அதற்கு கொஞ்ச நாளைக்கு முன்னர்தான் நிஹாரிகாவுடன் அறிமுகமாகி இருந்த கௌதம் கார்த்திக், தனது நண்பன் டேனியலுடன் அவரை தேடி மீட்பதற்காக ஆந்திரா வருகிறார்.

பின்னர்தான் விஜய்சேதுபதி நிஹாரிகாவை திருமணம் செய்துகொள்ளவே கடத்திவந்துள்ளார் என்பதும், அதற்கு நிஹாரிகாவின் பெற்றோரும் முழு சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்பதும் அதற்கான பின்னணி காரணமும் தெரியவருகிறது. இதை தொடர்ந்து அந்த திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார் கௌதம் கார்த்திக்.

அவரது முயற்சி பலித்ததா..? தன்னைவிட பல வயது குறைந்த பெண்ணை விஜய்சேதுபதி வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொள்ள முயற்சிப்பது ஏன், அதற்கு நாயகியின் பெற்றோர்கள் உடந்தையாக இருப்பது ஏன என்பதற்கு விடைசொல்கிறது க்ளைமாக்ஸ்..

வித்தியாசமான கேரக்டர்களாக தேர்வு செய்து நடிக்கும் விஜய்சேதுபதி வழக்கம்போல தனது யதார்த்த நடிப்பால் ரசிகர்களை குஷிப்படுத்த தவறவில்லை.

ஜாலியான துறுதுறு பையனாக கௌதம் கார்த்திக். தனது கேரக்டருக்கு என்ன தேவையோ அதைவிட ஒருபடி கூடுதலாகவே செய்துள்ளார்.

அறிமுக நாயகியாக நடித்துள்ள நிஹாரிகா, அடுத்து ஒரு ரவுண்டு வருவதற்காகன களையான முகத்துடன், நகைச்சுவை கலந்த நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் ஆரம்பத்தில் இரண்டு காட்சிகளில் தலைகாட்டியதுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பது போல காணாமல் போனாலும் இடைவேளைக்குப்பின் முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்ட காயத்ரி, விஜய்சேதுபதிக்காக மெனக்கெடும் காட்சிகளில் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார்.

ரமேஷ்திலக்கின் அடக்கி வாசிக்கும் காமெடி நன்றாகவே எடுபடுகிறது. வேகமாக பேசும் ராஜ்குமாரும், எந்நேரமும் கத்திப்பேசும் டேனியலும் நம் பொறுமையை சோதிக்கவே செய்கிறார்கள். ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவில் மலைகிராம காட்சிகளும் எமதர்ம கூட்டம் நடக்கும் காட்சிகளும் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளன. ஜஸ்டின் பிரபாகரன், பாடல்களை விட பின்னணி இசையில் கவனம் செலுத்தியுள்ளார்.

மொத்தத்தில் ‘ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்’ காமெடி அசத்தல்!