மாரி படத்தில் வில்லனாக திரையுலகிற்கு அறிமுகமான விஜய் யேசுதாஸ், முதல்முறையாக ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் எப்படி? என்பதை தற்போது பார்ப்போம்
தேனி பக்கம் உள்ள கிராமம் ஒன்றில் எந்த வேலைக்கும் போகாமல் சண்டியர் போல சுற்றிக்கொண்டு இருக்கிறார் ஹீரோ விஜய் ஜேசுதாஸ். ஒருகட்டத்தில் போலீசாருக்கு கிடைக்கும் மரியாதையை கண்டு தானும் போலீசாக வேண்டும் என விரும்புகிறார். அதற்கு முன்னாள் ராணுவ வீரரான தனது மாமா பாரதிராஜா மூலம் காய் நகர்த்தி வேலையும் பெறுகிறார்.
சென்னையில் விஜய் ஜேசுதாஸ் பயிற்சிக்காக தங்கியிருந்த காலத்தில் இவர் ஊருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்தவர்களுக்கும் ஜாதி மோதல் உருவாகிறது. ட்ரெய்னிங் முடிவடைந்த நிலையில் அவரும் அவரது பேட்ஜ் நண்பர்களும் முதல் பணியாக அவரது ஊர் கலவரத்தை அடக்குவதற்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
தனது உறவினரே தலைமை பொறுப்பில் இருந்து தனது ஜாதியினரை தூண்டி விடுவதையும் தனது நண்பர்களாக இருந்தவர்களே மோதலில் முன்னிற்பதையும் பார்க்கும் விஜய் ஜேசுதாசுக்கு நாம் எப்படி அவர்களை அடக்குவது என்கிற குழப்பம் ஏற்படுகிறது.. அதேசமயம் தனது சொந்தக்கார இளம் விதவை ஒருவரை ஜாதியை காரணம் காட்டி கௌரவ கொலைசெய்ததும் தெரியவர அதிர்ச்சியாகிறார் விஜய் ஜேசுதாஸ்.
ஆனால் அவரது மாமா பாரதிராஜாவோ நியாயத்தின் பக்கம் நின்று ஜாதி மோதலை தடுக்க சொல்கிறார். அதன்படி நடக்க முயலும் விஜய் ஜேசுதாஸ் தனது ஜாதிக்காரர்களுக்கே எதிரியாக மாறுகிறார். கலவரத்தின் முடிவில் என்ன ஆனது என்பதும் நியாத்தின் பக்கம் நின்ற விஜய் ஜேசுதாஸ் சாதித்தது என்ன என்பதும் க்ளைமாக்ஸ்.
முதல் பாதியில் லுங்கியும், இரண்டாவது பாதியில் மிடுக்கான போலீசாகவும் வந்தாலும் போலீஸ்காரனாக மாறும் விஜய் ஜேசுதாஸ் அந்த கேரக்டரில் சரியாக பொருந்தியுள்ளார். ஜாதியைவிட்டு முழுதாக வெளிவர முடியாத ஒரு போலீஸ்காரனின் மனநிலையை அவர் ஓரளவு சரியாக பிரதிபலித்துள்ளார்.
கிராமத்து துறுதுறு நாயகி கேரக்டரில் அம்ரிதா செமையாக செட்டாகி உள்ளார். தன்னை ஒவ்வொரு முறையும் பெண் பார்க்க மாப்பிள்ளை வருவதாக கூறி உறவினரிடம் தலை சீவி விடுமாறு கூறுவது கலகலப்பு
சாதி மோதல்களை தடுத்தால் தான் சமுதாயம் வளரமுடியும் என்கிற கருத்தை அடிக்கடி வலியுறுத்தும் கேரக்டரில் யதார்த்தம் பேசும் பாரதிராஜா மீது மரியாதையை வருகிறது. ட்ரய்னிங் போலீஸ் ஆபீசராக மிடுக்கு காட்டியிருக்கும் கல்லூரி அகிலின் இந்த முகம் நமக்கு புதிது..
சாதி மோதலை தூண்டிவிடும் கவிதா பாரதி, விஜய் ஜேசுதாஸின் நண்பர்கள் குழு என பலரும் நல்ல தேர்வுதான். ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் கதையின் கனத்தை நம் மீது ஏற்ற முயற்சிக்கின்றன.
சமீப காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் அடங்கி கிடந்த ஜாதி மோதலை கதைக்களமாக எடுத்துள்ளார்கள். படம் நெடுக ஜாதியைத் தூக்கிப்பிடித்துவிட்டு, க்ளைமாக்ஸில் மட்டும் ஜாதிக்கு எதிராக இயக்குநர் தனா கிளாஸ் எடுத்திருப்பது நெருடலாக இருக்கிறது. ஆனாலும், அந்த க்ளைமாக்ஸ் காட்சி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.
ஒரு போலீஸ்காரனின் கோணத்தில் அந்த மோதலை அணுகியிருப்பது கொஞ்சம் புதுசு என்கிற வகையில் இயக்குனர் தனா, மணிரத்னம் பாணியில் ஒரு பாரதிராஜா படத்தை தந்துள்ளார் என்றே சொல்லலாம்.