பக்கா ; விமர்சனம்


விக்ரம் பிரபு முதன்முதாலக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் என்பதால் இந்தப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பு நிலவியது. அந்த அளவுக்கு படம் ‘பக்கா’வாக வந்திருக்கிறதா..? பார்க்கலாம்.

திருவிழாக்களில் பொம்மைக்கடை போடும் விக்ரம் பிரபுவுடன் (முருகன்) காதலாகும் பிந்து மாதவி, அவருடன் ஊரைவிட்டு ஓடிவர வந்த இடத்தில் எதிர்பாராமல் இருவரும் பிரிகின்றனர். அவரை கண்டுபிடிக்க முடியாத சோகத்தில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலைக்கு முயற்சிக்கும் பிந்து மாதவியை காப்பாற்றுகிறார் இன்னொரு விக்ரம் பிரபு (டோனி குமார்).. அப்போதுதான் தெரிகிறது பிந்து மாதவியின் காதலனும் தன்னைப்போலவே உருவம் கொண்டவர் தான் என்பது..

இந்த விக்ரம் பிரபுவுக்கும் ஒரு சோக நிகழ்வு இருக்கிறது.. இவருக்கும் ரஜினி ரசிகர் மன்ற தலைவியான நிக்கி கல்ராணிக்கும் மோதலாகி பின்னர் காதலாகி, அது கனியும் நேரத்தில் எதிர்பாரத சம்பவம் அவரது வாழ்க்கையை உலுக்கிப்போடுகிறது.. அது என்ன சம்பவம், அந்த சோகத்துடன் வாழும் விக்ரம் பிரபு, பிந்துமாதவியின் காதலரான இன்னொரு விக்ரம் பிரபுவை கண்டுபிடித்தாரா..? அந்த விக்ரம் பிரபுவுக்கு என்ன ஆனது என்பது மீதிக்கதை..

பொதுவாக அறிமுகப்படங்களில் சோடை போகின்ற ஹீரோக்கள் நாளாக நாளாக தெளிவுபெற்று நல்ல கதைகளையும் படங்களையும் தேர்ந்தெடுத்து முன்னணி ஹீரோக்களாக முன்னேறிய நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம்.. ஆனால் கும்கி, அரிமா நம்பி என எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிறிய விக்ரம் பிரபு, தற்போதைய படங்களில் ரிவர்ஸில் செல்கிறாரோ என்கிற ஐயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.. அதை இந்த ‘பக்கா’வும் பக்காவாக உறுதி செய்கிறது.

ஒரு ஹீரோவுக்கு தன்னுடைய முதல் டபுள் ஆக்சன் படம் என்பது எத்தனை பெரிய கனவாக இருக்கும். கதையும் கதாபாத்திர தேர்வும் எப்படி இருக்கவேண்டும்..? ஆனால் விக்ரம் பிரபுவோ இந்தப்படத்தையும் ஜஸ்ட் லைக் தட் பத்தோடு பதினொன்றாகவே ட்ரீட் செய்திருக்கிறார் என்பது மிகப்பெரிய அதிர்ச்சி.. அட்லீஸ்ட் அதை சாதரணமாக ரசிக்கின்ற ஒரு படமாக கூட தந்திருக்க கூடாதா..?

ஆனால் இது அத்தனைக்கும் முழு பொறுப்பு என்றால் இந்த சூப்பர் (!?) கதையையும் விக்ரம் பிரபுவின் இரண்டு கதாபாத்திரங்களையும் வடிவமைத்த அறிமுக இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா தான். அவர் நிற்கும் திசையை நோக்கி கையெடுத்து கும்பிட தோன்றுகிறது. விக்ரம் பிரபு கேரக்டர் மட்டுமல்ல, நிக்கி கல்ராணி மற்றும் பிந்து மாதவியின் கேரக்டர் வடிவமைப்பும் பக்காவோ பக்கா. அட போங்கப்பா.. அவர்களும் என்ன செய்வார்கள்..? கொடுத்த வேலையை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ, செய்து முடித்திருக்கிறார்கள்.

படத்தில் சூரி, சதீஷ் என இரண்டு மெயின் காமெடியன்கள், போதாக்குறைக்கு ஆனந்தராஜ் எனும் ஆபத்பாந்தவன் ஆகியோர் இருந்தும் காமெடிக்கும் பஞ்சமோ பஞ்சம்.. இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தும் ரசிக்கும்படியான, இல்லையில்லை ஒரு சராசரியான படத்தை கூட தரமுடியவில்லை என்றால் இயக்குனரை பார்த்து ஒரு கோப பார்வையையும் தயாரிப்பாளரை நோக்கி ஒரு பரிதாப பார்வையையும் மட்டுமே வீசிவிட்டு நகர முடிகிறது நம்மால்.