பள்ளிப்பருவத்திலே – விமர்சனம்


படிக்கிற வயதில் வரும் காதல், அதை எதிர்க்கும் பெற்றோர்கள், இதனால் மாணவர்களின் படிப்பு எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை மீண்டும் பாடமாக எடுத்துள்ளார்கள்..

கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரான கே.எஸ்.ரவிக்குமாரின் மகன் நந்தன் ராம், நாயகி வெண்பாவை காதலிக்கிறார். ஆனால் நந்தன்ராமின் காதலுக்கு வெண்பா எதிர்ப்பு தெரிவிக்கிறாள். ஒரு கட்டத்தில் இது பிரச்சனையாகி பஞ்சாயத்து கூடுகிறது. அதில் நந்தன்ராமை தான் காதலிக்கவில்லை என்று வெண்பா மறுக்கிறார். தனது மகனை தான் சரியாக வளர்க்கவில்லையோ என்ற மனவேதனையில் கே.எஸ்.ரவிக்குமார் உயிரை விட, இன்னொரு பக்கம் வெண்பாவுக்கு திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது.

இதனை தொடர்ந்து வெண்பாவை தனதாக்கிக்கொள்ள நந்தன் ராம் மேற்கொள்ளும் முயற்சிகளில் பல விபரீத நிகழ்வுகள் நடந்தேறுகிறது! அது என்ன? நந்தன் ராமும், வெண்பாவும் வாழக்கையில் இணைந்தார்களா? இல்லையா? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தரும் படமே ‘பள்ளிப் பருவத்திலே’.

மாணவன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகத்துடன் நந்தன் ராமின் நடிப்பு சிறப்பு. தொடக்கம் முதல் இறுதி வரை நாயகி மீதான தனது காதலில் உறுதியுடன் இருக்கும் கதாபாத்திரத்தில் சோபித்திருக்கிறார். வெண்பாவுக்கு இந்தப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரம். படிக்கிற வயது என்றாலும், காதலால் வந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் காட்சிகளில் பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த படத்தில் தலைமை ஆசிரியராகவே வாழ்ந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் கேரக்டர் மூலம் ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும், அந்த ஆசிரியர் மாணவர்களை எப்படி நடத்த வேண்டும். ஊர்வசி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் ஆக்ரோஷமாகவும், பாசமான சித்தப்பாவாகவும் வந்து மிரட்டுகிறார். பொன்வண்ணன், ராமதாஸ் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். கஞ்சா கருப்பு படம் முழுக்க வருகிறார். காமெடியுடன் சென்டிமென்ட்டிலும் கலக்கி இருக்கிறார். தம்பி ராமையாவைத்தான் வீணடித்திருக்கிறார்கள்.

விஜய் நாராயணன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. வினோத் குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது. பள்ளி படிப்பின் போது ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனை, அதில் இருக்கும் சுவாரஸ்யங்கள் என பள்ளிப்பருவத்தை நினைவுபடுத்திவிட்டு, இரண்டாவது பாதியில் செண்டிமண்ட் காட்சிகள் மூலம் கண்கலங்க வைத்திருக்கிறார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர்.

மாணவர்கள் படிக்கிற வயதில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும், இல்லையென்றால் வாழ்க்கை தடம் மாறி சென்று விடும் என்ற கருத்தை சொல்ல முயன்றிருந்தாலும் மெதுவாக பயணிக்கும் முதல் பாதி, புதுமையில்லாத திரைக்கதை அமைப்பு. ஆகியவை படத்தை பலவீனப்படுத்தி விடுகின்றன.

மாணவர்கள் இந்தப்படத்தை பார்த்தால் அவர்கள் மனதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு..