பட்டதாரி – விமர்சனம்


நான்கு இளைஞர்கள் வெட்டியாக ஊரை சுற்றுகிறார்கள் என்பதெல்லாம் பழசு.. ஐந்து நண்பர்கள் என்கிற கான்செப்ட்டை மையமாக வைத்து புதுமையான முறையில் உருவாக்கி இருக்கும் படம் தான் ‘பட்டதாரி’… காலேஜ் படித்துவிட்டு வழக்கமாக வேலைவெட்டியில்லாமல் மதுரையில் ஊரைச்சுற்றும் ஐந்து இளைஞர்கள். இதில் முக்கியமானவர் அபி சரவணன்.. இவரது நல்ல குணத்தை கண்டு இவர் மீது காதலாகிறார் அதிதி. ஆனால் அபி சரவணன் அவரை கண்டுகொள்ளாமல் விலகிப்போகிறார்… அதற்கு அவரது பழைய காதலும், காதலியின் மரணமும் காரணம் என்பது அதிதிக்கு தெரியவருகிறது.

இதனையடுத்து அதிதி மீண்டும் தீவிரமாக அபி சரவணனை காதலித்தாரா இல்லை, அவரது முன்னாள் காதல் கதை தெரிந்ததும் ஆளைவிடுடா சாமி என ஜூட் விட்டாரா என்பது க்ளைமாக்ஸ்..

வழக்கம்போல ஐந்து இளைஞர்களும் பைக்கில் ஊரை சுற்றுகிறார்கள்.. டீக்கடையில் தம் அடிக்கிறார்கள்.. பெண்கள் பின்னால் சுற்றுகிறார்கள்.. டாஸ்மாக்கிற்கு சென்று தவறாமல் தண்ணி அடிக்கிறார்கள்.. எவனையாவது வம்பிழுத்து அடிக்கிறார்கள்.. அல்லது அடி வாங்குகிறார்கள் போலீஸ் ஸ்டேஷன் போகிறார்கள். அந்தவகையில் மதுரை இளைஞர்களை வேலைவெட்டி இல்லாத சோம்பேறிகளாக காட்டி கேவலப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் 101வது படம் இது..

படத்தின் கதாநாயகன் அபி சரவணன் நடிக்க முயற்சித்திருக்கிறார்.. ஆனால் ரொம்பவே சிரமப்படுகிறார்.. உடன் வரும் நண்பர்களும் அப்படியே.. இவர்களுடன் டீக்கடை மாஸ்டராக வருபவர் மற்றும் சற்று ஆறுதல் அளிக்கிறார்.. படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயின்ட் கதாநாயகி அதிதியும், படத்தின் இசையும்.. அவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம்.

எஸ்.எஸ்.குமரனின் இசையில் வைக்கம் விஜயலட்சுமி குரலில் ‘சிங்கிள் சிம்முதான் நானுடா’ பாடலும், அதில் அதிதி காட்டியிருக்கும் உற்சாக துள்ளலும், அவரின் முக பாவங்களும் அந்தப்பாடலை ரசிக்கவைக்கின்றன.. இன்னொரு நாயகியாக வரும் ரசிகா சில கோணங்களில் பார்க்க நன்றாக இருக்கிறார்.. ரசிகாவின் கோபக்கார அண்ணனாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் ராம் நம் கவனம் ஈர்க்கிறார். எஸ்.எஸ்.குமரன் இசையுடன் இணைந்து ஒளிப்பதிவாளர் சூரியன் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்..

இயக்குனர் சங்கர் பாண்டி அரதப்பழசான கதையாலும் விறுவிறுப்பில்லாத திரைக்கதையாலும் அமெச்சூர் தனமான காட்சியமைப்புகளாலும் நம்மை காட்சிக்கு காட்சி சோதித்திருக்கிறார். பட்டதாரி என டைட்டில் வைத்து விட்டு, அதில் ஒரு பட்டதாரி அப்துல் கலாம் ரீசார்ஜ் (ரிசர்ச் என்கிற வார்த்தையைத்தான் அப்படி சொல்கிறாராம்) பண்ண சொல்லிருக்கார் என ஒரு காமெடி வைத்திருக்கிறார் பாருங்கள்.. இதுபோல இன்னும் எத்தனை இயக்குனர்கள் கிளம்பி வரப்போகிறார்களோ என நினைக்கும்போது தமிழ்சினிமாவின் நிலைமையை நினைத்தால் கண்களில் கண்ணீர் முட்டுகிறது.