ஆய கலைகள் 64ல் ஒன்றான கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை மையப்படுத்தி வெளியான ‘போகன்’ படத்தை பார்த்து ஒரு வரம் கூட ஆகவில்லை. இதோ.. அதே பின்னணியில் இன்னொரு களத்தில் வெளிவந்திருக்கிறது ‘பிரகாமியம்’.. ‘போகன்’ ஆக்சன் த்ரில்லர் என்றால், இந்தப்படம் உளவியல் ரீதியாக உருவாக்கப்பட்டுள்ளது. வன்முறை, ஆபாசம் இல்லை என்றாலும் கூட இந்தப்படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் அது கவனிக்க வேண்டிய விஷயம் தான். சரி படத்தின் கதை என்ன..?
உருவத்தில் சற்று அசாதாரணமானவர் பிரசாத்.. ஆனால் பிரசாத்துக்கு கூடுவிட்டு கூடு பாயும் வித்தை தெரியும். இவருக்கும் ஒரு ஜோசியருக்கும் இடையே ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. அதை இன்னும் தூண்டும் விதமாக, பிரசாத்துக்கு திருமணம் ஆக வாய்ப்பே இல்லை என்றும், அப்படி ஆனாலும் குழந்தை பாக்கியம் கிடைக்காது என்றும், அப்படியே கிடைத்தாலும் கடைசியில் அவரது சாவு ஆளின்றி ஆதரவின்றி கேடுகெட்ட விதமாகத்தான் அமையும் என கொளுத்தி போடுகிறார் அந்த ஜோசியர்.
ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையால் தவிக்கும் பிரசாத், ஜோசியரின் கூற்றை எப்படியாவது பொய்யாக்கவேண்டும் என நினைக்கிறார். அதன் முதல்படியாக, ஜோசியரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்திருக்கும் அவரது முதல் மனைவியை திருமணம் செய்கிறார். அதன் மூலம் ஒரு குழந்தைக்கும் தகப்பனாகிறார்.. ஆனால் எல்லாமே அவர் நினைத்தபடி தான் நடந்ததா என்பதும இதில் கூடுவிட்டு கூடு பாயும் வித்தை அவருக்கு எந்த அளவுக்கு உதவியது என்பதும் தான் மீதிக்கதை.
தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் பிரசாத் இந்தப்படத்தையும் அவரே இயக்கியுள்ளார். இரண்டு வேடங்களில் தனது நடிப்பை வித்தியாசப்படுத்தி காட்ட முயற்சி செய்திருந்தாலும், அந்த கேரக்டரின் கனத்தை அவரால் சமாளிக்க முடியவில்லை என்பதே உண்மை.. கூடு விட்டு கூடு பாயும் வித்தை தெரிந்த தந்தை கேரக்டரை இந்த அளவுக்கு மோசமாக இல்லாமல் கம்பீரமாகவே உலாவ விட்டிருக்கலாமே என்கிற நாம் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் சுபா, பார்வதி ஆகியோர் தங்களது பங்கை சிறப்பாகவே செய்ய முயற்சித்திருகிறார்கள்.. தந்தை மகனிடையே நிகழும் சம்பவங்களை, அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் நிகழும் சம்பவங்களாக சம்பந்தப்படுத்தி கருத்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் பிரசாத்.. பாடல்களே இல்லாமல் கதையை நகர்த்தி இருப்பது நிச்சயமாக நல்ல முயற்சி தான்..
மனநிலை பதிக்கப்பட்ட ஒரு நபரின் ஆழ் மன உலகத்தை படம் எடுத்து காட்டும் படமாக இதை உருவாக்கியவர்கள், கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை இன்னும் கொஞ்சம் எளிதாக காட்சிப்படுத்தி இருந்தால் இந்த பிரகாமியம் இன்னும் பிரகாசித்திருக்கும்.