சுற்றுலாத் தலமான ஊட்டியில் சிறு வயது பெண் குழந்தைகளை கடத்தி கொலை செய்கின்றனர். 2004 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடக்கிறது. இது குறித்து விசாரிக்கும் காவல்துறையினர் ஜோதி என்கிற பெண் தான் இந்த கொலைகளுக்கு காரணம் என முடிவு செய்து ஜோதியை என்கவுண்டரில் கொலை செய்கின்றனர். வழக்கையும் முடிவுக்கு கொண்டு வருகின்றனர்.
சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து இந்த கேசை தூசி தட்டி எடுக்கிறார் நாயகி வெண்பா. சைக்கோ கொலைகாரன் என்று முத்திரை குத்தப்பட்ட ஜோதிக்கு ஆதரவாக களம் இறங்குகிறார் நாயகி வெண்பா. இதனால் நாயகி பல்வேறு இன்னல்களை எதிர் கொள்கிறார்.
இந்த இன்னல்களை எல்லாம் எப்படி சமாளித்தார்? அந்த வழக்கின் உண்மை நிலவரம் என்ன? அந்த வழக்கில் எப்படி வெற்றி பெற்றார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
வெண்பா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஜோதிகா. வழக்கறிஞராக வழக்காடும் போது கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குழந்தைகளுடன் விளையாடும் காட்சிகளில் தானும் ஒரு குழந்தையாகவே மாறி உள்ளார்.
ஜோதிகாவிற்கு அடுத்து வெகுவாக கவனத்தை ஏற்பவர் பார்த்திபன். வழக்கமான தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். அவருக்கே உரித்தான நக்கல் நையாண்டி ரசிக்க வைக்கிறது.
ஜோதிகாவின் தந்தையாக பாக்கியராஜ் தனது அனுபவ நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன் போன்றோர் திரைக்கதையின் வேகத்திற்கு துணை நிற்கின்றனர். சிறிது நேரமே வந்தாலும் தியாகராஜன் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், அநீதிகள் ஆகியவற்றை மைய கருவாக கொண்டுள்ளது இத்திரைப்படம்.
அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். யூகிக்க முடியாத கிளைமாக்ஸை அமைத்துள்ளது மிகச் சிறப்பு.
பெண்களை எப்படி பார்க்க வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை ஆண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்.
பாடல்கள் படத்தோடு ஒன்றி பயணிக்கிறது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிற்கு வாழ்த்துக்கள். மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.
மொத்தத்தில் பெண்களுக்கு ஆதரவாக வந்திருக்கிறாள் இந்தப் பொன்மகள்.