பியார் பிரேமா காதல் – விமர்சனம்


மிடில் கிளாஸ் பையன் ஹரீஷ் கல்யாண்.. அம்மா இல்லாத, அப்பா ஆனந்த்பாபு வளர்ப்பில் வளர்ந்த ஓரளவுக்கு வசதியான மாடர்ன் பொண்ணு ரைசா. ஹரீஷுக்கு அம்மா ரேகா ஒரு பக்கம் பெண் பார்க்க, அவரோ இந்தப்பக்கம் ரைசாவுடன் காதலை டெவலப் பண்ணுகிறார்.. லாஸ் ஏஞ்சலில் ஹோட்டல் துவங்கவேண்டும் என தனக்கென ஒரு லட்சியம் வைத்திருக்கும் ரைசா காதல், கல்யாணம் என்றாலே முகம் சுளிக்கிறார்.. ஆனால் நட்புடன் ‘மற்ற’ விஷயங்களுக்கு கிரீன் சிக்னல் காட்டுகிறார்.

‘அந்த’ விஷயம் முடிந்தாலும் கூட காதலா, கல்யாணமா நோ நோ என ரைசா பதற, இதனால் காண்டாகிறார் ஹரீஷ்.. ஒருவழியாக லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு தந்தையின் ஆசியுடன் சம்மதிக்கிறார் ரைசா. இந்த திருட்டுத்தன வாழ்க்கை ஒரு பக்கம் ஒடிக்கொண்டு இருக்க, இது தெரியாமல் ஹரீஷுக்கு ரேகா பெண் பார்த்து முடிவு செய்கிறார். இந்த நிலையிலும் ரைசா திருமணம் வேண்டாம் என பிடிவாதம் காட்ட, ஹரீஷின் வாழ்க்கை அவர் விரும்பிய வகையில் அமைந்ததா..? இல்லை திரும்பிய திசையில் நகர்ந்ததா என்பது க்ளைமாக்ஸ்..

இளசுகளை (மட்டும்) குறிவைத்து மொத்தப்படத்தையும் எடுத்துள்ளார்கள். அதற்கு ஹரீஷ் கல்யாண்-ரைசா ஜோடி பர்பெக்ட் மேட்ச் ஆக பொருந்தியிருக்கிறார்கள்.. ஏற்கனவே பிக் பாஸில் நாம் பார்த்து பழகிய முகங்கள் என்பதால் இருவரையும். படம் முழுதும் அலுப்பு தட்டாமல் பார்க்க முடிகிறது.. நடிப்பிலும் இருவரும் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார்கள்.. இப்படி ஒரு அப்பா.. இல்லையில்லை மாமா கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என இளைஞர்கள் கொண்டாடும் கேரக்டரில் நீண்டநாளைக்குப்பின் ஆனந்தபாபு..

பரிதவிக்கும் குடும்ப தலைவியாக ரேகா.. அவரது கணவராக ராஜா ராணி பாண்டியன் வழக்கமான பெற்றோர். டெய்லராக வந்து ஹரீஷ் கல்யாணுக்கு காதல் ஆலோசனைகள் வழங்கும் முனீஸ்காந்த் அளவு மீறாமல் ரசிக்கும்படியாக காமெடி பண்ணியிருக்கிறார். ஹரீஷின் அலுவலக நண்பராக வரும் தீப்ஸ் என்பவரும் சிரிக்க வைக்கிறார்..

யுவனின் இசையில் பாடல்கள் படத்திற்கு எனர்ஜி டானிக் என்றாலும், அடிக்கடி வருவது கொஞ்சம் ஓர் டோஸாகத்தான் தெரிகிறது. ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவில் அவ்வளவு நேர்த்தி..காதலுக்கு காதலியின் லட்சியமே எதிரியாக நிற்கிறது என்கிற புது விஷயத்தை எடுத்துக்கொண்டவர்கள், அதை இவ்வளவு நீட்டி முழக்கி சொல்லியிருக்கவேண்டாம். ஒருவகையில் முரட்டுக்குத்து படத்தின் வீரியம் குறைந்த வெர்ஷன் என்றுகூட இந்தப்படத்தை சொல்லலாம். தனது சொந்த வாழ்க்கையை மேற்கோள்கட்டி மகளுக்கு அறிவுரை கூறும் ஆனந்த்பாபு, ஒரு வாரத்திற்கு முன்பே அதை சொல்லியிருக்கலாமே..

இன்றைய ஐடி உலகத்தில் குடும்ப வாழ்க்கை குறித்து பல பெண்களின் மனோபாவம் மாறிவருவதை இந்தப்படம் ஓரளவுக்கு நியாயமாக படம்பிடித்து காட்டியிருப்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.. இளைஞர்கள் ரசித்து கொண்டாட நிறைய விஷயங்களை புகுத்தியுள்ளார் இயக்குனர் இளன். அந்தவகையில் இளைஞர்களுக்கு ஏற்ற படமாக இதை கொடுத்ததில் இயக்குனர் இளன் கவனிக்க வைத்திருக்கிறார்.