’ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்’ விமர்சனம்

நாட்டை ஆளும் அரசு மாறி மாறி வந்தாலும், மக்களுக்கு கிடைக்க வேண்டியவை எதுவுமே சரியாக கிடைக்கவில்லை, என்பதை சொல்வது மட்டும் அல்லாமல், அவற்றை பெற மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான தீர்வையும் சொல்வது தான் ‘ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்’ படத்தின் கதை.

காளை மாடுகளை தான் பெறாத பிள்ளைகளாக பாவிக்கும் பாசக்கார மற்றும் அப்பாவித்தனம் கொண்ட கிராமத்து மனிதராக நடித்திருக்கும் மித்துன் மாணிக்கம், படம் பார்ப்பவர்களே கோபமடையும் அளவுக்கு தனது அப்பாவித்தனத்தை நடிப்பின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், மேக்கப் மூலமாக கிராமத்து பெண்ணாக உருமாறியிருக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது. கொடுத்த ஒரு சில வசனங்களில் கூட தென்மாவட்ட கிராமத்து பெண் போல் பேச முடியாமல் திணறுகிறார்.

மக்களின் குறைகளை உலகிற்கு சொல்லும் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்திருக்கும் வாணி போஜன், கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வடிவேல் முருகன் மற்றும் அப்பத்தாவாக நடித்திருக்கும் லக்‌ஷ்மி கதாப்பாத்திரங்கள் ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கின்றன.

பாடலாசிரியர்கள் விவேக், யுகபாரதி, மதங்குமார் ஆகியோரின் வரிகள் மக்களின் செவிகளில் மட்டும் இன்றி மனதிற்குள்ளும் இறங்கும் வகையில் இசையமைத்திருக்கும் கிரிஷ், பின்னணி இசையையும் நேர்த்தியாக கையாண்டுள்ளார்.

ஆடம்பம்பரம் இல்லாத அழகியலோடு கதைக்களத்தை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமார்.எம், கலை இயக்குநர் முஜிபுர் ரகுமான் கைவண்ணத்தில் உருவான கிராமத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

ஆட்சியாளர்களின் மோசடியால் எளிய மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை, கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை பின்னணியில் அழுத்தமாக சொல்லியிருப்பதோடு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையி திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர் அரசில் மூர்த்தி, கூடுதல் சுவாரஸ்யத்திற்காக காளை மாடுகள் மீது கதையின் நாயகனும், நாயகியும் வைத்திருக்கும் பாசம், அவற்றின் பிரிவால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ற டிராக்கில் கதையை சொன்னாலும், அதை சரியான பாதையில் சொல்லாமல் தடுமாறியிருக்கிறார்.

ஆனால், அவர் சொன்னதில் சில குறைகளும், ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களும், காட்சிகளும் இருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக தற்போதைய காலக்கட்டத்திலும் கிராமத்து மக்கள் எதையும் அறியாதவர்களாக இருப்பது போல் காட்சிப்படுத்தியிருப்பது, நிலாவில் பாட்டி வடை சுடும் பழைய கதையாக இருக்கிறது.

அதே சமயம், அரசியல்வாதிகளின் அலப்பறைகளை நையாண்டி செய்திருப்பது ரசிக்க வைக்கிறது. அதிலும், சீமானைப் போன்று ஒருவர் பேசும் காட்சி, விவசாயிகளுக்கு இலவசமாக மாடுகளை வழங்கும் போது, மேடையில் தனது கட்சிக்காரரை அமைச்சர் அடிப்பது போன்ற காட்சிகள் மூலம் தமிழக அரசியல்வாதிகளை வச்சி செய்யும் இயக்குநர் வடநாட்டு அரசியல்வாதிகளையும் விட்டு வைக்காமல் வம்புக்கு இழுத்துள்ளார்.

மொத்தத்தில், ’ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்’ தானா எதுவுமே கிடைக்காது, நாம் முயன்று தான் பெற வேண்டும், என்பதை சில குறைகளோடு சொல்லியிருந்தாலும், சொல்லியிருக்கும் விஷயத்திற்காக இயக்குநரை தாராளமாக பாராட்டி வரவேற்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *