சினிமா இயக்குனராக ஆசைப்பட்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறார் உதவி இயக்குனர் விஷ்ணு. ஒருபக்கம் வாய்ப்பு கிடைக்க தாமதமாக், இன்னொரு பக்கம் அவரது போலீஸ் மாமா முனீஸ்காந்த் கட்டாயத்தால் வாரிசு அடிப்படையில் போலீசில் சேர்கிறார் விஷ்ணு. சேர்ந்த நாளில் இருந்தே பள்ளி மாணவிகள் காணமல் போவதும் அதை தொடர்ந்து அவர்கள் ஒரே மாதிரியான முறையில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடப்பதும் தொடர்கிறது.
தான் சினிமாவுக்காக எழுதிய சைக்கோ கொலைகாரனின் ஸ்கிரிப்ட் போலவே இந்த நிஜ சம்பவங்களும் இருப்பதால் சிரமப்பட்டு அதன் பின்னணியை கண்டுபிடிக்கிறார் விஷ்ணு.. ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப்போய் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விடுகின்றன. யார் அந்த சைக்கோ கொலைகாரன்..? அவன் இந்த கொலைகளை செய்வதற்கான காரணம் என்ன..? விஷ்ணுவால் அவனை பிடிக்க முடிந்ததா..? என்பது மிக நீண்ட க்ளைமாக்ஸ்..
நிச்சயமாக படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் இருந்து இருக்கை நுனியில் அமரவைக்கும் பரபர த்ரில்லர் அனுபவத்தை இந்தப்படத்தில் கொடுத்திருகிறார் இயக்குனர் ராம்குமார். இந்த கதையும் அந்த எஸ்.ஐ கேரக்டரும் விஷ்ணுவுக்கென்றே உருவாக்கப்பட்டது போல கச்சிதமாக அமைந்துள்ளது. நடிப்பில், பாடி லாங்குவேஜில் என ஆளே புதிதாக தெரிகிறார் விஷ்ணு.. இது அவரை அடுத்த லெவலுக்கு அழைத்து சென்றிருக்கும் படம் என்றே சொல்லலாம்.
கதாநாயகியாக வரும் அமலாபாளின் கேரக்டருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லையென்றாலும் அளவாகவே வந்தாலும் தான் வரும் இடங்களில் எல்லாம் ரொம்பவே பக்குவமான முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.. முனீஸ்காந்த், காளி வெங்கட் இருவரும் காமெடியை ஒதுக்கி வைத்துவிட்டு கதாபாத்திரமாக மாறி சபாஷ் பெறுகிறார்கள்.
இன்ஸ்பெக்டராக வரும் மைனா சூசன் அலட்டால் பேர்வழியாக நடிப்பில் கறார் காட்டியிருக்கிறார். கதைக்கு திருப்பம் ஏற்படுத்தும் கேரக்டரில் வழக்கம்போல ராதாரவி உயர் அதிகாரியாக வரும் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், விஷ்ணுவுக்கு உதவியாக வரும் சீனியர் போலீஸ்காரர், விஷ்ணுவின் அக்கா மகள், டாக்டராக வரும் நிழல்கள் ரவி மற்றும் அந்த காமுக ஆசிரியர் என கதாபாத்திர தேர்வு செம பிட்.
அடுத்து என்ன நடக்குமோ என்கிற பதைபதைப்பு தீக்கு தனது பின்னணி இசையால் பெட்ரோல் ஊற்றி தகிக்க விடுகிறார் ஜிப்ரான். த்ரில்லர் படத்துக்கு தேவையான வெகு நேர்த்தியான ஒளிப்பதிவு, மிகவும் வித்தியாசமான கோணங்கள் என ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கரும் தனது பங்கிற்கு மிரட்டியிருக்கிறார்.
இரண்டு இடங்களில் படத்தின் க்ளைமாக்சிற்கு வாய்ப்பு இருந்தும் அதன்பிறகும் இருபது நிமிஷம கதையை இழுத்திருக்கிறார் இயக்குனர். அதை கத்தரித்திருக்கலாம். மேலும் பள்ளி மாணவிகள் சம்பந்த காட்சிகளை கொஞ்சம் லாவகமாக கையாண்டு இருக்கலாம். போலீசார் எந்த இடத்திலும் சிசிடிவி காட்சிகளை வைத்து கொலைகாரனை தேடவில்லை என்பது மிகப்பெரிய உறுத்தல்
சைக்கோ கொலைகாரன் யார் என்பதை யூகிக்க முடியாதவாறு கொண்டு சென்றிருப்பது திரைக்கதையின் பலம். அவனது பின்னணியும் சுவாரஸ்யம். அவன் யாரென்று தெரிந்தபின்னர் விஷ்ணுவுக்கும் அவனுக்குமான ஆடுபுலி ஆட்டமும் செம விறுவிறு.. த்ரில்லர் பட ரசிகர்களுக்கு செம த்ரில் அனுபவத்தை தர காத்திருக்கிறான் இந்த ராட்சசன்.