சர்கார் – விமர்சனம்


ரிலீஸாகும் முன்பே பல சர்ச்சைகளை சந்தித்து அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள இந்த சர்கார் ரசிகர்களை முழு அளவில் திருப்திப்படுத்தியுள்ளதா..? பார்க்கலாம்..

கூகுள் சுந்தர் பிச்சை போல மிகப்பெரிய ஆள் தான் சுந்தர் ராமசாமி என்கிற விஜய். வருடத்திற்கு இரண்டாயிரம் கோடி சம்பாதிக்கும் அவர், தனது விலைமதிப்பு வாய்ந்த நேரத்தை செலவு செய்து ஓட்டுப்போடுவதற்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார். ஆனால் அவருக்கு முன்னரே அவர் ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டுவிட, நீதிமன்றம் வரை சென்று போராடி தனது ஓட்டுச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடத்த வைக்கிறார்.

ஆனால் அவர் பற்றவைத்த நெருப்பு தமிழகமெங்கும் பரவி, கள்ள ஓட்டில் தங்களது வாக்குரிமையை பறிகொடுத்த பலரும் தங்களுக்கும் மறு ஓட்டுரிமை கேட்டு போராட்டத்தில் இறங்க, இப்போது மொத்த தேர்தலும் செல்லாமல் போய் மீண்டும் புதிய தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இதில் முதல்வர் வேட்பாளரான பழ.கருப்பையாவை எதிர்த்து விஜய்யே போட்டியிடுகிறார்.

ஆனால் நிலைமை தீவிரமாக, ஒருகட்டத்தில் தமிழகம் முழுதும் விஜய் தனது ஆட்களை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்படுகிறது. பழ.கருப்பையாவின் மகள் வரலட்சுமி அப்பாவுக்கு ஆதரவாக தனது பங்கிற்கு அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்த ஆட்டம் சூடுபிடிக்கிறது. இதில் ஜெயம் யாருக்கு என்பது க்ளைமாக்ஸ்.

விஜய்க்கேற்ற அதிரடி கதை என்பதால் மனிதர் புகுந்து விளையாடுகிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் மிரள வைக்கிறார். ஆனால் ஒரு காட்சியி;ல் கூட இயல்பான விஜயை பார்க்க முடியாதது வருத்தமே அந்த அளவுக்கு தனது மேனரிசம் மற்றும் பாடிலாங்குவேஜில் இழுத்து கட்டப்பட்ட வில்போல விறைப்பாகவே காட்சி தருகிறார் மனிதர்

ஹீரோவுக்கு உதவும் வழக்கமான கதாநாயகியாக க்யூட் கேரக்டரில் ரசிக்க வைக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதே சமயம் அரசியல்வாதியாக வந்து வில்லித்தனம் காட்டி இருக்கும் வரலக்ஷ்மி நடிப்பில் கீர்த்தியை ஓவர்டக் செய்கிறார் அதிலும் அரசியலில் அவர் விஜய்க்கு சரிசமமாக டப் கொடுத்துள்ளார்

நிஜ அரசியல்வாதியாக இருந்து தற்போது நிழல் அரசியல்வாதியாக முதன்முதலில் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் பழ கருப்பையாவின் முகம் படம் முடிந்தும் நம் கண்களில் நிற்கிறது ரெண்டு என்கிற முக்கியமாக கேரக்டரில் ராதாரவி இன்றைய நடப்பு அரசியலை கண்முன் நிறுத்தியிருக்கிறார் யோகிபாபுவிற்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் கிடைத்த கேப்பில் கிடா வெட்டியிருக்கிறார்.

ஏ.ஆர்..ரஹ்மானின் இசையில் சிம்டாங்காரன் பாடல் மட்டும் தாளம் போட வைக்கிறது. விஜய் ரசிகர்களுக்கென இன்னும் கொஞ்சம் இறங்கி வரலாமே ரஹ்மான் சார்..? கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவில் கூட்டம் மிகுந்த காட்சிகளில் பிரமிப்பை ஏற்படுதியிருக்கிறார்

கள்ள ஓட்டுக்கு எதிராக போராடும் கோடீஸ்வர கார்பரேட் கிரிமினல் என்கிற அருமையான ஒன்லைனை வைத்து இடைவேளைவரை பரபரவென படத்தை நகர்த்தியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.. ஆனால் அதன் பின்னர் சிட்டி ட்ராபிக்கில் சிக்கிய கார் மாதிரி எந்தப்பக்கமாவது சந்து கிடைத்தால் நுழைந்துவிடும் நோக்கில் தடம் மாறிவிட்டது திரைக்கதை.

அவ்வளவு தூரம் மெனக்கெட்டு விஜய் ஓட்டுப்போட வருவதற்கு சொல்லும் காரணம் நெகிழ வைக்கிறது. அரசியல் ஆட்டத்தில் இளைஞர்கள், சோஷியல் மீடியா உதவி என இல்லாமல், கார்ப்பரேட் கிரிமினலான விஜய் இடைவேளைக்குப்பின் மிகப்பெரிய அரசியல்வாதியை ஒரு தேர்தல் முழுதும் எதிர்கொள்வதற்கு தனது சக்தி, பணபலம், அறிவு மூன்றையும் பெரிய அளவில் உபயோகப்படுத்தி இருந்தால் ஆட்டம் அதிரடியாக இருந்திருக்கும்.