சத்யா – விமர்சனம்


தனது குழந்தையை கடத்திவிட்டதாக கூறி, வெளிநாட்டில் இருக்கும் தனது முன்னாள் காதலன் சிபிராஜை சென்னைக்கு வரவழைக்கிறார் ரம்யா நம்பீசன். ஆனால் இறங்கி விசாரிக்கும்போது, விசாரணையில் ரம்யாவுக்கு மகளே இல்லை என பலரும் சொல்ல, குழப்பமாகிறார் சிபிராஜ் இதை ரம்யாவின் கணவன், போலீஸ் உயர் அதிகாரியான வரலட்சுமி உள்ளிட்ட பலரும் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளதும் சிபிராஜுக்கு தெரிய வருகிறது.

இதை தொடர்ந்து விரியும் காட்சிகள் நமக்கு அதிர்ச்சி மேல் கொடுக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன..? குழந்தை விவகாரம் உண்மையா..? கற்பனையா என பல கேள்விகளுக்கு பல திருப்பங்களுடன் விடை தருகிறது மீதிப்படம்.

தனக்கான வெற்றிக்கதையை தேடிக்கண்டு பிடித்ததில் மீண்டும் ஒருமுறை சிபிராஜ் ஜெயித்திருக்கிறார். குழந்தை கடத்தலில் ஆரம்பிக்கும் படம், முடியும் வரை அதே விறுவிறுப்புடன் பயணிக்கிறது. சிபிராஜ் தனக்கான கேரக்டரை தேர்ந்தெடுப்பதில் ரொம்பவே கவனம் செலுத்தி வருவதை இந்த ‘சத்யா’ கேரக்டரும் உறுதி செய்கிறது.

ரம்யா நம்பீசனுக்கு இதில் அழுத்தமான கேரக்டர். அவரைப்பற்றி நம்மையே சந்தேக்கப்பட வைக்கும் அளவுக்கு தத்ரூபமான நடிப்பை வழங்கியுள்ளார் ரம்யா நம்பீசன். அவர் திடீரென எடுக்கும் முடிவுதான் நம்மை அதிர்ச்சி ஆளாக்குகிறது. போலீஸ் அதிகாரியாக கெத்தாக வரும் வரலட்சுமி இடைவேளைக்குப்பின் மீதிக்கதை முழுவதையும் தனது பக்கம் இழுத்துக்கொள்கிறார். இருந்தாலும் அவரது கேரக்டர் உருவாக்கத்தில் செயற்கைத்தனம் அதிகம்.

ஆனந்தராஜ் வந்தாலே கலாட்டாதான் என்னும் விதமாக கடமை ப்ளஸ் காமெடி என போலீஸ் அதிகாரியாக கலகலப்பூட்டுகிறார் ஆனந்தராஜ். கொஞ்ச நேரமே வந்தாலும் யோகிபாபுவின் காமெடி செம கலாய்.. காமெடியை ஒதுக்கி கேரக்டர் ரோலில் பயணிப்பதால் சதீஷின் ‘பாபுகான்’ கேரக்டர் அவரை நோக்கி நம் கவனத்தை ஈர்க்கிறது. வினோதினி, நிழல்கள் ரவி உள்ளிட்டோரும் கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

சைமன் கிங்கின் இசையில் ‘யவனா’ பாடலும் அதை படமாக்கிய விதமும் அருமை.. பின்னணி இசையிலும் தடதடக்க வைத்திருக்கிறார் மனிதர் அருண்மணி பழனியின் ஒளிப்பதிவு திரைக்கதையின் வேகமான ஓட்டத்திற்கு பலம் சேர்க்கிறது.

பத்து நிமிடத்திற்கு ஒருமுறை வரும் ட்விஸ்ட் நம் பல்ஸை அதிகரிக்க வைப்பதென்னவோ உண்மை. குறிப்பாக குழந்தை பற்றிய மர்மம் உடைபடும் இடத்தில் நம்மால் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது. தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட படம் என்றாலும், அதன் சாயல் துளியும் படியாதவாறு அழகாக படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர்ப் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி..

சஸ்பென்ஸ் பிரியர்களுக்கு சத்யா சரியான தீனி போடுவார் என்பது உண்மை.