இயக்குனர் மிஷ்கின் மற்றும் இயக்குனர் ராம் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் தான் சவரக்கத்தி.. பார்பர் ஷாப் வைத்திருப்பவர் ராம்.. காதுகேளாத கர்ப்பிணி மனைவி பூர்ணா.. இரண்டு குழந்தைகள் என சராசரி வாழ்க்கை வாழும் மனிதர். மிகப்பெரிய ரவுடியான மிஷ்கின் ஜெயிலில் இருந்து பரோலில் வந்தவர் சில தினங்கள் கழித்து மீண்டும் ஜெயிலுக்கு திரும்ப ஆயத்தமாகிறார்.
திடீரென பூர்ணாவின் தம்பி காதல் பதிவு திருமணம் செய்யப்போவதாக அழைப்பு விடுக்க, மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு சமரசம் செய்ய கிளம்புகிறார் ராம். பரோல் முடிந்து ஸ்டேஷனில் சரண்டராக போய்க்கொண்டிருக்கும் மிஷ்கினின் கார், சிக்னலில் நின்ற ராமின் பைக்கில் உரசுகிறது.
இதனால் கோபமாகும் ராம் மிஷ்கினின் முகத்தில் குத்தி விட்டு கண்மூடி திறப்பதற்குள் அங்கிருந்து சென்றுவிடுகிறார். அவமானத்தால் குமுறும் மிஷ்கின் மாலை ஜெயிலுக்குள் போவதற்குள் ராமின் கையை வெட்டியே தீருவது என சபதம் எடுத்து ராமை வலைபோட்டு தேடுகிறார்.
இந்த பூனை-எலி விளையாட்டில் ஜெயம் யாருக்கு என்பது க்ளைமாக்ஸ்..
படம் முழுதும் யதார்த்த வாழ்வியலை கொண்ட ஒரு சராசரி மனிதரை பிரதிபலிக்கிறார் இயக்குனர் ராம். கதையின் நாயகனாக வெத்து உதார் விட்டு வீண் வம்பை விலைக்கு வாங்கும் அதனால் உயிர் பயத்தில் ஒடி ஒளிவதும், என படம் முழுதும் ஒரே ஓட்டம் தான் இவருக்கு.
இயக்குனர் சொல்லிக்கொடுத்ததை மீட்டர் மாறாமல் நடித்திருக்கும் பூர்ணா, வெள்ளந்தியாக தனது கதாபாத்திரத்தை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். ஆனால் பிரசவ வலியில் அவர் துடிப்பதாக காட்டி, மருத்துவமனையில் இருந்து தப்பிப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.
வில்லன் என்று(ம்) சொல்லமுடியாத கேரக்டரில் மிஷ்கின். கூலிங்கிளாஸ் இல்லாமல் அவரை படம் முழுதும் பார்ப்பதே ஆச்சர்யம் தான். எந்நேரமும் சீரியசாக விறைப்பும் முறைப்புமாக தனது பாடி லாங்குவேஜால் பல இடங்களில் சபாஷ் பெறுகிறார் மிஷ்கின்.
படத்தில் மிஷ்கினுடன் வரும் அடிப்பொடிகள் காமெடி ஏரியாவை கச்சிதமாக கவனித்துக்கொள்கின்றனர். குறிப்பாக மிஷ்கினுக்கு ஐடியா கொடுக்கும் நபரும், மிஷ்கினின் கோபத்தை திசைதிருப்ப முயலும் பெத்தப்பாவாக வரும் அந்த பாசிடிவ் மாமாவும் மனதில் நிற்கும் கேரக்டர்கள்.
அரோல் கொரோலியின் பின்னணி இசை தேடுதல் வேட்டையின்போது தீவிரம் காட்டியுள்ளது. கார்த்திக்கின் ஒளிப்பதிவு சென்னையை சென்னை அல்லாத ஒரு ஊராக காட்டியிருக்கிறது. வெறும் வாய்ச்சவடால் மனிதர்களாலும் ரவுடிகளுக்கே உண்டான ஈகோவினாலும் என்னென்ன தேவையில்லாத நிகழ்வுகள் நிகழ்கின்றன என்பதையும் கலப்பு திருமணத்தின் ஈகோ எங்கே உடைகிறது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஆதித்யா..