ஒரு காலத்தில் ஓஹோவென இருந்தவர் சிங்கம்பட்டி ராஜா நெப்போலியன். அவர் மீதான பழைய பகையால் சிங்கம்பட்டிக்கு எதிராக புளியம்பட்டி மக்களை கொம்பு சீவிவிட்டு இரண்டு ஊருக்கும் பொதுவான சந்தையை இழுத்து மூட வைக்கிறார்கள் சிம்ரனும் அவரது கணவர் லாலும். நெப்போலியன் மகன் சீமராஜா சிவகார்த்திகேயன். பள்ளிக்கூட டீச்சரான சமந்தாவிடம் காதலில் விழுந்து, அவருக்காக பந்தயத்தில் ஜெயித்து சந்தையை இரண்டு ஊர் மக்களுக்கும் சேர்த்தே திறந்து விடுகிறார்.
இது ஒருபக்கம் இருக்க,மேலும் காற்றாலை அமைப்பதற்காக பண ஆசை காட்டி, விவசாயிகளை தங்களது விளைநிலங்களை வேற்று மாநிலத்தவருக்கு விற்கவைக்க முயற்சிக்கிறார்கள் சிம்ரனும் லாலும். இதை தட்டிக்கேட்க முயலும் சிவகார்த்திகேயனை அடக்குவதற்காக சமந்தாவை தங்கள் வீட்டில் அடைத்து வைப்பதோடு நிலம் விற்க தயாராக இருப்பவர்களை சிவகார்த்திகேயனுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள்.
சிம்ரன்-லால் இருவருக்கும் சீமராஜா குடும்பத்துக்கும் என்ன பகை, சம்பந்தம் இல்லாமல் சமந்தாவை ஏன் லால் அடைத்தது வைக்கவேண்டும், தனக்கு எதிராக திரும்பிய விவசாயிகளின் மனதை மாற்றி, சிம்ரன் – லால் அடாவடியை சிவகார்த்திகேயன் எப்படி சமாளிக்கிறார் என்பதெல்லாம் மீதிக்கதை.
கமர்ஷியல் ஹீரோவாக தாய் நிலைநிறுத்திக்கொள்ளும் அத்தனை முயற்சியையும் இதை கையிலெடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். லவ், ஆக்சன், மெசேஜ், பஞ்ச் என தேவைப்படும் இடங்களில் அதற்கேற்ற ஆளாக பக்காவாக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இதுவரையில் நாம் பார்த்திராத, அதிலும் சிலம்பம் சுற்றி மிரளவைக்கும் கிராமத்து சமந்தா செம க்யூட். நட்புக்காக சர்ப்ரைஸ் விசிட் அடித்து சந்தோஷப்படுத்துகிறார் கீர்த்தி சுரேஷ்.
சூரிக்கும் சிவாவுக்குமான கெமிஸ்ட்ரி இதிலும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. சூரி புலியிடம் சிக்கி அவஸ்தைப்படும் காட்சிகள் குழந்தைகளை குதிபோட்டு சிரிக்கவைக்கும். நீண்டநாளைக்குப்பின் நெப்போலியன் வழக்கம்போல கெத்தான நடிப்பை காட்டியுள்ளார். வில்லி வேண்டுமென்பதற்காகவே சிம்ரனை திணித்தது போல தெரிகிறது.. அவரது கணவராக வழக்கம்போல ஒப்புக்கு சப்பாணியாக உதார் விடுகிறார் லால். வில்லன் கூட்டணியில் இருந்துகொண்டே அவர்களை அடிக்கடி கலாய்க்கும் ரஜினிமுருகன் வாழைப்பழ பவுன்ராஜ் தனது பங்கிற்கு க்ளாப்ஸ் அள்ளுகிறார்.
டி.இமான் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகி கொடுத்துவிட்டதால் தம்மடிக்க வெளியே போகாமல் ரிலாக்ஸாக ரசித்து பார்க்க முடிகிறது. காற்றாலைகளின் பிரமாண்டத்தையும் கலர்புல் காதலையும் ஒருசேர கண்களுக்கு விருந்தாக்குகிறது பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு. சந்தையை பூட்டுவது, மல்யுத்த போட்டி நடத்துவது, மாறுவேடத்தில் எதிரியின் ஊருக்குள் நுழைவது என ஆங்காங்கே சில க்ளிஷேக்கள் இருந்தாலும் அதிலும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார்கள். மன்னர் கால பிளாஷ்பேக் காட்சி ‘அட’ என ஆச்சர்யப்பட வைத்தாலும், கதைக்கு பெரிய உதவி எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை. விவசாய பிரச்னையை கதையின் பின்புலத்தில் இழையோட விட்டிருப்பது பாராட்டத்தக்கது.
மொத்தத்தில் இந்த சீமாராஜாவையும் .குடும்பத்துடன் ரசிக்க ஜாலியான படமாக கொடுத்து ஹாட்ரிக் ஹிட் அடித்திருக்கிறது சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணி.