செய் – விமர்சனம்


சினிமாவில் ஹீரோ ஆகும் கனவுடன் சுற்றுபவர் நகுல். ஆம்புலன்ஸ் ட்ரைவரான அவரது தந்தைக்கு திடீரென ஒருநாள் உடல்நலம் சரியில்லாமல் போகவே, அந்த ஆம்புலன்ஸை நகுல் ஓட்டவேண்டியதாகி விடுகிறது. அப்படி ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட உடல் ஒன்று, அமைச்சர் ஒருவரின் அரசியல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அந்த உண்மையை தெரிந்துகொண்டதால் தனது வாழ்க்கைக்கும் சேர்த்தே உலைவைக்கப்போகிறது என்கிற விஷயம் அந்த பயணத்தின்போது நகுலுக்கு தெரியவருகிறது.

வழக்கம்போல அடியாட்கள் குரூப்பும், போலீஸாரும் நகுலை வலைபோட்டு தேட, இந்த சிக்கலில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.

துருதுருவென இருக்கும் நகுலை கதையும் கதாபாத்திரமும் சேர்ந்து ஓவர் ஆக்டிங் செய்ய வைத்து விடுகிறது. ஆம்புலன்சில் பிணத்தை ஏற்றிக்கொண்டு அவ்வளவு ஜாலியாக நகுல் சுத்துவது ஏற்கும்படியாக இல்லை. நாயகியாக ஆஞ்சல் முஞ்சால் என யாரோ ஒருவரை கைகாட்டுகிறார்கள்.. அவ்வளவுதான்.. வேறென்ன சொல்ல..?

க்ளைமாக்ஸ் நெருங்கும் வேளையில் ரொம்பவே பில்டப்புடன் என்ட்ரி கொடுக்கும் பிரகாஷ்ராஜ் கேரக்டரை, யோசித்து பார்க்கமால் டம்மியாக்கி இருப்பது வேதனை.

ஒவ்வொருவரும் தனது இறப்புக்கு பிறகு தங்களது உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு தானம் செய்ய தாமாக முன் வரவேண்டும் என்பதையும் அப்படி வராவிட்டால் நாட்டில் என்னென்ன மாதிரியான கொடூரங்கள் எல்லாம் நிகழ வாய்ப்புண்டு என்பதையும் வலியுறுத்தி படம் எடுத்ததற்காக மலையாள இயக்குனர் ராஜ்பாபுவை பாராட்டலாம்.