செம போத ஆகாத ; விமர்சனம்


பாணா காத்தாடி மூலம் அறிமுகமாகிய பத்ரி வெங்கடேஷ், அதர்வா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் செம போத ஆகாத. டைட்டிலிலேயே போதை என்று சொல்லியிருக்கிறார்கள் படத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போம். அதர்வாவும் மிஷ்டியும் காதலர்கள். இவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிகின்றார். இதனால் விரக்தியில் இருக்கும் அதர்வாவை வேறுவிதமாக சாந்தப்படுத்த விலைமாதுவாக அனைகா சோட்டியை அதர்வாவின் அறைக்கு அனுப்பி வைக்கிறார்.

அன்று இரவு பக்கத்து வீட்டு தேவதர்ஷினியின் மாமாவிற்கு உடம்பு சரியில்லாமல் போக அவரை காப்பாற்றுவதற்காக அனைகாவை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே செல்கிறார் அதர்வா. ஆனால் திரும்பி வந்து பார்க்க அனைகா ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். அனைகாவை கொன்றது யார்? அன்று இரவுக்குள் என்ன நடந்தது? இதற்கான விடையை தேடி கிளம்புகிறார் அதர்வா.. விடை கிடைத்ததா ??

காமெடி கலந்த க்ரைம் திரில்லர் என்று சொல்வார்களே, அப்படி பட்ட வகையை சேர்ந்த படம் இது. அதில் அதர்வா தனக்கு எந்த இடங்களில் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு எல்லாம் ஸ்கோர் பண்ணி இருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் கலக்கியிருக்கிறார். நீண்ட காலத்திற்கு பிறகு கருணாகரன் அனைத்து காட்சிகளிலும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். வெல்டன் கருணாகரன் கீப் இட் அப். கதாநாயகியாக வரும் மிஷ்டிக்கு பெரியளவு வேலையில்லை. விலைமாதுவாக வரும் அனைகா சோட்டியை பாவம் நிறைய நேரம் பிணமாக காட்டியிருப்பது பரிதாபம்.

பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார். கோபிநாத்தின் ஒளிப்பதிவு கேரளாவின் அழகை அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது. ஒரு காமெடி கலந்த ஆக்சன் படத்தை கட்சிதமாக வடிவமைக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். திரைக்கதை இன்னும் கொஞ்சம் கூட்டியிருந்தால் படம் ஜெட் வேகத்தில் பறந்து இருக்கும்.