செண்பக கோட்டை – விமர்சனம்


ஹாரர் படங்களின் வெற்றிக்கு தூணாக நிற்கும் முக்கிய அம்சம் வெறும் பயமுறுத்தல் மட்டும் அல்ல.. அந்தக்கதையில் ஒருவர் பேயாக மாறுவதற்கு சொல்லப்படும் வலுவான காரணத்துடன் கூடிய பிளாஷ்பேக் காட்சி தான் படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது.. அப்படி ஒரு வித்தியாசமான கதைக்கருவுடன் வெளியாகியுள்ள படம் தான் இந்த ‘செண்பக கோட்டை’.. மலையாளத்தில் ‘ஆடுபுலியாட்டம்’ என்கிற பெயரில் வெளியாகி வெற்றிபெற்ற இந்தப்படத்தை தமிழுக்காக ‘செண்பக கோட்டை’யாக மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள்..

ரியல் எஸ்டேட் அதிபரான ஜெயராமுக்கு மனைவி ஷீலு ஆப்ரஹாம், குழந்தை பேபி அக்சரா கிஷோர் என அழகான குடும்பம். ஆனால் சில நாட்களாகவே உறக்கமின்றி தவிக்கும் ஜெயராமுக்கு கொடுங்கனவுகள், நிஜத்திலும் காட்சிகளாக வந்து தொல்லை தருகின்றன. இதிலிருந்து விடுபடுவதற்காக வடமாநிலத்தில் உள்ள சாமியாரான ஓம் புரியை தேடி செல்கிறார் ஜெயராம்.

அப்போதுதான் ஜெயராம் சில வருடங்களுக்கு முன் செண்பககோட்டையை சேர்ந்த ரம்யா கிருஷ்ணனுக்கும் அவரது மகளுக்கும் நம்பிக்கை துரோகம் செய்து அநீதி இழைத்தது தெரியவருகிறது. அந்த செண்பக கோட்டையும் இப்போது ஜெயராம் கைவசம் இருப்பதால் இறந்துபோன ரம்யா கிருஷ்ணனின் குழந்தை ஜெயராமின் குடும்பத்தையே பழிவாங்க துடிப்பதும் தெரியவருகிறது..

இதற்கு பரிகாரம் செய்ய, பூஜை நடத்துவதற்காக செண்பக கோட்டைக்கு வருகிறார் ஓம் புரி.. வந்த இடத்தில், அநீதி இழைக்கப்பட்டதில் அந்த குழந்தை மட்டுமே இறந்துபோய் ஆன்மாவாக அலைவது மட்டுமல்லாமல்,, அதன் தாயான ரம்யா கிருஷ்ணன் உயிரோடு இருப்பதையும் தனது ஞான திருஷ்டியால் கண்டுபுடிக்கும் ஓம் புரி, எப்படியாவது ரம்யா கிருஷ்ணனை அழைத்து வந்தால்தான், அவர் மூலமாக குழந்தையின் ஆன்மாவை சாந்திப்படுத்த முடியும் என்கிறார்..

அப்படி ரம்யா கிருஷ்ணனுக்கு ஜெயராம் இழைத்த அநீதிதான் என்ன, ரம்யா கிருஷ்ணனை ஜெயராம் கண்டுபிடித்தாரா.? அப்படியே கண்டுபிடித்தாலும் தனக்கு அநீதி இழைத்த ஜெயராமுக்கு உதவ ரம்யா கிருஷ்ணன் முன்வந்தாரா, அதற்குள் குழந்தையின் ஆன்மா யார் யாரையெல்லாம் பழிவாங்குகிறது என்பதற்கு திகில் கலந்த க்ளைமாக்ஸ் விடைசொல்கிறது.

ஒரு த்ரில்லர் படத்துக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் இந்தப்படத்தில் இருக்கின்றன. சாதாரண பங்களா டைப் பேய்ப்படங்கள் போல இரவில் மட்டுமே பயப்படுத்தி, பகலில் மொக்கை போடாமல் எந்நேரமும் படம் பார்ப்பவர்களை டெரர் மோடிலேயே வைத்திருக்கின்றது திரைக்கதை.. அதுமட்டுமல்ல மற்ற பேய்ப்படங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட பிளாஸ்பேக்கும் நம்மை ஈர்ப்பதோடு மனதையும் கணக்க வைக்கின்றது.

குற்ற உணர்ச்சியால் வாடும் கேரக்டரில் ஜெயராம் அப்படியே தன்னை பொறுத்திக்கொண்டுள்ளார். பிளாஸ்பேக்கில் வரும் ஜெயராம், ரம்யா கிருஷ்ணனுக்கு செய்யும் துரோகத்தை பார்க்கும்போது, நமக்கே அவர் மேல் பொல்லாக்கோபம் வரும்போது, இறந்துபோன குழந்தையின் ஆன்மாவுக்கு எவ்வளவு கோபம் இருக்கும் என்பது நன்றாகவே புரிகிறது.. அந்த நெகடிவ் கேரக்டரை ஏற்று நடித்ததற்காக ஜெயராமையும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

படத்தின் மிக முக்கிய தூண் என்றால் அது கிராமத்து அப்பாவிப்பெண்ணாக எளிமையாக அதேசமயம் அழுத்தமான நடிப்பை தந்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் தான், வில்லன் சம்பத்திடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்கிறேன் என ஜெயராமின் வலைக்குள் வீழ்ந்து துரோகத்துக்கு ஆளாவதும், பூட்டிய பங்களாவுக்குள் மாட்டிக்கொண்டு தனது மகள் பசிக்கொடுமையால் உயிர்விடுவதை பார்த்து கதறுவதும் என ஜீவனுள்ள நடிப்பை வழங்கியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

எந்த ஒரு விஷயத்திலும் அலட்டிக்கொள்ளாத சாமியாராக வரும் ஓம் புரி, கோபம்கொண்ட குழந்தையின் ஆன்மாவை பக்குவமாக டீல் செய்யும்போதும், ரம்யா கிருஷ்ணனின் கோபத்தை திசை திருப்பும்போதும் சபாஷ் போட வைக்கிறார். குழந்தை அக்சரா கிஷோர் பேயாக உருமாறி அனைவரையும் மிரட்டி எடுக்கும் காட்சிகளில் இந்தக்குழந்தைக்குள் இவ்வளவு நடிப்பா என ஆச்சர்யப்பட வைக்கிறார்.

ரம்யா கிருஷ்ணனை அடைய முயலும் வில்லனாக சம்பத்ராஜ் வந்தாலும் கூட, பாதிக்கப்பட்ட ரம்யா கிருஷ்ணனுக்கு பாதுகாவலானாக பல வருடங்கள் இருப்பதை பார்க்கும்போது உண்மையில் அவரது கேரக்டரின் மீது மதிப்பு கூடவே செய்கிறது.

என்னதான் ஒரு கோபமான ஆன்மாவிடம் இருந்து ஒரு குடும்பத்தை காக்க முயற்சித்தாலும் கூட, தவறு செய்த ஜெயராமுக்கு தண்டனை என எதுவுமே இல்லையே என்பது திரைக்கதியின் ஒரு மூலையில் விழுந்த சிறு ஓட்டை.. அதையும் அடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் படத்தை விறுவிறுப்பாக கொண்டுசென்ற இயக்குனர் கண்ணன் தாமரக்குளம் பாராட்டுக்குரியவரே.