சேத்துமான் விமர்சனம்


எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதைதான் சேத்துமான் என்ற திரைப்படமாக உருவாகியுள்ளது.

சேற்றில் திரியும் பன்னி தான் சேத்துமான், அதை சாப்பிட ஆசைப்படும் மனிதர்களால் வந்த வினை தான் படத்தின் கதை.

நாமாக்கல் அருகே உள்ள ஒரு கிராமம், அங்கு கூடை பின்னி சந்தையில் விற்கும் பூச்சியப்பன் தனது பேரன் குமரேசனுடன் வாழ்ந்து வருகிறார். மாட்டுக்கறி சாப்பிட்டதால் ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட பெற்றோர்களை இழந்த சிறுவன் அவன்.

எப்படியாவது பேரனை நன்றாக படித்து வைத்துவிட வேண்டும் என லட்சியத்துடன் இருக்கிறார் பூச்சியப்பன். அதே சமயம் அந்த ஊர் பண்ணையாரான வெள்ளையனுக்கு பகுதி நேரம் உதவியாக வேலை செய்கிறார்.
ஒரு நாள் பண்ணையாரும், அவரது குழுவும் இணைந்து சேத்துமான் கறி ( பன்றிகறி ) சாப்பிட ஆசைப்பட்டு ரங்கனிடம் வாங்குகின்றனர். இறுதியில் அவர்களின் விருப்பத்தால் விபரீதம் ஏற்படுகிறது. அது என்ன என்பதே கதை.

பூச்சியப்பன் தாத்தாவாக நடித்துள்ள மாணிக்கம் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவரது பேரன் குமரேசனாக நடித்துள்ள அஸ்வினும் அவரது நடிப்பால் நம் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பார். அதேபோல, பண்ணையாராக நடித்துள்ள “நக்கலைட்ஸ்” யூட்யூப் சேனல் பிரசன்னா பாலசந்திரன் கோவக்கார பண்ணையாராக அசத்தியிருக்கிறார்.

பூச்சியப்பன், ரங்கன் இருவரும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்கள் என்றாலும் பூச்சியப்பனின் பணிவு, ரங்கனின் திமிர் என இரண்டும் பேசப்படும்.

குடியரசுத் தலைவர் பதவியில் பொறுப்பேற்றுக்கொண்ட செய்தி வருகையில், ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னும் ஒடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதை இயல்பாக படம் பதிவு செய்கிறது.

பாசக் காட்சிகளை அடிப்படையாக வைத்து சாதி அரசியலை, குறிப்பாக உணவு அரசியலை அப்பட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் தமிழ்.

பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். பிந்து மாலனியின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.

இந்த சேத்துமான் அனைவரும் பார்க்கவேண்டிய படம்.