சிலுக்குவார்பட்டி சிங்கம் – விமர்சனம்


ராட்சசன் என்கிற அதிரடி ஆக்சன் படத்தில் நடித்த விஷ்ணு விஷால் சற்றே இளைப்பாறுவது போல நடித்திருக்கும் அக்மார்க் விஷ்ணுவிஷால் பிராண்ட் படம்தான் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம்.

திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி கிராமத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சாதாரண கான்ஸ்டபிள் தான் விஷ்ணு விஷால். தனது முறைப்பெண்ணான ரெஜினாவை காதலிக்கிறார் விஷ்ணு ஆனால் ரெஜினாவின் தந்தையோ மகளை தனது சொந்தத்தில் உள்ள சௌந்தர்ராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் இந்த நிலையில் அந்தத் தொகுதியை சேர்ந்த மந்திரியை கொல்வதற்காக இன்னொரு மந்திரி ஒருவரால் ஏவிவிடப்பட்ட தாதா சைக்கோ சங்கர் சிலுக்குவார்பட்டி வருகிறார்

வந்த இடத்தில் பாரில் நடக்கும் ஒரு கலாட்டாவில் அவர் மிகப் பெரிய தாதா என தெரியாமலேயே, விஷ்ணு அவரை நையப்புடைத்து லாக்கப்பில் கொண்டுபோய் தள்ளுகிறார் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு மேல் வேறுவழியில்லாமல் கைதியாக இருக்கும் சைக்கோ சங்கரை அவரது கையாட்களான யோகிபாபு அன் கோ வந்து காப்பாற்றி அழைத்துச் செல்கிறது தன்னை அவமானப்படுத்திய விஷ்ணுவை தீர்த்து விட்டுத்தான் மறுவேலை எனது சபதம் செய்து விஷ்ணுவை தேடுகிறார் சைக்கோ சங்கர்

இந்த தகவலை அறிந்து பயந்துபோய் விஷ்ணுவிஷால் மாறுவேடத்தில் சுற்ற ஆரம்பிக்க, இந்த நிலையில் ரெஜினாவின் திருமணத்தை நிச்சயம் செய்யும் அவரது தந்தை உடனடியாக திருமணம் நடத்த நாள் குறிக்கிறார் ஒரு பக்கம் திருமணத்தை தடுக்க வேண்டிய கட்டாயம், இன்னொரு பக்கம் வெளியே வந்தால் சைக்கோ சங்கரின் கையில் சிக்கக்கூடிய அபாயம் இது இரண்டையும் சமாளித்து தனது காதலியை கரம்பிடித்தாரா விஷ்ணு என்பதுதான் மீதிக்கதை

கதை என்னவோ வழக்கமாக சில படங்களில் நாம் பார்த்தது தான் ஆனால் அதை அழகாக ரசிக்கும்படியாக வயிறு குலுங்க சிரிக்கும் படியாக கொண்டு சென்ற விதம் தான் இந்த படத்தை இன்னும் ஒரு ‘வெள்ளக்காரன்’ லிஸ்டில் சேர்க்க வைத்திருக்கிறது யோகிபாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், கருணாகரன் இப்படி ஏகப்பட்ட காமெடி பட்டாளங்களுக்கு இடையே தன்னை நுழைத்துக்கொண்டு தனக்கான பாதையில் கலாட்டாவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஷ்ணு விஷால்.

கவர்ச்சி ரொமான்ஸ் என சரிவிகித கலவையாக வழக்கமான டிபிக்கல் நாயகியாக வந்தாலும் தனது அழகால் நம்மை கவர்கிறார் ரெஜினா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நீண்ட நாள் கழித்து முதன்முதலாக இந்த படத்தில் தலை காட்டி இருக்கிறார் ஓவியா.. சிறப்பு.. கருணாகரன் அளவு சாப்பாடு போல காமெடியை கையாள, யோகிபாபு மற்றும் ஆனந்தராஜ் இருவரும் அன்லிமிடெட் காமெடியை குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள் ஆக்ரோசமான வில்லன் தான் என்றாலும் இந்தப்படத்தில் காமெடியுடன் ஒன்ரியுள்ளார் சைக்கோ சங்கராக வரும் ரவிசங்கர்.

படம் இடைவேளை வரை சாதாரணமாக நகர்ந்தாலும், இடைவேளைக்கு பிறகு காட்சிக்கு காட்சி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்திருக்கிறார்கள். குறிப்பாக அந்த பாத்ரூம் காமெடி பல நாட்கள் பேசப்படும்

க்ளைமாக்ஸ் சமயத்தில், நடக்கும் காட்சிகள் நாம் சுந்தர்.சி படத்துக்குத்தான் வந்துவிட்டோமோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன இயக்குனர் செல்லா அய்யாவு ரசிக்கும் வகையில் தான் இந்தப்படத்தை கொடுத்திருக்கிறார்.