வடசென்னையில் சேட் ஒருவருக்காக, ஒழுங்காக ட்யூ கட்டாத கார்களை தூக்கிக்கொண்டு வரும் வேலை பார்க்கிறார்கள் விக்ரம் அன் கோவினர். ஆனால் சேட்டின் அப்பாவுடைய காரையே சில வருடங்களுக்கு முன் ஏரியா ரவுடி பாபுராஜ் அபகரித்து வைத்திருக்கும் விஷயம் தெரியவர, ஸ்கெட்ச் போட்டு நண்பர்களுடன் அந்த காரை லவட்டிக்கொண்டு வந்து சேட்டிடம் கொடுக்கிறார் விக்ரம்.
இதை தொடர்ந்து வரும் நாட்களில் விக்ரமின் நண்பர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட, தனது கேங்கிலிருந்து முன்பு பிரிந்து சென்ற ரவுடி ஆர்கே சுரேஷ் மீது சந்தேகப்படுகிறார். ஆனால் அவரும்கூட மறுநாளே கொலையாகி கிடக்க விக்ரமின் சந்தேகம் இப்போது ரவுடி பாபுராஜ் மீது திரும்ப,, அவரை ஸ்கெட்ச் போட்டு காலி பண்ணுகிறார் விக்ரம்.
ஆனால் பாபுராஜூம் தனது நண்பர்களை கொல்லவில்லை என்கிற உண்மை விக்ரமுக்கு தெரியவருகிறது. அப்படியானால் நண்பர்களை கொன்றது யார்..? எதற்காக..? அவர்களிடம் இருந்து விக்ரம் தப்பித்தாரா என்கிற அதிர்ச்சியுடன் படம் முடிகிறது. இதில் விக்ரமின் கரடு முரடான வாழ்க்கையில் காதல் தென்றலாக உள்ளே வரும் தமன்னா, அவரது வாழ்க்கையில் என்னவித மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பது உபரி கதை.
கடந்த சில வருடங்களாகவே பரிசோதனை முயற்சியிலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவந்த விக்ரம், இதில் மீண்டும் அதிரடி ஆக்சனுக்கு திரும்பியிருப்பதோடு, கூட பஞ்ச் வசனங்களும் பேசி தனது ரூட்டை திசை திருப்பியுள்ளார். அவரது ஆக்சன் காட்சிகளிலேயே ரவுடி பாபுராஜூக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்குவது அசத்தல் ரகம்.
ஜாடிக்கேத்த மூடியாக தமன்னா.. ரவுடியின் நல்ல உள்ள மனதை அறிந்து காதலில் விழும் கிளிஷே கேரக்டர் தான் என்றாலும் நடிப்பில் அழுத்தம் கொடுத்திருக்கிறார். தமன்னாவின் தோழியாக வரும் ஸ்ரீபிரியங்காவுக்கும் மனதில் நிற்கும் வேடம் தான். சிறப்பாக செய்திருக்கிறார்.
சேட்டாக வரும் ஹரீஷ் பெராடி இனிவரும் காலங்களில் தமிழ்சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பார் என்பதை இதிலும் நிரூபித்திருக்கிறார். முன்கோபம் கொண்ட வில்லனுக்கு ஏற்ற முகபாவங்கள் ஆர்கே சுரேஷிடம் அழகாக வந்துபோகின்றன. அவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம்.
இன்னொரு புதிய வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜூம் ரவுடிக்கான கெத்தை மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார். ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக என்ட்ரி கொடுக்கும் அந்த நபர் வெறும் பில்டப்புடன் நின்றுவிடுவது ஏனோ..?
சூரி இருந்தாலும் கூட காமெடி ஏரியாவை தங்கள் வசம் திருப்பிக்கொண்டுள்ளனர் விக்ரமின் கூடவே நண்பர்களாக பயணிக்கும் விஸ்வந்த், ஸ்ரீமன் உள்ளிட்டோர். வழக்கமான சூரியை எதிர்பார்த்து போகிறவர்களுக்கு சற்றே ஏமாற்றம் தான் என்றாலும் அது அவரது தவறு இல்லை என்பதையும் சொல்லியாகவேண்டும்.
வடசென்னையின், வேறு ஒருமுகத்தை காட்டும் சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ் என்றால் தமனின் இசை ஆங்காங்கே வேகத்தடை போடுகிறது. விக்ரமின் காதல் காட்சிகள், நண்பர்களை காப்பாற்ற விக்ரம் எடுக்கும் நடவடிக்கைகள் இவற்றுக்க்காக திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக ஸ்கெட்ச் போட்டிருக்கலாம் என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
அதேசமயம் கார் சீசிங் என்கிற விஷயத்தை சுற்றி கதையை நகர்த்தினாலும் பள்ளிக்கு செல்லாமல், வீண் வேலைகளில் ஈடுபடும் சிறுவர்களின் எதிர்காலம் எப்படி சீரழிகிறது என்கிற நல்ல கருத்தையும் சொன்னதற்காக விஜய்சந்தரை பாராட்டலாம்.