சொல்லிவிடவா – விமர்சனம்


தனது மகள் ஐஸ்வர்யாவின் திறமையை முழுதும் வெளிக்கொண்டு வருவிதமாக அவரது தந்தை அர்ஜூனே இயக்குனராக மாறி களத்தில் குதித்துள்ள படம் தான் ‘சொல்லி விடவா’.

பிரபல சேனல் ஒன்றில் கேமேராமேனாக இருப்பவர் சந்தன்குமார்.. அதேபோல இன்னொரு சேனலில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருக்கிறார் ஐஸ்வர்யா. பெற்றோரை இழந்து தாத்தா விஸ்வநாத், அத்தை சுகாசினி ஆகியோரின் ஆதரவில் வளரும் ஐஸ்வர்யாவை, தனது மகனுக்கு நிச்சயம் செய்கிறார் சுகாசினி.

இந்தநிலையில் கார்கில் போரில் வீரர்களின் சாகசங்களையும் தியாகங்களையும் படம்பிடிக்க தங்களது சேனல்கள் சார்பாக சந்தன்குமாரும் ஐஸ்வர்யாவும் அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.. டில்லி சென்றதும்தான் தாங்கள் போர்முனைக்கு செல்கிறோம் என்பது தெரியவர இருவருடனும் உடன் வந்த நண்பர்கள் கழன்றுகொண்டு ஊருக்கு திரும்புகிறார்கள்.

இதனால் இவர்கள் இருவரும் ஒருவருக்கு உதவியாக மற்றவர் போர்க்களத்தில் காட்சிகளை பதிவு செய்து சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்கள். போர்க்களத்தில் நிகழும் சிற்சில நிகழ்வுகள் எலியும் பூனையுமாக இருந்த இந்த இருவரின் மனதிலும் காதலை விதைக்கின்றன.

போர் முடிந்து ஊர் திரும்பும் ஐஸ்வர்யாவுக்கும் சுகாசினி மகனுக்கும் திருமண வேலைகள் ஜரூராக நடக்கின்றன. இதனால் இருவரும் தத்தம் காதலை சொல்லாமல் மனதிற்குள் புதைக்கின்றனர்.. அதையும் தாண்டி இவர்களது காதல் ஒன்று சேர்ந்ததா..? இல்லை காதலை தியாகம் செய்து தியாகிகள் பட்டம் பெற்றார்களா என்பது க்ளைமாக்ஸ்.

காதலை தனக்கே உரிய நாட்டுப்பற்று கதைக்களத்தில் கார்கில் போரின் பின்னணியில் சொல்லியிருக்கிறார் அர்ஜூன். ஒரு ஹீரோவுக்கான சர்வ லட்சணங்களுடன் சூப்பரான சண்டைக்காட்சிகளிலும் மென்மையான காதல் காட்சிகளிலும் கூடவே சென்டிமென்ட் காட்சிகளிலும் தனது திறமையை சரியாக பறைசாற்றியுள்ளார் அறிமுக நாயகன் சந்தன் குமார்.. அடுத்ததடுத்து சரியான கதை தேர்வுடன் திறமையான இயக்குனர்களின் கைகளில் சிக்கினால் சினிமாவில் நல்ல ஒரு இடத்தை பிடிக்கலாம்.

முதல் படத்தில் ஏனோதானோவென நடித்த பெண்ணா இது என திகைக்க வைக்கிறார் நாயகி ஐஸ்வர்யா. குறிப்பாக நடனம் மற்றும் வசனம் இரண்டிலும் அசத்துகிறார். காதலை சொல்லமுடியாமல் தவிக்கும் சென்டிமென்ட்டிலும் கோட்டை விடவில்லை. அந்தளவுக்கு அவரது தந்தையான இயக்குனர் அர்ஜூன் மகளின் முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.. இருவருக்குமே ஆளுக்கொரு சபாஷ்..

இடைவேளைக்கு முந்திய காட்சிகளில் வரும் யோகிபாபு, சதீஷ், பிளாக் பாண்டி, போண்டா மணி சிறிய அளவிலான பங்களிப்புடன் நகர்கின்றன. அத்தையாக சுகாசினி, தாத்தாவாக கே.விஸ்வநாத் இருவரும் நிறைவான நடிப்பு. மிதமான காமெடியுடன் குணச்சித்திர வேடத்தில் ஹீரோவின் பாசக்கார அப்பாவாக மொட்ட ராஜேந்திரன் ‘பக்கா’. சுபேதாராக வரும் ஓ.ஏ.கே சுந்தர் நிறைவான கேரக்டர். நட்புக்காக ஒரே காட்சியில் தலைகாட்டினாலும் நெகிழ வைக்கிறார் பிரகாஷ்ராஜ்.

போர்க்கள காட்சிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களாக நடித்துள்ள பலரும் நிஜ வீரர்களாகவே காட்சி தருகின்றனர். ஹெச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவில் காஷ்மீர் பகுதியில் போர்க்கள காட்சிகளை படமாக்கிய விதம் அருமை.. அதேபோல முதல் காட்சியிலேயே ஜாக்கிசான் பாணியில் தப்பிக்கும் ஹீரோவின் சேசிங் காட்சிகல் படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்ப்.. இசையமைப்பாளர் ஜாஸி கிப்ட் இசையில் இந்தப்படத்தின் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை நிறைவு..

இதுவரை சொல்லப்படாத புதிய கதை இல்லையென்றாலும், போர்க்களத்தில் காதல் மலர்வதை சொன்ன விதம் புதுசு.. அதையும் ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் நயமாகவே கையாண்டிருக்கிறார் அர்ஜூன். அடிக்கடி வரும் பாடல்களுக்கு கொஞ்சம் தடை போட்டிருக்கலாம்.

சில விஷயங்களை குறிப்பாக காதலை சொல்வதில் காலம் தாழ்த்துவது கூடாது எனும் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். இயக்குனர் அர்ஜூன்,