சுல்தான் ; விமர்சனம்


நூறுக்கும் குறையாத ரவுடிகளுக்கு சோறுபோட்டு வளர்க்கும் மிகப்பெரிய தாதா நெப்போலியன். பிரசவத்தில் மனைவி இறந்துவிட ரவுடிகள் மத்தியில் வளரும் தனது மகன் கார்த்தியை மும்பைக்கு அனுப்பி படிக்க வைக்கிறார். ஒருகட்டத்தில் என்கவுண்டரில் நெப்போலியன் கொல்லப்பட, தன்னை நம்பி இருக்கும் ரவுடி கூட்டத்தை காப்பாற்றும் பொறுப்பை கார்த்தியிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார்.

உள்ளூரில் இருந்தால் இந்த கும்பலை என்கவுண்டரில் போட்டுத்தள்ளுவதாக போலீஸ் அதிகாரி ஹரீஷ் பெராடி மிரட்ட, அவரிடம் இந்த ரவுடிகளை திருந்தி வாழ வைக்கிறேன் என சான்ஸ் கேட்கிறார் கார்த்தி. நில ஆக்கிரமிப்பு செய்யும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தால் துன்பப்படும் பொன்வண்ணன் கிராமத்துக்கு உதவுவதாக தனது தந்தை வாக்குறுதி அளித்தது தெரிய வருகிறது. அதை நிறைவேற்றவும், அப்படியே தங்களது கூட்டத்தை இடம் மாறி இருக்க செய்யவும் அந்த கிராமத்துக்கு அழைத்து செல்கிறார் கார்த்தி..

அந்த ஊரையே குலை நடுங்க வைக்கும் ரவுடி ராமச்சந்திர ராஜு, அவரை ஏவிவிட்டு நிலங்களை சூறையாட நினைக்கும் கார்ப்பரேட் முதலாளி நவாப் ஷா ஆகியோரின் தாக்குதலை சமாளித்து, கார்த்தி அந்த கிராமத்து நிலங்களை மீட்டாரா? தனது ரவுடி கூட்டத்தையும் போலீசாரின் என்கவுண்டரில் இருந்து அவரால் காப்பாற்ற முடிந்ததா என்பது மீதிக்கதை.

கல்யாண வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் பத்து நாளைக்கு திரும்பி போகாமல் இருந்தால் எப்படி ஜேஜே என இருக்குமோ, அதுபோல இந்தப்படம் முழுதும் அப்படி ஆட்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இவர்கள் அனைவரயும் மேய்க்கும் மேய்ப்பனாக கார்த்தி. அவரது நடிப்பு என்றைக்கு சோடை போயிருக்கிறது..? இதிலும் தனது நூறு சதவீத பங்களிப்பை தந்து படம் முழுதும் எனர்ஜியுடன் வலம் வருகிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன்பு வரும் சண்டைக்காட்சி அதிரடி சரவெடி.

ஆனால் கார்த்தி அளவுக்கு நாயகி ராஷ்மிகாவால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. சிட்டி படங்களில் க்யூட்டாக பார்த்து பழகிய ராஷ்மிகா, இந்தப்படத்தில் கதையோடும் கார்த்தியோடும் ஒட்டாமல் தனித்து தெரிகிறார். குறிப்பாக கார்த்தியை அவர் மிரட்டும் காட்சிகளை சொல்லலாம். மேலும், ராஷ்மிகாவின் மேக்கப்பில் கவனம் செலுத்தியதுடன் குளோசப் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம்.

கிட்டத்தட்ட இன்னொரு கட்டப்பா என சொல்லும் அளவுக்கு மாமாவாக வரும் லால், யோகிபாபு, சென்றாயன் என பாரபட்சம் இல்லாமல் அனைவரையுமே ரவுடி கூட்டமாக மாற்றி இருக்கிறார்கள். ஆரம்ப காட்சிகளை கலகலப்பாக நகர்த்த யோகிபாபு உதவுகிறார். ரவுடி கூட்டத்தில் உள்ள சிலர் தனித்துவமாக தங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

கார்ப்பரேட் வில்லனுக்கு தோதான நடிகராக பாலிவுட் நவாப் ஷா. வழக்கமான ஸ்டைலிஷ் வில்லன்.. துணை வில்லனாக வரும் கேஜிஎப் புகழ் ராமச்சந்திர ராஜு ஊர் மக்களை மிரட்டும் காட்சிகளும் அந்த இடமும் சற்றே அன்னியப்பட்டு தான் தெரிகிறது.. பொன்வண்ணன், மயில்சாமி, மாரிமுத்து, ரமா, என பலரும் கிராமத்து மனிதர்களாக நம் மனதில் பதிந்து கடந்து போகிறார்கள். போலீஸ் தைகாரியாக வரும் ஹரீஷ் பெராடி ஏதாவது அதிரடி காட்டுவார் என பார்த்தால், நம்மை ஏமாற்றி விடுகிறார்.

இத்தனை கூட்டத்தையும் அவர்களது அலம்பல்களையும் தனது கேமராவுக்குள் அடைத்து மேஜிக் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன். விவேக்-மெர்வின் இசையில் ஏ சுல்தான் பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் யுவனின் பின்னணி இசை பல காட்சிகளில் நமக்கு டெம்பர் ஏற்றுகிறது..

விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், கார்ப்பரேட் முதலாளிகளிடம் அவற்றை இழந்துவிட கூடாது என்கிற அருமையான கருத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்கியுள்ளார் பாக்யராஜ் கண்ணன். அதேசமயம் கிட்டத்தட்ட நூறு ரவுடிகளை கார்த்தியின் பக்கம் உள்ள நல்லவர்களாகவே காட்டியிருப்பதால் ஆக்சன் காட்சிகளில் சற்றே மாஸ் குறைந்தது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.. இவ்வளவு களேபரங்கள் நடக்கும் அந்த கிராமத்திற்கு கடைசி வரை ஒரு போலீஸ், மீடியா கூட எட்டி பார்க்காதது ஆச்சர்யம். திரைக்கதையில் இன்னும் சில மிரட்டல்களை நுழைத்திருக்கலாம். அதேசமயம் ஒரு கமர்ஷியல் பார்முலா கதையை திறம்பட கையாண்டு, டைரக்சனில் இன்னொரு படி மேலே ஏறியுள்ளார் பாக்யராஜ் கண்ணன்