டாணா – விமர்சனம்


ஆங்கிலேயர்கள் காலத்தில் வீரமாக செயல்பட்டவர்களை போலீசாக்கி அவர்களுக்கு டாணா என்று பெயர் வைக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு தலைமுறையாக போலீசாகி வருகிறார்கள்.

இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தவர் தான் பாண்டியராஜன். இவர் உயரம் குறைவாக இருப்பதால் போலீசுக்கு தேர்வாக முடியவில்லை. இதனால் தன்னுடைய மகன் வைபவை போலீசாக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ஆனால் வைகோவுக்கு வித்தியாசமான ஒரு பிரச்சனை இருக்கிறது. அது என்னவென்றால் அவர் கோபப்பட்டாலும், சந்தோசப் பட்டாலும், உணர்ச்சி வசப்பட்டாலும் அவரது குரல் பெண் குரலாக மாறிவிடுகிறது. இதனால் அவர் போலீஸ் வேலைக்கு முயற்சி செய்யாமல் இருக்கிறார்.

இந்நிலையில் இவர்களின் குல தெய்வம் கோயிலுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் வைபவ் தானும் ஒரு போலீஸ் ஆக வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால் அவரது போலீஸ் முயற்சிக்கு தடங்கல் வருகிறது.

அது என்ன தடங்கல்? பிரச்சனையை சமாளித்து வைபவ் போலீஸ் ஆனாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் வைபவ், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். தனக்கே உரிய இளமை துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். யோகிபாபுவின் காமெடி படத்திற்கு பலம். வைபவ் – யோகிபாபு கூட்டணி சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

வைபவிற்கு அப்பாவாக வரும் பாண்டியராஜன், அம்மா உமா ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். சைலண்ட் கில்லராக வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ஹரிஷ் பெராடி.

போலீஸ் கதையை தேர்ந்தெடுத்து இருக்கும் இயக்குனர் யுவராஜ் சுப்பிரமணி அதில் காதல் காமெடி மற்றும் பாரம்பரியத்தையும் சேர்த்து கலவையாக படத்தை இயக்கியுள்ளார்.

குறிப்பாக இதில் டேட்டா பேஸ் மற்றும் டேட்டா எக்ஸ்சேஞ் என தனிமனித ரகசிய தகவல்களை திருடுதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்.

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சிவாவின் ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் காமெடி கலாட்டாவாக வந்துள்ளது இந்த டாணா திரைப்படம்.