தமிழ்படம் -2 ; விமர்சனம்


சி.எஸ்.அமுதன்-சிவா கூட்டணியில் சில வருடங்களுக்கு முன் வெளியாகி பட்டையை கிளப்பிய படம் தான் ‘தமிழ்படம்’.. தற்போது அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள தமிழ்படம்-2 அதே போல பட்டையை கிளப்பியுள்ளதா..? பார்க்கலாம்.

கதை என பெரிதாக ஒன்றுமில்லை.. தனக்கு இடைஞ்சலாக இருக்கும் போலீஸ் அதிகாரியான சிவாவை மிரட்டுவதாக அவரது மனைவி திஷா பாண்டேவை சுட்டுக்கொள்கிறார் தீவிரவாதியான சதீஷ்.. முகம் தெரியாத அவரை கண்டுபிடித்து அழிப்பதற்காக மீண்டும் டூட்டியில் சேர்கிறார் சிவா. கூடவே பாட்டி கலைராணியின் அறிவுரையை ஏற்று இன்னொரு திருமணம் செய்ய காதலிக்க தொடங்குகிறார். ஐஸ்வர்யா மேனனுடன் சிவா காதலில் விழ, அவரையும் போட்டுத்தள்ளுகிறார் சதீஷ். மீண்டும் சதீஷ்-சிவா டக் ஆப் வார் தொடங்குகிறது. முடிவில் யாருக்கு ஜெயம் என்பது க்ளைமாக்ஸ்.

சினிமா, அரசியல் நிகழ்வுகளை மரண கலாய் கலாய்க்க வேண்டும். ரசிகர்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற நோக்கில் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள்.. ஆரம்பத்தில் சில காட்சிகள் அப்படி இருந்தாலும் முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யத்தை இந்தப்படத்தில் அப்படியே கொண்டுவர முடியவில்லை என்பதே உண்மை.

லேட்டஸ்ட்டாக வந்த படங்களின் காட்சிகள், அரசியல் நிகழ்வுகள் என சமீபத்தில் வெளியான சர்கார் பர்ஸ்ட் லுக் வரை சகட்டுமேனிக்கு கலாய்த்திருக்கிறார். படம் முழுதும் சிவாவின் தோள்களிலேயே பயணிப்பதால், அதை சுமக்க ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். டீசரில் பார்த்து ரசித்த வெகுசில விஷயங்களே ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. ஹீரோ சிவாவை விட காமெடியன், இல்லையில்லை வில்லன் பீயாக (என்ன பெயரோ) நடித்துள்ள சதீஷ், அதிக காட்சிகளில், அதிக கெட்டப்புகளில் வருகிறார். ஆனால் இவரும் நிறையவே ஏமாற்றுகிறார்.

கதாநாயகியாக வரும் ஐஸ்வர்யா மேனன் துறுதுறுவென இருக்கிறார். நடிப்பை நிரூபிக்க இன்னொரு படத்தில் நடித்தால் போச்சு.. முந்தைய பட நாயகி திஷா பாண்டேவை ஒரே ஒரு காட்சியில் மட்டும் காட்டிவிட்டு மேலே அனுப்பி விடுகிறார்கள் பாவம்… பாதி சீரியஸ், பாதி காமெடி என தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் போலீஸ் அதிகாரியாக வரும் சேத்தன். அழுமூஞ்சியாகவே பார்த்துவந்த கலைராணி இதில் காமெடி பண்ண முயற்சித்திருக்கிறார். மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், சந்தான பாரதி என சிவாவின் இளம்வயது நண்பர்கள் கூட்டணிக்கு வேலை குறைவு தான்.

பாடல்களும் வழக்கம்போல கிண்டல் ரகம் தான். சிரித்துவிட்டு போகலாம். ஓவர் கான்பிடன்ஸ் என சொல்வார்களே, இந்தப்படத்தில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் காட்டியிருப்பது அதுதான். ஹிட் படங்களின் காட்சிகளை கலாய்க்க முயற்சி செய்தவர், அதை அழகான கதை ஒன்றால் கோர்த்திருக்கலாம். அதை சரியாக செய்ய தவறிவிட்டார் மனிதர். இருந்தாலும் கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் நிறைய இடங்களில் சிரிக்க வைத்தே அனுப்புகிறார்கள் இயக்குனர் சி.எஸ்.அமுதனும் நாயகன் சிவாவும்.