தம்பி – விமர்சனம்


சத்யராஜ் மேட்டுப்பாளையம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். சத்யராஜின் தாய் சௌகார் ஜானகி. இவருடைய மனைவி சீதா, மகள் ஜோதிகா டீச்சராக பணிபுரிகிறார். சத்யராஜின் மகன் 15 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போகிறார்.

நாயகன் கார்த்தி ஒரு ஏமாற்றுப் பேர்வழி. கோவாவில் பல பேரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார். நான்தான் காணாமல் போன உங்கள் மகன் என்று சத்யராஜ் வீட்டிற்கு வருகிறார் கார்த்தி.

இங்கு வந்த பிறகு கார்த்தி குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தாலும், அவரை கொல்ல சதித்திட்டம் நடக்கிறது. அது யார்? எதற்கு கொல்ல நினைக்கிறார்கள்? சத்யராஜின் காணாமல் போன மகன் கார்த்தி தானா? காணாமல் போக என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கார்த்தி தனது அசத்தலான நடிப்பால் மீண்டும் முத்திரை பதித்துள்ளார். திருடனாக மற்றவர்களை ஏமாற்ற செய்யும் சேட்டைகளும், பெற்றோர் மற்றும் அக்காவின் பாசத்திற்கு ஏங்கும் பரிதாபமான நடிப்பும் ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது.

டீச்சராக வரும் ஜோதிகா, கண்டிப்பு, துணிச்சல், பாசம் என தன் திறமையை அவருக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் இறுதிக்காட்சியில் ஜோதிகா அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நிகிலா விமல், காதல் காட்சிகளிலும், அப்பா தவறு செய்தவுடன் வருத்தப்படும் காட்சிகளிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.

எம்.எல்.ஏ.வாக வரும் சத்யராஜ், ஒரு தந்தையாக மிளிர்கிறார். அவருடைய அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். அமைதியான அம்மாவாக நடித்திருக்கிறார் சீதா.

படத்திற்கு இன்னொரு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது சௌகார் ஜானகியின் நடிப்பு. பார்வையாலேயே பேசும் சௌகார் ஜானகி இந்த வயதிலும் தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார்.

அஸ்வந்த் காமெடியில் அசத்தி இருக்கிறார். இளவரசு, பாலா, ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

பாபநாசம் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக தந்த இயக்குநர் ஜீத்து ஜோசப் தற்போது தம்பி திரைப்படத்தையும் குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கும்படி கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக வந்துள்ளது இந்த ‘தம்பி’ திரைப்படம்.