தொண்ணூறுகளில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்தபடம் உருவாகியுள்ளது. நள்ளிரவில் வீடு புகுந்து அனைவரையும் தாக்கி கொள்ளையடிக்கும் கும்பல்.. போலீஸார் அந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் தடுமாறிக்கொண்டு இருக்கும்போதே அதேபாணியில் வெவ்வேறு நகரங்களில் நகை, பணத்துக்காக கொலை நடப்பது தொடர்கிறது.
போலீஸ் ட்ரெய்னிங் முடித்து ஐ.பி.எஸ் அதிகாரியாகும் கார்த்தி (தீரன் திருமாறன்) இந்த வழக்கை கையில் எடுக்கிறார். ஒருகட்டத்தில் இந்த திருட்டு கொலை கும்பல் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து. கண் காணாத இடத்தில், மொழி தெரியாத ஊரில் பதுங்கியிருக்கும் அந்த கொள்ளையர் கூட்டத்தை வேரோடு சாய்க்க, தனிப்படையுடன் கிளம்புகிறார் கார்த்தி. அவரால் அதை சாதிக்க முடிந்ததா..? அதற்கு அவர் கொடுத்த விலை என்ன என்பது மீதிப்படம்.
சூப்பர்மேன் போலீஸாக இல்லாமல், யதார்த்த வீரம் கொண்ட போலீஸாக, தனது முந்தைய படத்தில் இருந்து இந்த தீரன் கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார் கார்த்தி. ராஜஸ்தானில் அவருடைய சண்டை மற்றும் சேசிங் காட்சிகள் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பை கூட்டுவதுடன் அவருடைய துணிச்சல் நம்மை அசரவும் வைக்கிறது.
முதல் பாதியில் தனக்கு கொடுக்கப்பட்ட அதிலும் ஆரம்ப கால் மணி நேரத்தில் மட்டுமே கார்த்தியுடனான ரொமான்ஸ் காட்சிகளை ரசிகர்களை குஷியாக்குகிறார் ரகுல் பிரீத் சிங். அதன்பின் அவரது காட்சிகள் குறைவது போலீஸ் படங்களின் நாயகிகளுக்கே உண்டான சாபம்…
படம் முழுதும் நம்மை மிரளவைப்பது அந்த திருட்டுக்கும்பலின் அட்டகாசம் தான். அந்த வேலையை கொள்ளை கும்பல் தலைவனாக நடித்துள்ள அபிமன்யு சிங் மற்றும் ரோஹித் பதக், சுரேந்தர் தாகூர் உள்ளிட்டோர் கன கச்சிதமாக செய்துள்ளனர். படம் முழுதும் கார்த்திக்கு பக்கபலமாக வரும் போஸ் வெங்கட் நிறைவாக செய்துள்ளார். சத்யன் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நட்புக்காக வந்து போகிறார்.
பாடல்களை பின் தள்ளி, பின்னணி இசையில் அசுர வேகம் காட்டியுள்ளார் ஜிப்ரான். இடைவேளைக்கு முந்திய மழை இரவு சண்டைக்காட்சி, ராஜஸ்தானின் நள்ளிரவு சண்டைக்காட்சி, பாலைவனத்தில் பஸ் சேசிங் என மிரட்டி எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.
டெக்னாலஜி வளராத அந்த காலகட்டத்தில் கொலை, கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் வகுக்கும் வியூகம், அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என ஒவ்வொன்றையும் டீடெய்லாக காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக திலீப் சுப்பராயன் மாஸ்டரின் உதவியுடன் சண்டைக்காட்சிகளில் அதிர வைக்கிறார் மனிதர்.
ஆரம்பத்தில் கார்த்தி-ரகுல் சம்பந்தப்பட்ட காதல் கலாட்டா காட்சிகள் தான் படத்திற்கு கொஞ்சம் ஸ்பீட் பிரேக் போடுகின்றன. உயிரை பணயம் வைத்து எதிரிகளை வேட்டையாடும் போலீஸாருக்கு இந்த அரசாங்கமும், உயரதிகாரிகளும் என்ன மதிப்பு தருகிறார்கள் என்பதை இறுதியாக முகத்தில் அறைகிற மாதிரி சொல்லியிருக்கிறார் வினோத். முதல் படமான ‘சதுரங்க வேட்டை’ படத்திலேயே நம்பிக்கை தந்த இயக்குனர் ஹெச்.வினோத், அந்த நம்பிக்கையை இதிலும் காப்பாற்றியுள்ளார்.
சுருக்கமாக சொன்னால் அதிரடி போலீஸ் படங்களில் இந்த ‘தீரன்’ வேற லெவல் போலீஸ்.