ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வெற்றிபெறுவது என்பது சவாலான விஷயம் தான். அந்தவகையில் பத்து வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்துடன் மீண்டும் களத்தில் குதித்துள்ளார் இயக்குனர் சுசி கணேசன்.. வெற்றிக்கோட்டை தொட்டாரா இல்லையா..? பார்க்கலாம்.
வெளியே தன்னை நேர்மையாக காட்டிக்கொண்டு உள்ளே சில இல்லீகல் விஷயங்களை செய்கிற சைபர் க்ரைம் போலீஸ் ஆபீசர் தான் பாபிசிம்ஹா. அறிமுகமே இல்லாத பெண்களை தனது பேச்சாலும் நடவடிக்கையாலும் மயக்கி அவர்களை தனது வலையில் விழவைக்கின்ற டெக்னாலஜி கிரிமினல் தான் பிரசன்னா. இப்படிப்பட்ட இரண்டு பேரும் பாபிசிம்ஹாவின் மனைவி அமலாபால் மூலமாக ஒரே நேர்கோட்டில் சந்திக்கிறார்கள். இவர்களில் யார் யாரிடம் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதுதான் இந்தப்படத்தின் கதை.
ஒருவரின் அந்தரங்கம் மூன்றாவது நபருக்கு தெரியவந்தால் அதனால் என்னென்ன விபரீதங்கள் ஏற்படும் என்கிற லைன் மட்டுமே திருட்டுப்பயலே முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்குமான சம்பந்தம். ஆனால் அதை இந்தமுறை கொஞ்சம் அழுத்தமாக லேட்டஸ்ட் டெக்னாலஜி பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசி கணேசன்.
பாபிசிம்ஹா, பிரசன்னா, அமலாபால் மூவரும் போட்டிபோட்டுக்கொண்டு நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். இதில் பாபி சிம்ஹா சராசரி ஆசாபாசமுள்ள மனிதனாகவே காட்டப்படுவதால், அவரது நடிப்பு பெரிய அளவில் ஈர்க்கவில்லை. பிரசன்னா சிக்ஸ்பேக் இளைஞராக மிரட்டுகிறார். பேஸ்புக் ரோமியோக்களின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாக பிரசன்னாவை பார்க்க முடிகிறது.. கணவனிடமும் சைக்கோ வில்லனிடமும் சிக்கிக்கொண்டு தடுமாறும் காட்சிகளில் பளிச்சிடும் அமலாபால் நடிப்பில் இன்னொரு ரவுண்டு வருவதற்கு இந்தப்படத்தில் அடித்தளம் போட்டுள்ளார். அதிகார அரசியல் ஆட்டம் ஆடும் போலீஸ் உயரதிகாரியான வழக்கு எண் முத்துராமன் ‘அட’ என ஆச்சர்யப்படுத்துகிறார்.
படத்திற்கு பெரிய பலம் வித்யாசாகரின் பின்னணி இசை. திருப்புமுனை காட்சிகளில் விறுவிறுப்பை அதிகரித்திருக்கிறார். செல்லத்துரையின் ஒளிப்பதிவு சிறப்பு.. இன்றைக்கு இருக்கின்ற டெக்னாலஜி யுகத்தில் பிரச்சனைகள் எந்த ரூபத்திலும் வர வாய்ப்பு இருக்கிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் சுசிகணேசன்.
குறிப்பாக ஒட்டுக் கேட்பதால் ஏற்படும் விபரீதம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து, அதனால் அவர்கள் என்ன தொல்லைகளுக்கு ஆளாகின்றனர் என்பதை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் சிறப்பு. தொழில்நுட்பம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அலசியிருக்கிறார் இயக்குனர் சுசி கணேசன். குறிப்பிட்ட இடங்களில் வரும் வசனங்களும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதையாக இருந்தாலும் திடீரென வேகம் எடுப்பது அடுத்தகணமே வேகம் குறைவது என படத்தில் ஏற்ற இறக்கம் நிறையவே உள்ளது. அது படத்தின் வேகத்தை குறைத்திருக்கிறது. என்றாலும் திரைக்கதையின் ட்விஸ்ட் மற்றும் சில புதுமையான காட்சிகள் அந்த குறை தெரியாதபடி படத்தை அழகாக நகர்த்தி செல்கின்றன. மொத்தத்தில் இந்தப்படத்தை ஒரு சமூக விழிப்புணர்வு படம் என்று தாரளமாக சொல்லலாம்.