மலைகிராமம் ஒன்றின் தலைவர் நாசர்.. அந்த ஊர் இளைஞர்கள் மகேந்திரன், வினோத்.. வனத்துறை அமைச்சர் போலீசாரையும் வனத்துறை அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு அந்தப்பகுதியை தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்க முடிவு செய்கிறார். அந்த இடம் வனவிலங்குகள் நடமாடும் இடம் என அறிவித்து அந்தப்பகுதி மக்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது..
இதற்கு நாசரும் அந்தப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க அவர்களை அடித்து சித்தரவதை செய்து மாவோயிஸ்ட்டுகள் என போய் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகின்றனர். நீதிமன்றம் அவர்களை விசாரணை காவலில் வைக்க உத்தரவிட, சிறையிலும் சித்தரவதை தொடர்கிறது. அங்கே கைதியாக இருக்கும் போராளியான அஜய்ரத்னம் இவர்களுக்கு போராடும் புதிய யுக்தியை கற்றுக்கொடுக்கிறார்.
அதை தொடர்ந்து தாங்கள் பட்ட கஷ்டங்களை எழுதி வெளியே மகேந்திரனின் காதலி ஐஸ்வர்யா மூலமாக ஊடகங்களுக்கும் அரசு அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்ல முயற்சி எடுக்கின்றனர். ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. அதிகாரிகளின், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க, கலெக்டர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்கிறார் ஐஸ்வர்யா.. அதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது மீதிப்படம்.
இதற்குமுன் சமீபத்தில் இரண்டு மெகா பட்ஜெட் படங்களில் பிரமாண்டமாக சொல்லப்பட்டு, ஆனால் ரசிகர்களை சென்றடையாத கதையையே இதிலும் தேர்வு செய்துள்ளார்கள்.. ஆனால் கொஞ்சம் புதிய பாணியிலான தீர்வு சொல்ல நகர்ந்து, பின் திசை தெரியாமல் தவித்திருக்கிறார்கள்..
மொத்தப்படத்தையும் தாங்கி நிறுத்துபவர்கள் கிராமத்து மூப்பனாக வரும் நாசரும் வாஞ்சிநாதனாக வரும் கைதி அஜய்ரத்னமும் தான். நல்ல ரோல் கொடுத்தால் அதை நடிப்பால் மெருகேற்ற அஜய்ரத்னம் தயாராகவே இருக்கிறார் என்பதை சமீபகாலமாக நிரூபித்து வருகிறார். இளம் நாயகர்களான மகேந்திரனும் வினோத் கிண்ணியும் கேப் பில்லர்களாக பயன்பட்டிருக்கிறார்கள்.. அவ்வளவே..
செம்பருத்தியாக வரும் ஐஸ்வர்யா மட்டும் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார்.. கெட்ட போலீஸ் என்றால் கூப்பிடு சேரன் ராஜை என்கிற மாதிரி அவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறார் மனிதர். கேட்ட போலீசாக நடிப்பதில் விரைவில் நூறாவது படத்தை எட்டிவிடுவார் போல இருக்கிறதே.. அதே வரிசையில் ஜெயிலராக வரும் தீரஜ் ரத்தினமும் (அஜய்ரத்னமும்) இனி இணைந்துவிடுவார் போல தெரிகிறது.
மலைவாழ் மக்களின் பிரச்சனையை அரசின் கவனத்துக்கு கொண்டுபோக அவர்கள் எடுக்கும் முயற்சி, நல்ல கலெக்டர் ஒருவரின் செயல்பாடு என பாசிடிவாக செல்லும் கதையில், அடிக்கடி வரும் பாடல்கள், க்ளைமாக்ஸில் வழக்கம்போல ஆயுதம் தூக்குவதாக காட்டி இருப்பது ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற தீக்குளிப்பு சம்பவம் போல இந்தப்படத்தில் ஏதேச்சையாக ஏற்கனவே படமாக்கப்பட்ட காட்சி நிஜத்தை முகத்தில் அறைந்து சொல்கிறது. கேரளா தமிழக எல்லைப்பகுதி மக்களின் நட்புறவை நல்லவிதமாக (உண்மையாக) காட்டியதற்கு இயக்குனர் பிரதாப் முரளிக்கு ஒரு சபாஷ் போடலாம்.
பிரச்சனையின் தீவிரத்தை இன்னும் கொஞ்சம் தீர்வுகளுடன் சொல்லியிருந்தால் திட்டிவாசலுக்கு வெற்றிவாசல் முழுதாக திறந்திருக்கும்.